டலஸ் - சஜித் கூட்டுத்தோல்வி ''கோ ஹோம்'' பட்டியலுக்குள் ஜி.எல்.பீரிசையும் சுமந்திரனையும் விரைந்து இழுத்துச் செல்கிறது! பனங்காட்டான்


ரணிலின் வெற்றி என்பது டலஸ்-சஜித் கூட்டின் தோல்வி என்பதைவிட, பெரமுனவின் ஜி.எல்.பீரிசுக்கும், கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் கிடைத்த பெரும் தோல்வி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களின் முகத்தில் அழிக்க முடியாத கரியைப் பூசியுள்ளனர். தங்களை ஷகிங் மேக்கர்|கள் என நினைத்த இவர்கள் இருவரும் அடுத்த தேர்தலுக்கு முன்னரேயே அவர்களின் மக்களால் ஷகோ ஹோம்| பட்டியலுக்குள் இணைக்கப்படுவார்களானால் ஆச்சரியப்பட நேராது.

அதிர்ஸ்டம் வருமென்றால் அது கூரையைப் பிய்த்துக் கொண்டும் வருமென்பர். இதுதான் இப்போது இலங்கை அரசியலில் நடந்துள்ளது. 

ராசியில்லாத ராஜாவாக இதுவரை இருந்தவர், கடந்த பொதுத் தேர்தலில் யாவையும் இழந்து பூச்சியத்தின் மன்னனாக மாண்பேற்றப்பட்டவர், நாற்பத்தைந்து வருட கால அரசியல் அனுபவத்தை ஓர் இரவோடு புதைத்தவர் - இப்போது அந்தத் தீவின் எட்டாவது ஜனாதிபதியாகியுள்ளார். அகில உலக வரலாற்றில் புதுமையான புதினமாக இது பதியப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத பெருமையை பெற்றுள்ளார் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் வாரிசான ரணில் விக்கிரமசிங்க.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மாதத்தில் கோதபாய அணிக்கு எதிரான போராட்டம், ராஜபக்ச சகோதரர்களையும் அவர்களின் புதல்வர்களையும் அரச உயர் பதவிகளிலிருந்து படிப்படியாக அகற்றி, இறுதியில் கறுப்பு யூலை நினைவேந்தலான இந்த மாதத்தில் கோதாவையும் நாட்டைவிட்டு ஓடச் செய்தது. 

ராஜபக்சக்களுக்கு எதிரான அவர்களது மக்களின் எழுச்சி, புரட்சிகரமான ஒரு முடிவை அரசியல் சதுரங்கத்தில் ஏற்படுத்தியமைக்கு, போராட்டக்காரர்களின் இலக்கின்மையே காரணமென்று கூறலாம். 

கோதா கோ ஹோம் கோசத்துடன் இதனை ஆரம்பித்தவர்கள், தங்கள் போராட்டம் சிலவேளை வெற்றி பெறாது என்று எண்ணியிருக்கலாம் அல்லது இவ்வளவு விரைவாக ராஜபக்சக்கள் ஓடுவார்கள் என்றும் நினைக்காதிருந்திருக்கலாம். அதனால்தான், அதன் பின்னர் என்ன செய்வது என்று திட்டமிடாது போனதற்குக் காரணமாகவும் அமைந்திருக்கலாம். எந்த ஒரு செயற்பாட்டுக்கும் திட்டமிடலும் திட்டச்செயற்படுத்தலும் கரங்கோர்த்திருக்க வேண்டும். ஆனால் காலிமுகத் திடல் அதில் தவறி விட்டது. 

முன்னர் ராணி மாளிகை என அழைக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தபோது அங்கிருந்த கோதாவும் மனைவியும் (பசிலும் இருந்ததாக இப்போது கூறப்படுகிறது) பின்கதவால் பாய்ந்து கடற்படைக் கப்பலில் தப்பிச் செல்ல நேர்ந்தது. 

மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் என்ன செய்தனர்? நீச்சல் தடாகத்தில் குளித்தனர். படிக்கட்டுகளில் துள்ளி விளையாடினர். சோபாக்களில் அமர்ந்து மகிழ்ந்தனர். பஞ்சணையில் உருண்டு புரண்டனர். சமையலறைக்குள் இருந்த உணவுப் பொருட்களை உண்டு களித்தனர். கழிவறை, உடைமாற்று அறை என்று ஒவ்வொரு அறையாகப் புகுந்து செல்பி எடுத்துப்  பதிவிட்டனர். 

நாட்டை மீட்க, மக்களுக்கு நிவாரணம் வழங்க, ஊழலையும் மோசடிகளையும் களையவென ஆட்சித் தலைமைகளை துரத்தப் புறப்பட்டவர்கள் - ஜனாதிபதி மாளிகையில் தங்கள் சின்னத்தனங்களால் போராட்டத்தின் உயர் நோக்கத்தினை சிதறடித்தனர் என்பது மறைக்கத் தேவையில்லாத உண்மை. இதன் விளைவே இப்போதைய அரசியல் மாற்றங்கள்.

கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்டவாறு, ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த கொக்குப் போன்ற ரணிலின் நாடகம் இங்கிருந்துதான் ஆரம்பமானது. அதற்கு உகந்ததாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமராகவிருந்த அவருக்கு கை மாறியது. 

பெயரளவில் பதில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டு அழைக்கப்பட்டபோதும், ரணில் பிரதமர் ஆசனத்திலேயே (நாடாளுமன்றத்திலும்) அமர்ந்திருந்தார். ஜனாதிபதி ஆசனத்துக்கான தனது நகர்வை அவர் இலகுவாக மேற்கொள்ள இந்த மென்போக்கு அவருக்கு லாவகமாக கை கொடுத்தது.

இலங்கையில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதி நாட்டைவிட்டு பல நாடுகள் ஊடாக தப்பி ஓடி, எங்கிருந்தோ பதவி துறக்க - கடந்த பொதுத்தேர்தலில் யானையையும் சரிய விட்டு கையறு நிலையில் நின்ற ரணில் அந்த இடத்துக்கு நிரப்பப்பட்டதே தனித்துவமான ஒரு வரலாறு. 

ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் முழுமையாகத் தோற்றபோதும் அந்தக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலூடாக ஓர் இடம் கிடைத்தது. அதன் வழியாக நாடாளுமன்றம் செல்ல பத்து மாதங்களாக ரணில் மறுத்து வந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அன்றைய பிரதமர் மகிந்த கேட்டுக் கொண்டபோதும்கூட ரணில் இணக்கம் காட்டவில்லை.

ஆனால், பத்து மாதங்களின் பின்னர் 2021 யூன் 23ல் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் புகுந்த ரணில் ஒரு வருடத்தின் பின்னர் இப்போது பிரதமராகி, ஜனாதிபதியும் ஆகிவிட்டார் என்பது பலரும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் பாடம். 

போராட்டம் வீச்சுப்பெற்றவேளை மகிந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்த இடத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை நியமிக்க கோதா விரும்பினார். ஆனால் சஜித், ஜனாதிபதி கதிரையில் கண் வைத்து பிரதமர் பதவியை நிராகரித்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்று பிரதமர் பதவி ரணில் வசமானது.

கோதாவின் பதவி விலகலையடுத்து புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ரணில், டலஸ் அழகப்பெரும, அநுர குமார திசநாயக்க ஆகிய மூவரும் களத்தில் இறங்கினர். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாச தமது தோல்வியை முற்கூட்டியே அறிந்து நழுவிக் கொண்டார். அதேசமயம் பொதுஜன பெரமுன உறுப்பினரான டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை திடுதிப்பென அறிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணிலை, பொதுஜன பெரமுனவின் தினேஸ் குணவர்த்தன முன்மொழிய சஜித்தின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த மனுச நாணயக்கார வழிமொழிந்தார். பொதுஜன பெரமுனவின் டலஸை சஜித் பிரேமதாச முன்மொழிய பெரமுனவின் அக்கிராசனரான ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார். ஜே.வி.பியை சேர்ந்த அநுர குமாரவை அவரது கட்சியினரே முன்மொழிந்து வழிமொழிந்தனர். 

பொதுஜன பெரமுனவைச் சேராத, அதற்கு எதிரான கட்சிகளின் தலைவர்களான ரணிலும், சஜித்தும் பொதுஜன பெரமுனவின் வாக்குகளை நம்பி போட்டியில் குதித்தது இலங்கை அரசியலில் விசித்திரமான ஒன்று. இதன் பின்னணியை இங்கு பார்க்க வேண்டியது அவசியம். 

ஓர் எதிரியை வீழ்த்த, அவரின் இரண்டு எதிரிகள் ஒன்றிணைந்ததே இந்தத் தேர்தலை உற்று நோக்க வைத்தது. அரசியல் ரீதியாக ரணிலின் முதலாவது பரம்பரை எதிரி சஜித். இது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் ரணசிங்க பிரேமதாசவுக்கும் இடையில் 1970களில் ஆரம்பமானது. தமது தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தலைவராக இருந்துவிட்டு அதனை உடைத்துக் கொண்டு வெளியேறிய சஜித் புதிய கட்சியை உருவாக்கி பொதுத்தேர்தலை சந்தித்தபோதே ரணில்-சஜித் பிளவு நிலையானது. கடந்த தேர்தலில் ரணிலை அகௌரவப்படுத்திய தேர்தல் முடிவுக்கும் சஜித்தே காரணமாக அமைந்ததால் அவரைத் தமது பரம எதிரியாகவே ரணில் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் எச்சந்தர்ப்பத்திலும் சஜித் எந்த உயர் பதவிக்கும் வரக்கூடாதென்பதில் கூர்மையாக இயங்கிவரும் ரணில், அதற்காக அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொன்னது போன்று தேவைப்பட்டால் எந்தப் பேயுடனும் பிசாசுடனும் சேர்வதற்கு தயங்காதிருந்தார். 

மறுபுறத்தில், நாற்பதுக்கும் அதிகமான எம்.பிக்களுடன் உள்ள மக்கள் சக்திக் கட்சியின் தலைவரான சஜித் எவ்வகையிலும் அரசியலில் உயர்ச்சி பெறக்கூடாதென்பதில் பொதுஜன பெரமுன மிகக் கவனமாக உள்ளது. ஆகக்குறைந்தது சஜித் பிரதமர் பதவியைப் பெற்றால்கூட இனி வரப்போகின்ற அனைத்துத் தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவுக்கு அது பெரும் சவாலாக இருக்குமென்பதில் ராஜபக்சக்கள் (குறிப்பாக மகிந்த - பசில்) மிகவும் விழிப்பாக இருந்து வருகின்றனர். 

சஜித்தை மேலெழும்ப விடக்கூடாது என்பதைவிட அவரை முழுமையாக வீழ்த்த வேண்டுமென்றால் - தங்களுக்கெதிரான மக்கள் எழுச்சிக் காலத்தில் ரணிலை முன்னிலைப்படுத்தி அரசாட்சியை சீர் செய்வதே சரியான நிலைப்பாடு என்பது பொதுஜன பெரமுனவின் சிந்தனை. இது ரணிலுக்கும் தெரியும். இவர்கள் இருவருமே தங்கள் பொது எதிரியை (சஜித்) வீழ்த்துவதற்கு ஜனாதிபதித் தேர்தலை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். 

இதனை முதலாம் கட்டமென எடுத்துக் கொண்டால் அதில் பொதுஜன பெரமுன வெற்றி கண்டுள்ளது. அதேசமயம் பொதுஜன பெரமுனவின் அக்கிராசனரான ஜி.எல்.பீரிஸ் தமது கட்சியை மிகவும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார். ரணிலை அடியோடு விரும்பாத ஜி.எல்.பீரிஸ் தருணம் பார்த்து டலஸை ஆதரித்ததோடு சஜித்தின் ஆதரவையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தார்(?). 

மகாபாரதத்தில் சகுனி பாத்திரம் ஏற்ற பீரிஸ் தமது கட்சியின் எதிர்காலத்தைவிட தமது எதிர்காலத்திலேயே அக்கறையாக இருந்தார். ரணில் ஜனாதிபதியானால் தமது அரசியலுக்கு அதுவே அந்திம காலமாக அமையுமென்பதை நன்கு அறிந்திருந்தார். தோல்விக்குப் பயந்த சஜித்தை வளைத்துப் போட்டு, டலஸ் ஜனாதிபதியானால் பிரதமர் பதவியை கையூட்டாகத் தருவதாகக் கூறி - பாவம் சஜித்தையும் டலஸோடு சேர்த்து குப்புற வீழ்த்தியுள்ளார் பீரிஸ். 

சஜித் அணியைச் சேர்ந்த பதினான்கு எம்.பிக்களும், கூட்டமைப்பின் பத்தில் ஐந்து எம்.பிக்களும் ரணிலுக்கே வாக்களித்ததாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார். இதனை மறுக்கப் போனால் தங்கள் கட்சிகள் சின்னாபின்னமாகி விடும் என்ற அச்சத்தில் இவற்றின் தலைமைகள் மௌனம் சாதிக்கின்றன. ஹரின் பெர்னாண்டோ கூறுவதை நிரூபிக்கும் வகையில் ரணிலுக்கு 134 வாக்குகள் கிடைக்க, டலசுக்கு 82 வாக்குகள் கிடைத்தன.

ஜி.எல்.பீரிசுக்கு இணைவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் முகத்தில் கரி பூசப்பட்ட மற்றவர் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் (சுமா). நல்லாட்சிக் காலத்தில் ரணில்தாசராக நன்கறியப்பட்ட சுமா, சும்மா இருக்க முடியாமல், கூட்டமைப்பின் தலைவர் தாமே என்ற பாணியில் முதலில் சஜித்தாசராகி, பின்னர் டலஸ்தாசராகி கூட்டமைப்பை தனது சகதிக்குள் இழுத்து வீழ்த்தி, கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் அருவருப்பை ஏற்படுத்தி - இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென புதுக்கோசம் எழுப்புகிறார்.

தமது இந்தக் கோசத்தினூடாக போராட்டக்காரரின் ஆதரவை இலகுவாகப் பெற முடியுமென சுமா நினைக்கக்கூடும். போராட்டக்களம் மாறி, குரல் மாறி இளைப்பாறு காலத்துக்குப் போகும் நிலையில் இவரது கூத்தை யார் கேட்கப் போகிறார்கள். அந்த நிலையில் போராட்டக்காரர்கள் இப்போது இல்லை.

ரணிலின் வெற்றி என்பது டலஸ்-சஜித் கூட்டின் தோல்வி என்பதைவிட, பெரமுனவின் ஜி.எல்.பீரிசுக்கும், கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் கிடைத்த பெரும் தோல்வி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் முகத்தில் அழிக்க முடியாத கரியைப் பூசியுள்ளனர். தங்களை ஷகிங் மேக்கர்|கள் என நினைத்த இவர்கள் இருவரும் அடுத்த தேர்தலுக்கு முன்னரேயே அவர்களின் மக்களால் ஷகோ ஹோம்| பட்டியலுக்குள் இணைக்கப்படுவார்களானால் ஆச்சரியப்பட நேராது.

No comments