இணைஅனுசரணை, காலநீடிப்பு, மறுதலிப்பு, தட்டிக்கழிப்பு! பனங்காட்டான்


ஜெனிவாவில் நான்கு வகை அரசியல் நாடகத்தை இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தீர்மானங்கள் வரும்போது தவிர்க்க முடியாத நிலையில் இணைஅனுசரணை வழங்கும். செயற்படுத்த விரும்பாத நிலையில் தாமதப்படுத்த காலஅவகாசம் பெறும். அடுத்து அனைத்தையும் கண்களை மூடிக்கொண்டு மறுதலிக்கும். இறுதியில் எல்லாவற்றையும் தட்டிக் கழித்துவிட்டு இறையாண்மை, உள்நாட்டுப் பொறிமுறை, அரசியல் அமைப்புக்கு விரோதம் என்று காரணங்களைக் கூறி தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும். 

கடந்த வாரப் பத்தியில் விட்டுச்சென்ற சில விடயங்களை தொட்டுச் செல்வதே பொருத்தமாகக் காணப்படுகிறது. பிரித்தானிய அரசியின் இறுதி நிகழ்வு, தியாக திலீபனின் நினைவேந்தல், ஜெனிவா தீர்மானம் என்பவையாக இவை அமைகின்றன. 

விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராகவிருந்து, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உயிர்கொடை செய்த திலீபனின் தியாக மரணத்தை அரசியல்படுத்தக் கூடாதென்று எழுந்த வாதம், இப்போது நினைவேந்தலுக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 

திலீபனின் நினைவிடம் யாழ்ப்பாணம் மாநகரசபையின் நிலப்பரப்பாக உள்ளதால், இதற்கான ஒரு முடிவை எடுக்கும் அதிகாரத்தை அதற்குக் கொடுத்துள்ளது. அரசியல் கலப்பற்றதாக கூட்டமைப்பை உருவாக்குவது நல்லதா அல்லதா என்ற பட்டிமன்றத்துக்கு அப்பால், பல நெருக்குவாரங்களுக்கு மத்தியில் கடந்த காலங்களில் எந்தக் கட்டமைப்பும் இல்லாமல் சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்து நினைவேந்தல் பல்வேறு வழிகளில் எவ்வாறு நடந்தது என்பது நினைத்துப் பார்க்க வேண்டியது. 

யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளராக திரு.சி.வி.கே.சிவஞானம் பணியாற்றிய வேளையில், அரசாங்கத்தின் சிவப்பு நாடாவை வெட்டியெறிந்து அவர் துணிச்சலாக மேற்கொண்ட நடவடிக்கையாலேயே திலீபனின் நினைவேந்தல் இடம் அமைக்கப்பட்டது. இதன் முழுமையான வரலாறு தெரிந்த ஒருவர் இன்று அவர் மட்டுமே. நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் முக்கியமாக அவர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இடம்பெறவில்லை. இதற்கும் காலந்தான் நின்று பதில் சொல்ல வேண்டும். 

பிரித்தானிய அரசி எலிசபெத் காலமானதையடுத்து, எழுபது ஆண்டுகளின் பின்னர் மன்னர் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழுள்ன நாடுகளுக்கு சார்ள்ஸ் அரசராகியுள்ளார். அந்த நாடுகளை முடியாட்சியின் கீழ் அவர் தக்க வைத்துக் கொள்வாரா என்பது கேள்விக்குரியது. 

பார்படோஸ், ஜமெய்கா, கனடா ஆகிய நாடுகளில் முடியாட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அகால மரணமடைந்த இளவரசி டயானாவின் ஆவி அரண்மனையை சுற்றி வருவதாகவும் சில விமர்சனங்கள் மறைபொருளில் வருகின்றன. 

இவ்வாறான மாறிவரும் பூகோள அரசியல்வேளையில், எலிசபெத் அரசியின் இறுதிச் சடங்கில் பங்குபற்றிவிட்டு நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கியமான இரண்டு கருத்துகளை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழரின் இனப்பிரச்சனை, சிங்களவரின் வழிபாட்டு உரிமை தொடர்பானவையாக இவை இருப்பதாலும், ஜெனிவா தீர்மானக் காலமென்பதாலும் இக்கருத்துகள் அதீத கவனத்தைப் பெறுகிறன. 

'எலிசபெத் அரசியின் ஆட்சிக் காலத்தில் உருவான இனப்பிரச்சனை இன்னமும் தீர்வு காணப்படாமலேயே உள்ளது..... 1815ம் ஆண்டின் கண்டிப் பிரகடனத்துக்கமைய பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்" என்ற கருத்துகளை நாடாளுமன்றத்தில் அரசியின் மரணத்துக்கான இரங்கல் உரையின்போது ரணில் தெரிவித்தார். 

எலிசபெத் அரசியின் ஆட்சிக்காலம் என்று ரணில் குறிப்பிட்டது, 1972ல் இலங்கை குடியரசாகியதற்கு முன்னையதை. இதனூடாக அவர் என்ன சொல்ல முனைகிறார்? பிரித்தானியர் இலங்;கைக்கு சுதந்திரம் கொடுத்த காலத்துக்கு முன்னரும் இனப்பிரச்சனை இருந்து வந்தது என்பது முதலாவது. பௌத்த மதத்தை இலங்கையின் அரசியல் அமைப்பில் முதன்மை மதமாக அமல்படுத்துவதை பிரித்தானிய முடியாட்சி ஏற்றுக் கொண்டது என்பது இரண்டாவது. 

ரணில் எதனை நினைத்து இவ்வாறு சொன்னாரோ தெரியாது. ஆனால் இந்தக் கருத்துகளைத்தான் பாதிக்கப்பட்ட தமிழினம் காலாதிகாலமாக சொல்லி, அவற்றுக்கு தீர்வுகாண போராடுகிறது. பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்த காலத்தில் தமிழர் ராஜ்ஜியம் என்பது தனித்துவமாக இருந்தது. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தன. தமிழர் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது மறுக்கப்படாததாக இருந்தது. 

பிரித்தானியர் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை சிங்களவர்களிடம் கையளித்ததால் ஏற்பட்ட சவால்களையும், பிரச்சனைகளையும் தமிழர் எவ்வாறு முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை கடந்த எழுபது ஆண்டுகால வரலாறு கூறி நிற்கிறது. 

இந்தச் சோக வரலாற்றை மறவாதிருப்பதனால்தான் எலிசபெத் அரசியின் மறைவுக்கு இதுவரை எந்தவொரு தமிழ் தேசிய கட்சியும் அதிகாரபூர்வ அனுதாபம் தெரிவிக்காதிருக்கிறது என்பதை இலங்கை ஜனாதிபதியும் பிரித்தானியாவின் புதிய அரசரும் புரிந்து கொள்ள வேண்டும். 

எலிசபெத் அரசியின் ஆட்சியில் உருவான இனப்பிரச்சனை மட்டுமன்றி, சிங்கள தலைவர்களின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள், தமிழினப் படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி விசாரணை என்ற அனைத்தும் தீர்க்கப்படாது தொடர்கின்றன. இதனை ரணில் ஏற்றுக் கொண்டுள்ளாரென்பதை அவரது உரையின் ஊடாக அறிய முடிகிறது. 

இதற்கான தீர்ப்பின் மறுப்புக்; காரணமாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கை மீதான தீர்மானத்தை ஜெனிவாவின் அங்கத்துவ நாடுகள் வாக்கெடுப்புகளால் நிறைவேற்றி வருகின்றன. ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சிக் காலத்தில் ஜெனிவா தீர்மானத்துக்கு வழங்கிய இணைஅனுசரணையை, ஜனாதிபதியான பின்னர் மறுதலிக்கிறார். ஆட்சி மாற்றங்களின்போது இவ்வாறான மாற்றங்கள் இடம்பெறுவது வழமை என்கிறார் அவரது நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. 

ஜெனிவாவின் தற்போதைய 51வது அமர்வில் பிரித்தானிய தலைமையில் ஏழு நாடுகள் இணைந்த புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகிறது. இது தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றாத நீர்த்துப்போன ஒன்று என தமிழ்த் தலைமைகள் குரலெழுப்பி வருகின்றன. இது நியாயமான குரல். 

இதற்கு வலுவூட்டக்கூடியதாக சமகாலத்தில், இலங்கையில் இடம்பெற்றது. இனப்படுகொலை என்று வலியறுத்தியுள்ள பிரித்தானிய நாடாளுமன்றின் இரண்டு பிரதிநிதிகள், இலங்கை அரசு உறுதி வழங்கிய உள்நாட்டுப் பொறிமுறைகள் முற்றாகவே தோல்வி அடைந்துள்ளதென்று குற்றஞ்சாட்டி அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலவெர்லி அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். 

போர்க்குற்றம் புரிந்தவர்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்றும் தமிழினப் படுகொலை நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரிக்க வேண்டுமென்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரியுள்ளனர். 

இதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் 77வது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, நல்லெண்ணத்துக்காக இலங்கை அரசு பாடுபடுவதாகக் கூறி அங்கிருந்தவர்களின் காதில் பூ சூடியுள்ளார். இந்தப் பொய்யுரையை பிய்த்தெறியும் வகையில் தமிழர் பூர்வீக நிலத்திலுள்ள குருந்தூர்மலையிலும், வெடுக்குநாறியிலும், திருகோணமலையிலும் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் பௌத்த ஊடுருவல் வீச்சுக் கொண்டிருப்பதை இலங்கை நாடாளுமன்றில் தமிழர் பிரதிநிதிகள் ஆதாரங்களோடு வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். 

மதவெறுப்பு விடயத்தில் பூச்சியத்தன்மையை இலங்கை அரசு பின்பற்றுவதாக அமைச்சர் அலி சப்றி கூறியிருப்பது அப்பட்டமான பொய். முழுப்பூசணிக்காயை வெறும் இலையில் மறைக்கும் முயற்சி. 

ஜெனிவாவில் நான்கு வகை அரசியல் நாடகத்தை இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தீர்மானங்கள் வரும்போது தவிர்க்க முடியாத நிலையில் இணைஅனுசரணை வழங்கும். செயற்படுத்த விரும்பாத நிலையில் தாமதப்படுத்த காலஅவகாசம் பெறும். அடுத்து அனைத்தையும் கண்களை மூடிக்கொண்டு மறுதலிக்கும். இறுதியில் எல்லாவற்றையும் தட்டிக் கழித்துவிட்டு இறையாண்மை, உள்நாட்டுப் பொறிமுறை, அரசியல் அமைப்புக்கு விரோதம் என்று காரணங்களைக் கூறி தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும். No comments