அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் கடலில் வைத்துக் கைது!


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு (27) 47 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் மீன்பிடி இழுவைப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செயல் முயன்றுள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலில் மோசடியில் ஈடுபட்ட 05 பேர் உட்பட 34 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 07 குழந்தைகள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 01 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

துரித கதியில் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறான ஆபத்தான கடற்பயணங்களை ஒழுங்குபடுத்தும் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி சட்டத்தின் முன் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது. 

ஆஸ்திரேலியாவின் எல்லைகள் சட்டவிரோத கடல்வழி குடியேற்றத்திற்கு மூடப்பட்டிருப்பதால், அத்தகைய நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டப்பூர்வமாக குடியேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்.

இதேவேளை, நேற்று முன்தினம் மட்டக்களப்பு - பாலமீன்மடு பிரதேசத்தில் வைத்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 54 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments