சிறுபான்மையினர் முன்னேற்றத்தை தடுக்கவே இராணுவம் குவிப்பு

தமிழர்கள் போன்றே முஸ்லிம்களும் முன்னேற கூடாது என்பதற்காக,  இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின்

கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இராணுவத்துக்கான  எந்தவொரு வளமும் குறைக்கப்படமாட்டாதென கூறி இருக்கின்றார். இது இனவாதத்தின் ஒரு விளைவாகும் என்றார்.  

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு  காந்திஜீ விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று (12) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எனக்கு 20 வருட அரசியல் அனுபவம் உண்டு. இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை அரசாங்கம் அனுபவித்து கொண்டிருக்கின்றது. இந்த அரச கட்டமைப்புக்குள் உள்ள மக்கள் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நாம் அவதானிக்கலாம்.

கடந்த 30 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு போரால் அழித்தது.பின்னர் போர் நிறைவுற்ற 13 வருடங்களின் பின்னரும் தமிழருக்கு இந்த நிலை தொடர்ந்தது என்றார். 

பல்வேறு கட்டமைப்புடன் தமிழர்களை 74 வருடங்களாக அழித்த அரசாங்கம் வங்குரோத்து நிலைமைக்கு சென்றிருக்கின்றது. இந்த நாட்டில் வருடாந்த வரவு- செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு 19 சதவீதம் ஒதுக்கப்படுகின்றது. அதில் வருடமொன்றுக்கு  இராணுவத்தினரின் தேவைக்காக 13 சதவீதம் ஒதுக்கப்படுகின்றது என்றார். 

பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கப்படுகின்ற சதவீதத்தில் அரைவாசியே, கல்வி மற்றும் சுகாதார பிரிவுகளுக்கு ஒதுக்கப்படுகின்றது என்றார். 

இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிப்பதற்காகவே பாதுகாப்புக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தமிழர்கள் போன்றே முஸ்லிம்கள் முன்னேற கூடாதென இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

No comments