தோப்பாக்கப்படும் தனிமரம் எஜமானுடன் நின்றுபிடிக்குமா? பனங்காட்டான்


எல்லாவற்றுக்கும் விட்டுக்கொடுத்து (வெளித்தோற்றத்தில்) தோப்பாக்கப்படும் தனிமரம் எவ்வளவு காலத்துக்கு அதன் எஜமானின் பொய் நிழலில் நின்று பிடிக்கும். ரணில் இன்னொரு மகிந்த ஆக்கப்படுவாரா? அல்லது கோதா அமைதியாக வீடேகுவாரா?

எவரும் எவ்வேளையிலும் எதிர்பார்த்திராத அரசியல் கலாசாரமும் அரசியல் சூழலும் முன்னறிவிப்பின்றி பல அரசியல் நகர்வுகளை இலங்கையில் இப்பொழுது ஏற்படுத்தி வருகிறது. 

சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி, சர்வதேச நிறுவனங்கள் - மனித உரிமை அமைப்புகள் - நிதி நிறுவனங்கள் உட்பட மேற்கத்தைய நாடுகள் பலவும் இந்த நகர்வுகளை மிகக் கூர்மையாக அவதானித்து வருகின்றன. 

இலங்கைக்குத் தேவையான நிதி வழங்குவது இந்த அவதானிப்பில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன், அதிகூடிய பெரும்பான்மையில் ஆட்சியைக் கைப்பற்றிய பொதுஜன பெரமுன இணைந்து - ஒரு வகையான கலப்பு அரசாட்சி ஏற்படுத்தப்பட்டிருப்பதே இதற்கான காரணம். 

முப்பது வருட ராணுவ அனுபவம் கொண்ட கோதபாய ஜனாதிபதியாகவும், நாற்பத்தைந்து வருட அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் - அரசியல் ரீதியாக இரு வேறு கட்சிகளைக் கொண்டவர்கள் இணைந்து ஆட்சிக்குத் தலைமை தாங்குவது விசித்திரமானது. 

மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ரணிலுடன் கோதபாய சந்திப்பு நடத்தி அவரின் சம்மதத்தைப் பெற்ற விடயம் மகிந்த தரப்பினருக்கு காலந்தாழ்த்தியே தெரியவரும் அளவுக்கு அத்தனை விடயங்களும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. 

இந்த மாதம் 6ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு நேரடியாக கோதபாய கேட்டிருந்தார். ஏதோ விதமாக இவ்விடயம் கசிந்து ஏழாம் திகதியன்று ஊடங்களில் வெளியாயிற்று. செய்தி வெளிவந்த வேகத்தைவிட அதற்கான மறுப்பு மகிந்த தரப்பிலிருந்து அதிவேகமாக வந்தது. 

அப்படியொரு அமைச்சரவைக் கூட்டம் 6ம் திகதி நடைபெறவில்லையென்றும், அது அமைச்சர்களுடனான சந்திப்பே என்றும் சுட்டிக்காட்டிய மகிந்த, தம்மைப் பதவி விலகுமாறு கோதபாய கேட்கவில்லையென்றும் கூறினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது செயலாளர் அறிக்கையொன்றையும் வெளியிட்டார். இது போதாதென்று தனது அண்ணனை பதவி விலகுமாறு தாம் கேட்க மாட்டேன் என்று கோதபாய சொன்னதாகவும் சகோதர பாசம் ததும்பும் செய்தியும் வெளிவந்தது. 

இது இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் - 9ம் திகதி மகிந்த தமது பிரதமர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை கோதபாயவுக்கு அனுப்பினார். இக்கடிதம் ஏதோ காரணத்துக்காக திகதியிடப்படவில்லை என்பது இப்போது பகிரங்கமாகியுள்ளது. 

இக்கடிதத்தின் முக்கிய பந்தி பின்வருமாறு ஆரம்பிக்கின்றது: 

Hence, according to your request made at the special cabinet meeting on May 6, 2022, I am immediately resigning from the post of prime minister....(2022 மே மாதம் 6ம் திகதி இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நீங்கள் கேட்டுக் கொண்டவாறு, நான் உடனடியாக எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன்....)

இக்கடிதத்தின் பிரகாரம் மே மாதம் 6ம் திகதி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது என்பதையும், அக்கூட்டத்தில் வைத்து தம்மை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோதபாய கேட்டுக் கொண்டார் என்பதையும் சந்தேகத்துக்கிடமின்றி மகிந்த தமது கடிதத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். இக்கூற்று அவர் முன்னர் தெரிவித்த மறுப்புக்கு மறுப்பானது. 

பொய் கூறுபவர்களுக்கு ஞாபகசக்தி இருக்க வேண்டுமென்று சொல்வார்கள். நிகழ்கால குழப்பம் காரணமாகவோ என்னவோ தாம் முன்னர் கூறிய பொய்யை ஞாபகசக்தியின்மையால் மறந்து அரசியல் பித்தலாட்டம் செய்திருக்கிறார் மகிந்த. 

இந்தப் பின்னணியில்தான், பதவி துறப்பதற்கு முன்னர் அலரி மாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்தபோது இவரது நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் ஜோன் பெர்னாண்டோவின் வழிநடத்தலில், போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு தமது குரக்கன் சால்வையைத் தூக்கிக் காட்டி ஆமோதித்தார். நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, கோதபாயவை மக்கள் விரட்டி அடித்தாலும்கூட பரவாயில்லை என்ற வன்மத்துக்கு மகிந்த ஆளாகியிருந்தார் என்பதை பதவி துறப்பு நேர செயற்பாடு நிரூபிக்கிறது. 

ராஜபக்ச குடும்பத்தவர் எவரும் இப்போது அமைச்சர்களாக இல்லை. இயலுமானவரை அவர்களை உள்வாங்காது வெளியில் வைத்திருக்கும் நிலைக்கு கோதபாய தள்ளப்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே நாடாளுமன்ற நிர்வாகம் - நாடாளுமன்ற அதிகாரம் - அமைச்சர்கள் நியமனம் என்பவற்றை பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டதாக அறிவித்து, காரியங்களை தமது ஒத்திசைவுடன் நிறைவேற்றக்கூடியதாக மேற்கொண்டு வருகிறார். 

இதனைப் புரிந்துகொண்ட ராஜபக்ச சகோதரர்களின் மூத்தவரான சமல் ராஜபக்ச 9ம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டிய ஒரு விடயம் யதார்த்தமானது. ஆனால் காலம் சென்றது. 

ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிந்ததும் (2015) மகிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தால், இப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்பதே சமல் ராஜபக்சவின் கூற்று. இதில் முற்றுமுழுதாக உண்மை இருக்கிறது. 

தங்காலையிலுள்ள தங்களின் பூர்வீக இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது, தந்தையார் டி.ஏ.ராஜபக்சவின் உருவச்சிலை அடித்து நொருக்கப்பட்டது, அவரது பெயரிலான நூதனசாலை சேதமாக்கப்பட்டது மட்டுமன்றி தமது இல்லமும் தீ வைக்கப்பட்டதன் பின்னரே மகிந்த விட்ட தவறை இவர் நினைத்துப் பார்க்க முடிந்திருக்கிறது. 

வயதாலும், அனுபவத்தாலும், குடும்பத்தின் மூத்தவர் என்பதாலும் மகிந்தவுக்கு ஜனாதிபதி பதவிக்கால முடிவிலேயே தகுந்த ஆலோசனை வழங்கி நெறிப்படுத்தி அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டிய சமல் ராஜபக்ச, இப்போது நாட்டு மக்கள் துரத்தி அனுப்பிய பின்னர் தாம் விட்ட தவறை ஏற்றுக்கொள்ளாது கூறுகின்ற ஆலோசனை காலத்துக்கு உதவாதது. இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது. 

ஜனாதிபதிப் பதவியை மூன்றாம் தடவையும் பெறுவதற்கு வழிவகுக்கும் பதினெட்டாவது அரசியல் திருத்தம் மகிந்தாவால் கொண்டு வரப்பட்டபோது அதனை ஆதரித்தவர் சமல் ராஜபக்ச. மகிந்தவின் அரசில் பல அமைச்சர் பதவி வகித்தவர். தமது மகனுக்கும் அரசியல் பாதையை ஏற்படுத்தி அதனூடாக அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்தவர். 2000ம் ஆண்டுத் தேர்தலில் மகிந்த தலைமையில் போட்டியிட்டு அவரை பிரதமர் கதிரைக்குக் கொண்டு வந்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு. மொத்தத்தில் மகிந்தவின் அத்தனை செயற்பாடுகளுக்கும் ஆதரவாளராக இருந்துவிட்டு, இப்போது மகிந்த விட்ட தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும்போது அதில் தமக்குள்ள பங்கையும் நினைவிற் கொள்ள வேண்டும். 

ஒரு வார்த்தையில் சொல்வதானால் அரசியலில் அனைத்துச் சுபீட்சங்களையும் அனுபவித்துவிட்டு இப்போது ஒருவரைப் பார்த்து விரல் நீட்டுவதால் போராடும் மக்கள் பார்வையிலிருந்து தம்மைத் தப்ப வைக்கும் முயற்சியை சமல் மேற்கொள்கிறார். 2015ம் ஆண்டில் மகிந்த செய்யத் தவறியதை ஏழாண்டுகளின் பின்னர் புலனாய்வு செய்வதென்பது, ராஜபக்ச குடும்பத்தின் இன்றைய தோல்வியில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள இவர் மேற்கொள்ளும்; தற்காப்பு முயற்சி. 

இன்றைய அரசியல் பொருளாதார சீர்கேடுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் கோதா, மகிந்த, பசில் மட்டுமன்றி மூத்தவரான சமல் ராஜபக்ச உட்பட அந்தக் குடும்பத்தின் அனைவருமே காரணிகள். அதனால்தான் கூண்டோடு ராஜபக்சக்கள் களையப்பட வேண்டுமென்ற கோசத்துடன் மக்கள் வீதிகளில் இறங்க நேர்ந்தது. இன்றும் அதுவே அவர்கள் குரலாக ஒலிக்கிறது. 

அரசியல் யாப்பைக் காரணம் காட்டி கோதபாய தப்பி இருக்கிறார். ஜனாதிபதி ஒருவர் பதவி நீக்கப்பட்டால் அல்லது ஏதாவது காரணத்தினால் பதவி விலகினால் இடைத்தேர்தல் நடத்த முடியாது. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவர முடியாது. இப்பீச்மன்ற் எனப்படும் குற்றவியல் பிரேரணை மட்டும் கொண்டுவர முடியும். ஆனால், அதற்கான நடைமுறை நீட்சியானது. பெரும்பான்மையுடன் இருக்கும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான பிரேரணை சாத்தியப்படாது. 

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது அவர் மீது லலித் அத்துலத் முதலி, காமினி திசநாயக்க ஆகிய அமைச்சர்கள் குற்றவியல் பிரேரணையை கொண்டுவர எடுத்த முயற்சி புஸ்வாணமானதையும், அதன் பிரதிபலனாக இரு அமைச்சர்களும் பதவி இறக்கப்பட்டதும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதது. 

தமக்கு விரும்பிய ஒருவரைப் பிரதமராக்கி - அவருக்கு ஒற்றை ஆதரவுகூட இல்லாத நிலையில் அதற்கான ஆதரவுத் தளத்தையும் நாடாளுமன்றில் உருவாக்கி, தம்மை அரசியல் ரீதியாக எதிர்த்தவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கி, ராஜபக்ச குடும்பத்தினரை மட்டுமன்றி சர்வதேசத்தையும் தம் பக்கத்துக்கு பார்வையை திருப்பியுள்ளார் கோதபாய. ஒருவகையில் சொல்வதானால் இந்த ஆட்சி அமைப்பு ஒரு பொறிக்கிடங்கு. 

நாட்டின் மாப்பிள்ளையாக (ஜனாதிபதிப் பதவி) வரவேண்டுமென்று ஆசை கொண்ட ரணிலுக்கு அது கிடைக்கவில்லை. பல தடவை மாப்பிள்ளைத் தோழனாகவே (பிரதமர் பதவி) வர முடிந்துள்ளது. இதற்கு முன்னர் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் (டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன) பிரதமர் பதவி வகித்துள்ளார். 

2001ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தவேளை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால் ரணில் பிரதமரானார். ஆனால் 2004ம் ஆண்டு ரணில் நாடாளுமன்றத்தைக் கலைத்ததால் ரணிலின் பதவியும் பறிபோனது. 2015ல் உருவான நல்லாட்சியில் மகிந்தவின் பிரதமர் பதவியை 52 நாட்களுக்கு மைத்திரி காலி செய்தார். 

விரும்பும் எந்த வேளையிலும் காரணம் கூறாமலே பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதை நன்கு தெரிந்து கொண்டே இப்பதவியை ரணில் ஏற்றுள்ளார். கோதபாய சம்மதப்படாத பல காரியங்களை (உதாரணம்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்) ஷவெற்றி|கரமாக செயற்படுத்துகிறார். 

எல்லாவற்றுக்கும் விட்டுக்கொடுத்து (வெளித்தோற்றத்தில்) தோப்பாக்கப்படும் தனிமரம் எவ்வளவு காலத்துக்கு அதன் எஜமானின் பொய் நிழலில் நின்று பிடிக்கும். ரணில் இன்னொரு மகிந்த ஆக்கப்படுவாரா? அல்லது கோதா அமைதியாக வீடேகுவாரா?

No comments