தமிழ்த் தேசியம் என்பது நிறம்மாறி சிறிலங்கா தேசியமாகி வருகிறது! பனங்காட்டான்


தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேச சம்பந்தனுக்கு கோதா கொடுத்த இரண்டு மாத தவணை முடிந்துவிட்டது. தமிழரின் காணி பறிப்பு, நில அபகரிப்புப் பற்றி பேச சுமந்திரனுக்கு கோதபாய அடையாளம் காட்டிய சவேந்திர சில்வாவும், அலி சப்றியும் இன்று அப்பதவிகளில் இல்லை. இவைகளை அம்போ என மறந்துவிட்ட கூட்டமைப்பு ஆட்சி மாற்றம் பற்றி அங்கலாய்க்கிறது. தமிழ்த் தேசியம் என்பது இப்போது சிறிலங்கா தேசியமாகி வருகிறது.

கோதபாயவை வீட்டுக்கு அனுப்பும் கொட்டொலியுடன் ஆரம்பமான மக்கள் பேரெழுச்சி எழுபத்தைந்து நாட்களைத் தாண்டியும் அந்த இலக்கை இன்னமும் எட்டவில்லை. 

அறுபத்தைந்து லட்சம் மக்களின் வாக்குகள் ஐந்தாண்டு காலத்துக்கு என்பதால், தாம் பதவி துறக்கத் தயாரில்லையென்று பகிரங்கமாகவே கூறிவிட்டார் கோதா. அதேசமயம், தமது ஆட்சிக்காலத் தோல்விகளுக்கு அல்லது தவறுகளுக்கு மற்றைய ராஜபக்சக்களே காரணம் என்று காட்டுவதுபோல அவர்களை பதவி விலக வைத்தது அவரது அபார யுக்தி. 

அண்ணர்மார் இருவரும், அவர்களின் பிள்ளைகள் இருவருமாக மொத்தம் நால்வர் அமைச்சர் பதவிகளை துறந்தபோதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அடிக்கடி குரல் கொடுப்பவர்களாக உள்ளனர். தம்பி பசில் மட்டும் அமைச்சர் பதவியுன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்க நேர்ந்தது. இரட்டைப் பிரஜாவுரிமைக்கு கிடைத்த பரிசு இது.  

பசிலின் இடத்துக்கு நியமனமான சூதாட்ட வணிக முதலாளி தம்மிக்க பெரேரா பல தடைகளைத் தாண்டி நாடாளுமன்றம் புகுந்துள்ளார். கோடீஸ்வரரான இவரது பதவியேற்பு நாட்டு மக்களுக்கு சுபீட்சம் ஏற்படுத்துமென அறிவிக்கப்படுகிறது. 

பசில் ராஜபக்சவுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கியபோதும், ரணிலை பிரதமராக நியமித்த போதும் இவ்வாறுதான் எதிர்வு கூறப்பட்டது. காமதேனு, கற்பகதரு என்றவாறு இவர்களை அடையாளப்படுத்தினர். 

ரணிலைப் பொறுத்தளவில் நாட்டின் உண்மை நிலைமையை தொடர்ந்து பகிரங்கமாக எடுத்துக் கூறி வருகிறார். இவ்வாறு கூறுவதனூடாக, கோதா - மகிந்த கூட்டாட்சியில் என்ன நடைபெற்றது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த அவர் முனைகிறார். அது பரவாயில்லை, மக்களுடன் அவர் சம்பாசித்துக் கொள்ளட்டும் - பிரச்சனைகள் இப்போது தம்பக்கம் திரும்பாவிட்டால் போதுமென்ற போக்கில் ரணிலை கோதா சற்று விட்டுப்பிடிக்கிறார்போல தெரிகிறது. 

காலிமுகத் திடலில் உருவாகியுள்ள கோதா கோ கம, யூலை மாதத்தில் நூறாவது நாளைத் தொடும்போது, போராட்டம் நாடு முழுமையாகத் தழுவி நிலைமை மோசமடையலாமென புலனாய்வு அறிக்கைகள் எச்சரிப்பதால், அதற்கு முன்னராக போராட்டத்தை நசுக்கும் திட்டமும் தயாராகி வருகிறது. 

இதன் எதிரொலியாக, ரணிலை பதவி நீக்கலாம் அல்லது பதவி துறக்க வைக்க வேண்டுமென்ற மற்றொரு திட்டம் பசிலின் வழிநடத்தலில் மகிந்தவின் அனுசரணையுடன் பொதுஜன பெரமுனவுக்குள் உருவாகிறது. மக்களுக்கு அரிசி, தானியங்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லை. கிடைத்தால் அது நூறு வீத அதிகரித்த நிலை. அதங்கு மக்களிடம் பணம் இல்லை. சாதாரண மக்களைவிட Nடீமாசமான நிலையில் அரசாங்கம் வங்குறோத்தில் திணறுகிறது. 

அண்டை நாடு என்ற பெயரில் இந்தியா தனது நட்புக்கரத்தை தொடர்ந்து நீட்டுகிறது. இதனை எழுதும் வேளையில் இந்திய உயர்மட்டக்குழு கொழும்பில் கோதாவையும் ரணிலையும் தனித்தனியாக சந்தித்து தங்கள் உதவிக்கு உறுதி தெரிவித்துள்ளது. சீனா தொடர்ந்து இலங்கைக்கு உதவும்வரை இந்தியாவின் உதவிக்குப் பஞ்சம் இருக்காது. 

சர்வதேச நாணய வங்கியால் மட்டுமே இலங்கையை மீட்க முடியுமென்பது ரணிலின் கருத்து. இதற்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் பல. அவைகள் நிறைவேற்றப்படுமானால் இல்லாமைக்கு சற்று ஓய்வு கிடைக்கலாம். ஆனால், ஆட்சித்தரப்பு மக்கள் செல்வாக்கை இழக்கும். இது எதிர்காலத் தேர்தல்களில் அவர்களைப் பாதிக்கும். 

எதற்குமே பணமில்லை என்று அழுது கொண்டு இருக்கையில், அடுத்தாண்டு தேர்தல் என்று பெரிய குண்டொன்றைத் தூக்கிப் போட்டுள்ளார் கோதா. இதை அவர் பொதுமக்களுக்குச் சொல்லவில்லை. தம்மைக் கதிரையில் ஏற்றிய பொதுஜன பெரமுன எம்.பிக்கள் மத்தியில் இதனைத் தெரிவித்தார். ஆனால், ஊடகங்கள் இதனை நாட்டு மக்களுக்கான அறிவிப்பாக்கி விட்டன. 

இந்த அறிவிப்பினூடாக ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த கோதா எத்தனிக்கிறார். ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு கோருபவர்களைப் பார்த்து, அடுத்த வருட தேர்தலில் அவரையும் அவரது கட்சியையும் வீழ்த்துங்கள் என்பது முதலாவது. பொதுஜன பெரமுனவை அடுத்த தேர்தலில் மீண்டும் அரியாசனம் ஏற்ற இப்போதே செயற்பாடுகளை ஆரம்பியுங்கள் என்பது இன்னொன்று. கோதா வீட்டுக்குப் போ என்று போராட்டம் நடத்துபவர்களுக்கு - அடுத்த வருடம் மாற்றங்கள் வருமென்று தெரிவித்து கொஞ்சம் தாக்காட்டுவது மூன்றாவது. 

தங்கள் தொகுதிக்கும் - சொந்த வீடுகளுக்கும் - பொது நிகழ்வுகளுக்கும் தலைகாட்ட முடியாது, வீதியில் வாகனத்தில்கூட செல்ல முடியாதிருக்கும் ஆளுந்தரப்பு எம்.பிக்கள் எவ்வாறு தேர்தல் பரப்புரையை இப்பொழுது ஆரம்பிக்க முடியும்? 

அரசியலில் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. நினைக்காதவை திடுதிப்பென நடந்துவிடும். கோதபாய ஜனாதிபதியாகத் தெரிவானபோதும், மகிந்த தலைமையில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை அரசாக வென்றபோதும், அதன் பிதாமகர்களான ராஜபக்சர்களின் ஆட்சிக்காலம் அரை தாண்டுவதற்கு முன்னரே இப்படி நடைபெறலாமென யாராவது எதிர்பார்த்தார்களா? தேர்தலில் படுதோல்வி கண்ட பூச்சியத்தின் மன்னரான ரணில், தமக்கு பிரதமர் அதிர்ஸ்டம் கிடைக்குமென கனவுகூடக் கண்டிருக்க மாட்டார். 

அரசியலில் விதி சுழிமாறி சிலரை அடித்து வீழ்த்தும். வேறு சிலரை மேலெழுப்பும். இந்தச் சுனாமி அரசியலில் இப்போது காயப்படுபவர் சஜித் பிரேமதாசதான். எதிர்க்கட்சியென ஒன்றை இல்லாமற் செய்ய கோதபாய வியூகம் வகுக்கிறார். தமக்கும் தமது கட்சிக்கும் துரோகம் இழைத்ததற்காக சஜித்தை முழுமையாக அரசியலிலிருந்து அப்புறப்படுத்த ரணில் முழுமையாக முனைகிறார். 

21வது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பது, ஹிருணிக பிரேமசந்திர ஊடாக ரணிலின் வீட்டுக்கு முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்பவை சஜித் தரப்பினரின் நிகழ்கால ஏற்பாடுகள். ரணிலின் குடும்பப் பெயரையும் மாற்றி புதுப்பெயர் கொடுத்துள்ளார்கள். அது - ரணில் ராஜபக்ச என்பது.  அப்படியென்றால் கோதபாயவின் குடும்பப் பெயரை விக்கிரமசிங்க என மாற்றலாம். 

அப்பாவி மக்கள் பஞ்சம் பட்டினியால் அல்லாடிக் கொண்டிருக்க, அரசியல் தலைமைகள் தங்கள் இருப்பையும், அடுத்த தேர்தலையும் நோக்கி ஆலாய்ப் பறக்கிறார்கள். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் விதிவிலக்கல்ல. 

சிங்கள பௌத்தம் என்பதை நிலைநாட்ட குருந்தூர் மலையில் விகாரை அமைப்பும், புத்தர் சிலை நாட்டல் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ராணுவ பாதுகாப்புடன் பௌத்த துறவிகள் எனப்படுபவர்கள் முழு மூச்சாக இதில் ஈடுபடுகின்றனர். ஆனால், தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள அதிபதி இது எதுவுமே தமக்குத் தெரியாது என்று கை விரி;க்கிறார். 

தரிசு நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டுமென்ற ஜனாதிபதியின் அறிவிப்பின்படி, தமிழர் வாழுமிடங்களிலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அபகரிக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களைத் தட்டிக்கேட்க உரிமம் பெற்றவர்கள்போல் நடந்து கொண்ட தமிழ்த் தலைமைகள் காணமாற் போய்விட்டனர். இதனை எழுதுகையில் - மார்ச் மாதம் 31ம் திகதி கோதபாயவின் மிரிகான வீட்டின் முன்னால் போராட்டம் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்று நினைவுக்கு வருகிறது. 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் கோதபாயவுடன் மகிந்தவும் அமர்ந்திருக்க இச்சந்திப்பு இடம்பெற்றது. அவ்வேளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இ;ந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - நீங்கள் இரு தரப்பும் இனிப் பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று வழங்கிய ஆலோசனையின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேச இரண்டு மாத தவணை கேட்டார் கோதா. அதனை ஏற்றுக் கொண்டது சம்பந்தன் தரப்பு. இது முடிந்து மூன்று மாதமாகிவிட்டது. 

தமிழர் காணிகளை ராணுவம் அபகரிப்பது பற்றி சுமந்திரன் இங்கு எடுத்துக் கூறியபோது, அவர்கள் எதற்காக காணிகளை எடுக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாததுபோல் கோதபாய வினவியது அபார நடிப்பு. தொல்பொருள் திணைக்களத்தினர் காணிகளை அபகரிப்பது பற்றி குறிப்பிட்டபோது - அவர்களின் வேலை தொல்பொருள் ஆய்வுதானே என்று நெற்றியைச் சுருக்கி பதில் கேள்வி தொடுத்தது கோதபாயவின் குணசித்திர பாகம். 

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தபோது அப்போதைய ராணுவத்தளபதி சவேந்திர சில்வா தமது பங்குக்கு தொலைபேசியில் சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு - ராணுவம் தமிழர் காணிகளை சுவீகரிப்பதாகக் கூறினீர்களாமே! அது எங்கே என்று கேட்டது அதியுச்ச நடிப்பு. 

இப்பிரச்சனைகள் பற்றி அன்றைய ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுடனும் அப்போதைய நீதி அமைச்சர் அலி சப்றியுடனும் பேசி ஒரு தீர்வுக்கு வருமாறு சுமந்திரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இப்போது அப்பதவிகளில் முன்னவர் இருவரும் இல்லை. சுமந்திரன் அதே பதவியில் இருந்தபோதும் இந்த விடயத்தை வசதி கருதி மறந்தவராகி விட்டார். 

கடந்த வாரம் குருந்தூர் மலையில் பிக்குகள் அட்டகாசம் நடத்தியபோது சுமந்திரன் எங்கே போனார்? இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து ஊடகங்களில் பிரகாசமானவர் திடீரென காணாமல் போனது ஏன்? 

நல்லாட்சிக் காலத்தில் ரணிலுடன் கூட்டுச் சேர்ந்ததுபோல, அடுத்த தேர்தலில் வெற்றி பெற பசிலூடாக ராஜபக்சக்களுடன் இணைவதில் ஷபிசி|யாக இருக்கிறாரா? இவைகளைப் பார்க்கும்போது மக்களுக்கு ஒன்று தெரிகிறது. தமிழ்த் தேசியம் என்பது நிறம் மாறி, சிறிலங்கா  தேசியமாகி வருகிறது. தேர்தல் காலத்தில் நம்பி நம்பி வாக்களிக்கும் மக்களே பாவம்!

No comments