19 மாணவர்களுக்கு கற்றல் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகடி வதைக்குட்படுத்தியதாக சிரேஸ்ட மாணவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அதன் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும், விஞ்ஞான பீடத்தைத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலத்தினுள் குறித்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள்ளும் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவராயின் விடுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments