சுடமுடியாது - சுமா: சுடமாட்டோம் - சவேந்திரா!

வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முப்படைக்கு நேற்று வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொது சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இராணுவம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவு சட்டவிரோத உத்தரவு என்றும் அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் செயலாளர்களுக்கு அதிகாரம் இல்லை (அரசியலமைப்பின் 52(3)) என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இதனிடையே  பொதுமக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒருபோதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலம் பொதுமக்களைத் தூண்டிவிட முயற்சி நடப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி ஜெனரல் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், இந்தத் தவறான அறிக்கையை இலங்கையின் முப்படைகளும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.


No comments