பேராயர் - அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு


உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் எடுத்துரைத்துள்ளார். 

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் 06 ஆம் திகதி புதன்கிழமை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் தன்னிடம் தெளிவுபடுத்தியமைக்காக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி இதன்போது இலங்கையில் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்த தனது அபிப்பிராயங்களை பேராயர் அமெரிக்கத்தூதுவரிடம் எடுத்துரைத்திருக்கின்றார். 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையர்கள் அனைவரும் சமாதானமான முறையில் தமது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அந்நாட்டுத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments