கண்டிக்கிறது யாழ்.ஊடக அமையம்!கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அரங்கேற்றத்தை யாழ்.ஊடக அமையம் கண்டித்துள்ளது.

இன்று ஊடக அமையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

மீண்டும் ஒரு முறை ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துவதாக சக்தி-சிரச ஊடகவியலாளர்கள் மீதான இலங்கை அதிரடிப்படையின் தாக்குதல் அமைந்துள்ளது.

ஊடகவியலாளர்களது பணிகளை முடக்கும் வகையிலான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள யாழ்.ஊடக அமையம் தொடர்புடைய சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களை மீட்க வந்த  ஊடகவியலாளர்கள் மீது இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியமையினை யாழ்.ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

உன்னதமான ஊடகப்பணி காரணமாக 41 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 2000ம் ஆண்டு முதல் காவு கொள்ளப்பட்டுள்ளனர்.சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சக்தி –சிரச ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுமிருந்தன்.

அரசியலமைப்பில் அறிவிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை சட்டங்களின்படி வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் அவர்களின் அடிப்படை உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதை அல்லது தண்டனைச் சட்டத்திற்கு எதிரான உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதை யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டவும் விரும்புகின்றது.

தற்போதைய நெருக்கடி மிக்க கால எல்லையினுள் தலைநகர ஊடகவியலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினையும் கோரி நிற்கின்ற யாழ்.ஊடக அமையம் இன,மத மொழி வேற்றுமை தாண்டி சக ஊடகவியலாளர்களது உரிமைக்கு கைகோர்த்து நிற்குமென்;பதையும் அறியத்தருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments