பாராளுமன்றத்தைக் கலைத்து 3 மாதங்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்துங்கள் - கஜேந்திரகுமார்


தற்போது நாட்டுமக்கள் விரும்புகின்ற ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டுமாயின், முதலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதன்மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒருவர் பொதுத்தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவேண்டும். 

அதுவரையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய ஜனாதிபதியொருவர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் வியாழக்கிழமை (7) கொழும்பில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாம் கடந்த 74 வருடகாலமாக நாட்டின் அரச கட்டமைப்பை எதிர்த்து, தமிழ்மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

குறிப்பாகக் கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் அனைவரும் சிங்கள பௌத்தப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஏனைய சமூகங்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலேயே செயற்பட்டுவந்திருக்கின்றார்கள். 

அவர்களின் அராஜகங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகத் திரும்பிய சந்தர்ப்பங்களில்கூட, அவர்களை ஏமாற்றித் திசைதிருப்பியிருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், அதற்காகத் தமிழ்மக்களைக் குற்றஞ்சாட்டமுடியாத நிலைக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது. பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கும் மக்கள், அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப்போராட ஆரம்பித்திருக்கின்றார்கள். 

இது நாட்டில் புரட்சிகரமானதொரு மாற்றத்தின் ஆரம்பமாக நோக்கப்படுகின்றது. போரை வெற்றிகொண்டு சிங்கள மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் காண்பித்துக்கொண்டவர்களுக்கு எதிராக, இப்போது அதே சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களது கோரிக்கை என்னவென்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாத்திரம் பதவி விலகுமாறு வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை.

மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தையும் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரியே அவர்கள் போராடுகின்றார்கள். 

கடந்த காலங்களில் சீனாவின் துணையுடன் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த அரசாங்கம், இப்போது இந்தியாவின் காலில் விழுந்திருக்கின்றது.

இருப்பினும் ஒரு வல்லரசாக இந்தியா அதன் நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதில் மாத்திரமே அவதானமாக இருக்கின்றது.

எனவே அவற்றை அடைந்துகொள்வதற்கு இலங்கையில் பலவீனமானதொரு அரசாங்கம் ஆட்சியிலிருப்பது தமக்குச் சாதகமாக அமையும் என்று இந்தியா கருதுகின்றது.

இந்நிலையில் இத்தனை காலமும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுப்பதற்குத் துணைபுரிந்த சுமார் 41 உறுப்பினர்கள், தற்போது சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்திருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிழைகளையும் அராஜகங்களையும் மூடிமறைத்து, அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்தவர்கள் இப்போது சுயாதீனமாகச் செயற்படப்போவதை நம்பமுடியாது.

 எனவே மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்தாலும், மீண்டும் புதியதொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அவர்களிடத்திலேயே தங்கியிருக்கின்றது.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய இந்த அரசாங்கத்திற்குத் தலைமைதாங்கும் ஜனாதிபதி அண்மையில் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.

ஆனால் அதில் பங்கேற்பது ஜனாதிபதியை ஆதரிப்பதாக அமையும் என்பதால் ஐக்கிய தேசியக்கட்சியையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் தவிர, ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தன. 

ஆகவே இந்தியாவின் காலில் விழுந்திருக்கும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முகவராகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்படுகின்றது.

இத்தகைய பின்னணியில் நாட்டுமக்கள் விரும்புகின்ற ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டுமாயின், முதலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒருவர் பொதுத்தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவேண்டும்.

அதன்படி பொதுத்தேர்தல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடத்தப்படவேண்டும் என்பதுடன், அதுவரையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய ஜனாதிபதியொருவர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படவேண்டும். 

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே பதவி விலகவேண்டும் எனவும், பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடாது எனவும் கூறுவதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்க முற்படுகின்றது. இந்த உண்மைகளைத் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

கேள்வி - தற்போது நாடு பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், தேர்தலை நடாத்துவதற்கு அவசியமான நிதியைத் திரட்டிக்கொள்வது சாத்தியமா?

பதில் - அரசாங்கம் கவிழுமா? இல்லை? என்ற சந்தேகம் நிலவும்போது சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக்கட்டமைப்புக்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் தயக்கம் காண்பிக்கும். எனவே நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவேண்டுமெனில், தேர்தலுக்குச் செல்வதொன்றே அதற்கான வழியாகும். தேர்தலை நடத்துதல் போன்ற அவசரதேவைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக்கட்டமைப்புக்களிடம் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இப்போது பெரும்பான்மையின சிங்கள மக்களே தமக்கு உகந்த தலைவரைத் தெரிவுசெய்யவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யப்படும் தலைவர் தமிழ்மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் கரிசனையுடையவராக இருப்ப்தை உறுதிசெய்யவேண்டும்.

கேள்வி - இலங்கை அரசாங்கம் பெருமளவிற்கு சீனாவிடம் தங்கியிருப்பதாக பொதுநிலைப்பாடnhன்று காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் தமிழ்மக்களின் நலன்களை முன்னிறுத்தி அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கும் நாடாக விளங்கக்கூடிய இந்தியாவை விமர்சிப்பது ஏற்புடையதா?

பதில் - இந்தியா அதன் தேசியபாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களில் இலங்கைமீது தலையீடு செய்வதை நாம் எதிர்க்கவில்லை.

ஆனால் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று இந்தியா உண்மையிலேயே விரும்பினால், அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தைப்பற்றி அவர்கள் பேசக்கூடாது. ஆனால் அதற்கு மாறாக இந்தியா தமது நலன்களைத் தக்கவைத்துக்கொள்வதிலேயே கரிசனையுடன் இருக்கின்றது. 

No comments