அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்


இலட்சியத்தினை நோக்கி பெரும் மனோபலத்தோடு தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில்( நெதர்லாந்து) இருந்து ஆரம்பமானது. 

தமிழீழ மண்ணில் சிறிலங்காப் பேரினவாத அரசு நடத்திக்கொண்டிருக்கும் தமிழினவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ விடுதலையினையே உறுதியான தீர்வு… எனவும் கோரிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் எங்கும் அறவழிப்போராட்டமூடாக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டபடியே இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழினப் படுகொலைகள், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் ,தமிழினவழிப்பு மற்றும் போர்குற்றம் , சர்வதேச சட்டவிதிமீறல் …  போன்றவைகளுக்கு கடந்த 2021 மாசி மாதம் ஐ.நா வின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஆணையாளர் மதிப்பிற்குரிய மிச்சேல் பச்லேட்  அம்மையார்  அனைத்துலக குமூகத்திடம் பரிந்துரைத்திருந்தார் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிறிலங்காப் பேரினவாத அரசினை பாரப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என. எனவே தமிழர்கள் நாங்கள் வாழும் நாடுகள் எமது வேணவாக்களினை ஏற்றுக்கொண்டு நீதி விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் . அதன் அடிப்படையிலே எவ்விடர் வரினும்  ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னரும் 2009ம் ஆண்டில் இருந்து 25 வது தடவையாக மனித நேய ஈருருளிப்பயண  அறவழிப்போராட்டம் ஐரோப்பிய நாடெங்கும் பல இன்னல்கள் மத்தியிலும் அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு பலாயிரம் தொலைவு கடந்து இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

இன்று 02/08/2022 நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பெரும் எழுச்சியோடும் மனவுறுதியோடும் ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது. கைகளிலே தமிழின அழிப்பின் சான்றுகள் பதாகைகளாக பிடித்திருக்க அகவணக்கத்தோடு ஆரம்பாகி அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் நெதர்லாந்து வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடமும்  மனு  ஒப்படைக்கப்பட்டது.  

மேலும் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் மனித நேய ஈருருளிப்பயணம் ஊடறுக்கும் முக்கிய அரசியல் மையங்களின் முன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அவையாவன :

* 05.09.2022 திங்கட் கிழமை Belgium, Brussels ல் அமைந்துள்ள  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் முன்றலில்   பி.ப 13.30 மணிக்கும்

* 12.09.2022 திங்கட் கிழமை அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு இறுதியாக

* 19.09.2022 திங்கட் கிழமை  Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்)

அனைத்து தமிழ் உறவுகளும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள் என்பதனை உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments