எரிமலை வெடிப்பால் பசிபிக் கடலில் புதிதாக வந்தது தீவு
ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது.
மத்திய டோங்கா தீவுகளில் அமைந்துள்ள இந்த எரிமலை, நீராவி மற்றும் சாம்பல் ஆகியவற்றைக் கக்கத் தொடங்கியது, அவை கடலில் கலந்து நீரின் நிறத்தை மாற்றிவிட்டன.
இந்த எரிமலை வெடித்த பதினொரு மணி நேரத்திற்குப் பிறகு, பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் இருந்து வெளிப்பட்டது என்று நாசா புவி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் இத்தீவின் படங்களை படம்பிடித்துள்ளது.
செப்டம்பர் 14 அன்று இத்தீவின் பரப்பளவு 4,000 சதுர மீட்டர் (1 ஏக்கர்) மற்றும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் (33 அடி) உயரத்தில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் செப்டம்பர் 20க்குள், இந்த தீவு 24,000 சதுர மீட்டர் (6 ஏக்கர்) பரப்பளவாக பெருகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நீருக்கடியில் அமைந்துள்ள நீர்மூழ்கி எரிமலைகள் வெடித்து சிதறும் போது உருவாக்கப்பட்ட தீவுகள் போன்ற அமைப்பு பெரும்பாலும் குறுகிய காலமே நீடித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
1995 இல், கடலில் அமைந்துள்ள லேடிகி என்ற எரிமலை வெடிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு தீவு 25 ஆண்டுகளாக அழியாமல் இருந்தது. லேடிகி எரிமலை வெடிப்பால் 2020 இல் உருவாக்கப்பட்ட ஒரு தீவு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீரில் அழிந்துபோனது.
மத்திய டோங்காவில் உள்ள இரண்டு தீவுகள் 'வவாயு மற்றும் ஹாபாயில்' வசிப்பவர்கள் அச்சம் கொள்ளவேண்டாம். அவர்களுக்கு எரிமலை வெடிப்பால் பாதிப்பில்லை என்று டோங்கா புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment