வடக்கு ஆளுநருக்கு எதிராக போராட்டம்!வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு செய்தி வழங்கியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களினால் நாளைய தினம் (10.08.2022) அடையாள கவனயீர்ப்பு சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் மிக நீண்ட காலமாக மாகாண விவசாய பணிப்பாளர் பதவியை வகிப்பதாக கூறி அண்மையில் அவரது பதவி ஆளுநரால் பறிக்கப்பட்டிருந்தது குறித்த பதவி நிலையை ஒத்ததாகவே வடக்கு மாகாணத்தின் நீர்ப்பாசனத் திணைக்களம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் பிரதிப் பிரம செயலாளர் என  துறைசார் திணைக்களத் தலைவர்கள் பலர் அதிக காலம் துறைசார் பதவிகளில் பதவி வாகித்துவருகின்றமை சுட்டிக் காட்டப்பட்டுள்தோடு ஆளுநர் தகுதி நிலையில் இல்லாத பெண் உத்தியோகத்தர் ஒருவரை பணிப்பாளர் பதவிக்கு கொண்டு வரும் திரை மறைவு சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஆளுநர் திட்டமிட்டு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகங்களையும் தோற்று வித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,


பலத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாகாணத்துக்கு வழியே அனுப்பப்பட்ட பெண் பெண் அதிகாரி ஒருவரை தகுதி நிலை வரையறைகளை மீறி மாகாண பணிப்பாளராக கொண்டுவரும் முயற்சியை கடந்த மூன்று மாதங்களாக ஆளுநர் திரை மறைவில் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் அது தொடர்பில் மாகாண விவசாய பணிப்பாளர் பொதுச் சேவை ஆன குழுவின் செயலாளர் மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான அழுத்தங்களினையும் பிரயோகித்து வந்திருந்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக 08.08.2022 ஆம் திகதி பத்திரிகைகள் மற்றும் இணையத்தள ஈ பத்திரிகையில் மாகாண விவசாயத் திணைக்களம் சார்பாகவும் மாகாண விவசாயப் பணிப்பாளர் தொடர்பாக தங்களால் வெளியிடப்பட்ட செய்தியில் மாகாண விவசாயத் திணைக்களத்தின் மீதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மீதும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.


வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் ஆளணி முகாமைத்துவ சேவைத்  திணைக்களத்திளால் அனுமதிக்கப்பட்ட ஆளணியில் உயர்பதவியான மாகாண பணிப்பாளர் பதவியானது இலங்கை விவசாய சேவையின் தரம் 1 இற்கு உரித்துடையது என்பதுடன் அதற்கு உயர்வான இலங்கை விவசாய சேவையின் விசேட தரத்தில் ஆளணிகள் எவையும் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாகவே இவருக்கான பதவியுயர்வானது வழங்கப்படவில்லை என்பது எமது அறிவுக்கு எட்டியவரை உண்மையாகும்.


வடக்கு மாகாணத்தில் இலங்கை விவசாய சேவையின் விசேட தரத்திற்கான ஆளணி உருவாக்கல் எவையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.மேலும் நாமறிந்த வரையில் எமது விவசாயப் பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு அவரால் நிராகரிக்கப்பட்டோ அல்லது பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையோ காணப்படவில்லை.

இந்நிலையில் அவருக்குரிய பதவியானது மீளப்பெறப்பட்டதானது அரச உத்தியோகத்தர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி அவமதிப்பதாகவே அரச உத்தியோகத்தர்களான நாம் மிகவும் மனவேதனை அடைகின்றோம்.


மேலும் தங்களால் வழங்கப்பட்ட குறித்த செய்தியில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் பல ஆண்டுகாலமாக இப்பதவியில் உள்ளதாகவும், வேறு மாகாணங்களில் குறித்த நடைமுறை அவதானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இருப்பினும் ஏனைய மாகாணங்களின் விவசாயத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்களாக நீண்ட காலமாக இருந்தமையும்,இருக்கின்றமையும் பலரும் அறிந்த விடயமே.


எமது மாகாணத்திற்கு மட்டும் இந்நடைமுறை பின்பற்றுவதும், எமது மாகாண பணிப்பாளருக்குரிய இடமாற்றமோ பதவியுயர்வோ வழங்கப்படாததும் அவரின் குற்றமன்று என நாம் கருதுகின்றோம். குறித்த உத்தியோகத்தருக்கு உரித்தான பதவியுயர்வையோ பதவிக்கான நியமனத்தையோ வழங்காது பதவி மீளப்பெறலானது அநீதியான செயற்பாடு என நாம் கருதுகின்றோம்.

மேலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய திணைக்களங்களிலும் துறைசார் திணைக்களத்தலைவர்கள் அதிக காலம் துறைசார் பதவிகளில் பதவி வகிப்பதனையும் நாமறிந்துள்ளோம்.

எனவே எமது மாகாண விவசாயப் பணிப்பாளருக்கு ஏற்பட்ட அபகீர்த்தியினை துடைத்து அவரால் வழங்கப்பட்ட அர்ப்பணிப்பான மற்றும் புனிதமான சேவையினை மதித்து அவருக்குரிய, நீதியை வழங்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

இதற்கு அடையாளமாக எம்மால் எமது வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் சார்பாக 10.08.20022 ஆம் திகதி கவனயீர்ப்பு சுகவீன விடுமுறையினை மேற்கொள்ளகின்றோம் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம். - என்றுள்ளது.

No comments