கொள்ளை அடித்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் - பேராயர்


நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களினால்  கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் மீள பறிமுதல் செய்ய வேண்டும் என்று  பேராயர்  மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ராகமை வைத்தியசாலை - தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதணையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் 8 பில்லியன் வெளிநாட்டு கையிருப்பை யார் பூச்சியமாக்கியது? மத்திய வங்கியில் இருந்த தங்கம் எவ்வாறு காணாமல் போனது? அதை பொறுப்பின்றி எவ்வாறு வீண் விரயம் செய்தார்கள்? யார் இந்த பணத்தை எடுத்தது? அவர்களுக்கு ஆலோசனை வழங்கியது யார்? 

உதாரணமாக இரசாயன உரத்தை தடை செய்வதற்கு யார் அனுமதி அளித்தது? இந்த தீர்மானத்தின் பின்புலத்தில் யார் இருந்தது?

இன்று இவ்வாறான தீர்மானங்களால் நாட்டின் விவசாயம் முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது. 

இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களை எடுத்தது யார்? கடந்த வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து நாட்டு மக்களை பிச்சை எடுப்பதற்கு தள்ளியது யார்? என்பதை  மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் அவை தொடர்பான முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் மீள பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதுவே தற்போது மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு தீர்வு.

மேலும் அதிகாரமும் சேவையும் நாணயத்தின் இரு குற்றிகள் போன்றது. சேவை ஆற்றுவதற்கே அதிகாரம் உள்ளது. சேவை ஆற்றாத அதிகாரத்தில் பலன் இல்லை எனவே தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு சேவை ஆற்றுவதற்கு தலைவர்களை மக்கள் தெரிவு செய்கின்றனர்.

மேலும் உயர் பதவிகளுக்கு திறமையுள்ள புத்திஜீவிகள் நியமிக்கப்பட வேண்டும் நாடு தொடர்பில் தெரிந்த நன்கு நேசிப்போரை திறைசேரி மற்றும் பொருளாதார அமைச்சு போன்ற பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். அதை விடுத்து இரவு வேளையில் ஒன்றாக உணவு அருந்தும் நண்பர்கள் அல்ல என்றார்.

No comments