சமாதானத்தை(?) தொலைத்துப் போனவர் காலநிலை அவதாரத்தில் மீள்வருகை! பனங்காட்டான்


2003ல் சமாதானத் தூதுவராக இலங்கைக்குள் புகுந்து அதனைத் தொலைத்துவிட்டு, பின்னர் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தில் பணியாற்றி விருப்பம் கலந்த முரண்பாடில் சிக்குப்பட்டு, அடுத்து ஐ.நாவின் காலநிலை நிகழ்ச்சித் திட்டத்தில் பணியாற்றி ஊழல் மோசடியில் அகப்பட்டு பதவி துறந்த எரிக் சொல்கெய்ம், இப்போது காலநிலை ஆலோசகராக உருவெடுத்து ரணிலின் கூட்டுக்குள் இறக்கப்பட்டுள்ளார். இதற்குள் மறைந்திருக்கும் சூத்திரங்கள் ரகசியமானவையல்ல. 

இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக் கதிரையில் ஏறினாலும், எவர் ஆட்சியாளராக மாறினாலும் சில காரியங்கள் மாமூலாக இடம்பெறும். 

அமைச்சர்கள் மாறுவார்கள், அமைச்சுகளின் அதிகாரிகள் இடமாற்றம் பெறுவர், திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் புதிய முகங்கள் நியமனமாவர். 

இதற்கு இணைவாக விசாரணை ஆணைக்குழுக்கள் ஒவ்வொரு நாளும் நியமிக்கப்படும். நள்ளிரவு வேளையில் புதுப்புது வர்த்தமானி அறிவிப்புகள் வெளிவரும். அதிகார மீறல், ஊழல் மோசடி, இலஞ்சக் குற்றம் என்று சிலர் மீது விசாரணை ஆரம்பமாகும். தேர்தல்களை பின்போட வழி தேடப்படும். அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரவும் முயற்சிக்கப்படும். 

பின்னர் சில மாதங்கள் போனால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடிதான்! அரசியல் என்றால் இது சகஜமென்றவாறு அப்பாவி மக்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பர். தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெற்று உயர் கதிரையில் ஏறியவர்களுக்கும், தனியனாக அதே கதிரையில் அமர்த்தப்பட்டிருப்பவருக்குமிடையே எந்த மாற்றமுமின்றி எல்லாம் அப்படியே நடைபெறுகின்றன. 

ஆனால், ராஜபக்சக்களின் இலக்குகளை மாற்றியமைக்கும் சாத்தியத்தைக் கொண்ட 22வது அரசியல் திருத்தம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இருந்தபோது, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன காலைவாரி விட்டதால், அதனைப் பின்போட நேர்ந்தது. தங்களால் ஜனாதிபதியாக்கப்பட்ட ரணிலினால் முன்வைக்கப்பட்ட 22வது திருத்தத்தை எதற்காக பெரமுன எதிர்க்கிறது? இதற்கு இரண்டு விடயங்கள் காரணம். 

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் எந்தவொரு பதவியையும் வகிப்பதை 22வது திருத்தம் தடுக்கிறது. நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களின் பின்னர் எப்போது வேண்டுமானாலும் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இது அதிகாரம் கொடுக்கிறது. 

இரட்டைப் பிரஜாவுரிமை சமாசாரம் நிறைவேறுமானால் அது நேரடியாக முதலில் பசில் ராஜபக்சவை பாதிக்கும். இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் பொதுஜன பெரமுனவின் பல எம்.பிக்கள் ஓய்வூதியம் பெற முடியாது போகும். (ஆகக்குறைந்தது ஐந்து வருடங்கள் எம்.பியாக இருந்தால் மட்டுமே ஒருவர் ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்). அது மட்டுமன்றி உடனடியாக தேர்தல் நடைபெறுமானால் தற்போதைய எம்.பிக்களில் சிலர் வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லை. 

இதனால் நான்கு வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தற்போதைய அரசியலமைப்பு முறையை இவர்களுள் பலரும் விரும்புகின்றனர். ஆனால், அமைச்சர்களாகவுள்ள கட்சிசார் எம்.பிக்கள் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை ஏற்று இதனை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

22ம் திருத்தத்தின் மீதான விவாதம் அறிவிக்கப்பட்டவாறு இவ்வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெறுமானால், ரணிலின் பலம் எந்தளவு என்பது அம்பலமாகும். விசப்பரீட்சையாகவுள்ள இதற்கான வாக்கெடுப்பு ரணிலுக்கான பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. 

நரித்தந்திரத்துக்குப் பெயர் பெற்ற ரணிலைப் பொறுத்தளவில் 22வது திருத்தம் வெற்றி தோல்வி என்பதற்கப்பால், அவரது ரகசிய விருப்பம் ஈடேறும் என்பது நிச்சயம். பொதுஜன பெரமுனவை இதனூடாக பிளவுபடுத்தி அதனூடாக தமது எதிர்காலத்தை தீர்மானிக்க விரும்புகிறார். ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானத்தில் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் எதனை ரணில் எதிர்பார்த்தாரோ அதுவே இங்கும். 

இலங்கை அரசியல் செல்நெறி இவ்வாறிருக்கையில், முன்னாள் நாயகர் ஒருவர் இலங்கை சென்றிருப்பதும், அவர் மேற்கொள்ளும் சந்திப்புகளும் இப்பொழுது பிரதான செய்திகளாக இடம்பிடித்துள்ளது. 

இந்த நாயகர் இலங்கை அரசியற்பரப்பில் நன்கறியப்பட்ட எரிக் சொல்கெய்ம். 2003ல் இலங்கையின் அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசு, விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுசரணையாளராகவிருந்து உலகளாவிய ரீதியில் அறிமுகமானவர் இவர். ஒரு கட்டத்தில் சமாதானத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகக்கூட பார்க்கப்பட்டவர். 2006ம் ஆண்டின் பின்னரே இவரது முகமூடி கழற்றப்பட்டது. தமிழரை இக்கட்டான நிலையில் நிறுத்திவிட்டு காணாமல் போனவர் இவர். இதனால் இவரை இன்றும் தமிழர் தரப்பினர் சிலர் நம்பிக்கைத் துரோகியாகப் பார்க்கின்றனர். 

நோர்வேயில் 1977 முதல் மூன்று பிரதான கட்சிகளின் தலைமைப் பதவியில் இருந்தவர். 1989ல் முதன்முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பல அமைச்சுப் பதவிகளை வகித்துவிட்டு 2000ல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றவர். 

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக் காலத்தில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இதன் வெளிப்பாடாக அவரின் இறுதி அஞ்சலியில் உரையாற்றும்போது, 'அவர் ஒருபோதும் என்னிடம் பொய் சொன்னதில்லை. எப்போதும் உண்மையை அவர் பார்த்தவாறே பேசினார்" (ர்ந நெஎநச டநைன வழ அந. ர்ந யடறயலள ளிழமந வாந வசரவா யள hந ளயற வை) என்று எரிக் சொல்கெய்ம் குறிப்பிட்டது வரலாற்றுக்கான பதிவு. 

ஆனால், எரிக் சொல்கெய்ம் எப்போதும் உண்மையாகவும் ஆத்மசுத்தியாகவும் அன்ரன் பாலசிங்கம் தலைமை தாங்கிய சமாதான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக செயற்படவில்லையென்ற ஆதங்கம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இன்றும் உண்டு. சர்வதேச சமாதான தூதுவர் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட எரிக் சொல்கெய்ம்மின் பிற்காலம், ராஜபக்சக்களின் ஆட்சிக்காலம் போன்று ஊழலிலும் மோசடியிலும் பிரசித்தமானது. 

சீனாவின் சர்ச்சைக்குரிய பட்டுப்பாதை (டீநடவ யனெ சுழயன iகெசயளவசரஉவரசந) உட்கட்டுமான திட்டத்தில் பணியாற்றிய வேளை இவர் விருப்பம் கலந்த முரண்பாடு மற்றும் பக்கசார்பு விவகாரங்களில் சிக்குப்பட்டு அதிலிருந்து வெளியேற நேர்ந்தது இவருக்கான ஆரம்பக் கறை. 

2013ம் ஆண்டில் சர்வதேச பொருளாதார ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், 2016ல் ஐக்கிய நாடுகள் காலநிலை நிகழ்ச்சித் திட்ட நிறைவேற்றுனர் ஆனார். இந்தப் பதவிக்காலத்தில் அளவுக்கு மீறிய பயணங்கள், தங்கிட வசதிகள், பொதுநிர்வாகம் என்பவற்றின் பெயரில் பல லட்சம் டாலர்களை செலவிட்டதாக கணக்குக் காட்டியதன் காரணமாக யப்பான், பெல்ஜியம், டென்மார்க், சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நிதியுதவியை இந்த நிறுவனத்துக்கு வழங்குவதிலிருந்து நிறுத்தின. இறுதியாக 2018ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க இப்பதவியிலிருந்து எரிக் சொல்கெய்ம் ராஜினாமா செய்தார். (இதனைச் செய்ய தவறியிருப்பின் பதவி நீக்கப்பட்டிருப்பார்). 

இந்தப் பின்புலத்தைக் கொண்ட எரிக் சொல்கெய்ம் எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வதேச காலநிலை விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டாரென்பது பெரும் கேள்வியாகியுள்ளது. ஏற்கனவே தமது மைத்துனரும் (மாமனின் மகன்) முன்னாள் எம்.பியுமான றுவான் விஜேவர்த்தனவை காலநிலை மூத்த ஆலோசகராக நியமித்த ரணிலுக்கு இப்போது எரிக் சொல்கெய்மும் தேவைப்பட்டதன் நோக்கம் என்ன? 

உலக வல்லரசுக்கு இரண்டு முகங்கள் உண்டென்பது சர்வதேச நாடுகளின் கருத்து. இதில் மென்முகம் நோர்வே. அந்த மென்முகத்தின் பிரதிநிதியான எரிக் சொல்கெய்ம் எஜமானின் நம்பிக்கைக்குரிய சுவீகாரப் புத்திரன். இதனூடாக மறைந்திருக்கும் பல சூத்திரங்களை அறிந்து கொள்ளலாம். 

No comments