ரணில் பதவி விலக போராட்டக்காரர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது.

போராட்டகாரர்களின் அழுத்தம் வெற்றிப்பெற்றுள்ளது. ஆகவே இவ்விடயத்திலும் போராட்டகாரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் வகையில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய புத்தகசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,


நாட்டு மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிப்பெற்றுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம், பொருளாதாரம் முன்னேற்றம் உள்ளடங்களாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.

முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை பல ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகிறோம் இருப்பினும் எம்மால் அவற்றை செயற்படுத்த முடியவில்லை. ஆனால் மக்கள் போராட்டம் அவற்றை செயற்படுத்துவதற்கான காலத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஜனாதிபதியின் பதவி விலகல் உத்தியோகப்பூர்வமானதாக அமைய வேண்டும்.

ஜனாதிபதி பதவி விலகல் ஒரு பகுதி மாத்திரமே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் போராட்டத்தின் முழுமையான வெற்றியாக கருதப்படும். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்காமலிருந்திருந்தால் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தற்போதைய நிலைமை தோற்றம் பெற்றிருக்கும்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவி விலகாவிடின், ஓரிரு நாட்களுக்காவது அவர் பதல் ஜனாதிபதியாக பதவி வகிக்க நேரிடும் அதனை ஒருபோதும் தவிர்க்க முடியாது. ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை கட்சி தலைவர் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.

பாராளுமன்றம் மக்களாணையினை முழுமையாக இழந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகவுள்ளது. தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்றார்.

No comments