சர்வகட்சி அரசு : பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள்!

 


தமிழ் ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதி விசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற  அரசியல் தலைமைகள் நல்லாட்சி என கடந்த காலங்களில் பாதுகாத்தார்கள். தற்போது சர்வகட்சி அரசு என பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள் என தெரிவித்துள்ளது யாழ்.ஊடக அமையம்.  

யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சன் ஆயுதாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை 15 ஆவது ஆண்டு நினைவுநாள் ஆகும். 

ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 2007ம் ஆண்டின் இதேநாளன்று அதிகாலை 5 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவரது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய ஊடக அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறு கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

பின்னராகவும் யாழ்ப்பாணத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்திக்கையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க போதிய விசாரணையாளர்களில்லாதிருப்பதாக விளக்கமளித்துமிருந்தார்.

எனினும் இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் அடையாளத்திற்கேனும் ஒரு தமிழ் ஊடகவியலாளரது படுகொலை தொடர்பிலும் எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

ஒரு ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதி விசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற  அரசியல் தலைமைகள் நல்லாட்சி என பாதுகாத்தார்கள். தற்போது சர்வகட்சி அரசு என பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள்.  

அந்த அரசிடம்தான் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதி விசாரைணையையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். எனவும் யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.


No comments