இம்முறை அரசாங்கத்திற்கு ஜெனிவாவில் பாரிய நெருக்கடி ஏற்படும் - பீரிஸ்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள 51ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை பாரிய சவால்களை நிச்சயம் எதிர்கொள்ளும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தற்போது செயற்படுகிறது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவசரகால சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அதற்கு எதிராக வாக்களித்தேன். தற்போதைய நிலையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது.அவசரகால சட்டம் மனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும், கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணாகவும் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன தற்போது கொள்கையற்ற வகையில் செயற்படுகிறது. கட்சியின் கொள்கைக்கு முரணான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டத்தை முடக்க அவசரகால சட்டத்தை அமுல்படுத்தினால், அதன் பெறுபேறு பாதகமானதாக அமையும். அவசரகால சட்டம் அரசியலமைப்பினை தவிர்த்து ஏனைய சகல சட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கும். மனித உரிமைக்கும் அவசரகால சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொருளாதார ரீதியில் மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்த்துள்ள போது அவசரகால சட்டத்தை அமுலபடுத்தியுள்ளதால் சர்வதேசம் இலங்கை குறித்து விசேட அவதானம் செலுத்தியுள்ளது. காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொண்ட மிலேட்சத்தனமான தாக்குதலுக்கு முழு உலக நாடுகளும்,மனித உரிமை அமைப்புக்களும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள 51ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை பாரிய சவால்களை நிச்சயம் எதிர்கொள்ளும்.ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கலை இரத்து செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்றார்.

No comments