எப்படிப் போராடுவது என்பதைவிட எதற்காகப் போராடுவது என்பதே....! பனங்காட்டான்


மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட இலக்கைத் தணிக்கவும், காலத்தை இழுத்தடித்து அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவும் ராஜபக்சக்கள் தந்திரோபாயமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர். காலிமுகத் திடலை காணிவேல் தளமாக மாற்றினால் அது ராஜபக்சக்களுக்கே சாதகமாகிவிடும். போராட்டத்தின் வெற்றிக்கு வேகம் மட்டும் போதாது.  விவேகம் அதற்குத் துணையாக்கப்பட வேண்டும். 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள காலிமுகத் திடல் மிகவும் பிரசித்தமானது. 

நாட்டின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி இந்த இடத்தில்தான் தமது குதிரையிலிருந்து வீழ்ந்து அகால மரணத்தைத் தழுவினார். 

பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி தனிச்சிங்கள சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவேளை, தமிழ்த் தலைவர்கள் இதே காலிமுகத் திடலில்தான் அமைதிப் போராட்டம் நடத்தி சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். இதுவே ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட முதலாவது சத்தியாக்கிரகம். 

இஸ்லாமியர்கள் வருடா வருடம் இங்குதான் ஆயிரக்கணக்கில் கூடி புனித ரம்ழான் தொழுகையை நடத்துவர். ஆட்சி நடத்தும் அரசியல் கட்சிகள் தங்களின் மே தின விழாவுக்கான இடமாகவும் இதனையே பயன்படுத்துவது வழக்கம். 

இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணி பெற்றுக் கொடுக்கும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தினமும் இந்தக் காலிமுகத் திடலில் கூட்டம் கூட்டமாக கூடிக் களிப்பர். அதனைக் கண்டுகளிக்க இன்னும் பல கூட்டங்கள் அங்கிருக்கும். 

யாழ்ப்பாணப் பனங்கிழங்கு, கறுத்தக்கொழும்பு மாம்பழம், வகைவகையான சுண்டல் கடலைகள் - வடைகள், ஐஸ்கிறீம் வண்டிகள் என்று வியாபாரம் இங்கு எப்போதுமே களைகட்டி இடம்பெறும். 

கடந்த சில நாட்களாக இன்னொரு வகையில் காலிமுகத் திடல் சர்வதேசத்தின் பார்வைக்குட்பட்டுள்ளது. ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும், ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சபதம் எடுத்துள்ள ஆயிரமாயிரம் மக்கள் அரசியல் இன மத வர்க்க வேறுபாடின்றி இரவு பகலாக கொதிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இங்கு முகாமிட்டுப் போராடி வருகின்றனர். 


நுகேகொட மிரிகானவிலுள்ள கோதபாயவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்னால் ஆரம்பமான மக்கள் பேரியக்கம் நாடெங்கும் வியாபித்து ஒரு வாரத்துக்கு மேலாக முழுமையான அமைச்சரவை இல்லாத அரச இயந்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையைச் சமாளிக்க அண்ணன் மகிந்தவும், தம்பி கோதாபாயவும் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை பல மட்டங்களில் நடத்தியும் இதுவரை எதுவும் வெற்றி பெறவில்லை. 

அரசாங்கக் கூட்டுக்குள் அமைச்சர்களாகவிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார அணியினரின் பிரதான இலக்காகவிருந்த பசில் ராஜபக்சவிடமிருந்து நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஒரேயொரு விடயத்தைத் தவிர மிகுதி எல்லாமே பழையபடிதான். 

யார் என்னதான் கோசித்தாலும் தாம் பதவி விலகப் போவதில்லையென்ற நிலைப்பாட்டில் கோதபாய விடாப்பிடியாகவுள்ளார். இதன் பிரதிபலிப்பாக, காலிமுகத் திடலில் கூடியிருப்பவர்கள் அந்த இடத்தில் - கோதா கோ கம (கோதா கோ கிராமம்) எனப் பெயர்ப்பலகை நாட்டி தொடர்ந்து போராடுகின்றனர். 

இதற்கு வலுவூட்டும் வகையில் கோதா கோ நூலகம், கோதா கோ பாடசாலை, கோதா கோ உணவகம் போன்ற பல பெயர்ப்பலகைகள் ஆங்காங்கே நாட்டப்பட்டுள்ளன. இவற்றுள் இறுதியாகச் சூட்டப்பட்டது புதியவகை குப்பைத் தொட்டிகள். இருபதாவது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு கோதபாயவுக்கு ஆதரவு வழங்கவென எதிரணியிலிருந்து பாய்ந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்கள் இந்தத் தொட்டிகளில் ஒட்டப்பட்டு, ஜனநாயகத்தை விற்பனை செய்தவர்கள் என்று கீழே பொறிக்கப்பட்டுள்ளது. 

ராஜபக்சக்களிடம் கையூட்டல் பெற்று பல்டி அடித்தவர்கள் என்பது இதற்கான அர்த்தம். 

தொங்குநிலையிலுள்ள ஆட்சித்தரப்பு இன்றும் அவ்வழியிலேயே பயணிக்கிறது. சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சாந்த பண்டாராவுக்கு ராஜாங்க அமைச்சர் பதவி கொடுத்து தம்பக்கம் இழுத்துள்ளது. இத்தொடரில் இன்னும் சிலர் பேரம் பேசப்படுகின்றனர். 

வேட்டி  மட்டுமன்றி கௌபீசணமும் அவிழும் நிலையிலுள்ள அரசு, வங்குறோத்து நிலையை பிரகடனம் செய்துள்ளது. ஆங்கிலத்தில் இதனை பாங்கிரப்சி என்பர். வெளிநாடுகளில் பெற்ற கடனை அதற்குரிய தவணைக் காலத்தில் செலுத்த முடியாதென்று அரசு அறிவித்துள்ளது. சில தனிநபர்களும் இவ்வாறு வங்குறோத்து நிலைக்குச் செல்வது வழக்கம். இவ்வாறு வங்குறோத்து நிலைக்குச் செல்பவர்களை - எட்டாம் கட்டைக்கு எழுதப்பட்டவர்கள் என்று, தமிழில் சிலேடையாகக் கூறுவர். இதுவே இன்றைய கோதா ஆட்சியின் நிலைமை. 

இந்த சந்தர்ப்பத்தை போராடுபவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். காலிமுகத் திடலை காணிவேலாக்கக் கூடாது. விடுமுறைகால கொண்டாட்டங்கள் போல மாற்றக்கூடாது. அவித்த மரவள்ளிக் கிழங்கும், புரியாணியும் புதுவருடத்துக்கான கொண்டைப் பணியாரமும் வழங்குவதற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் பார்வை வேறுபடலாம். மழைக்காக அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களைப் பார்த்து, எந்த வெளிநாடு இதன் பின்னணியில் நிற்கிறது என்று கேள்வி எழுப்பவும் இடமளிக்கக்கூடாது. 

பேரம் பேசுவதற்கான அரிய சந்தர்ப்பத்தை கைவிட்டு அரசியல் கட்சிகள் ஆங்காங்கே கூடிக்கலைகின்றன. இந்த சந்திப்புகள் அனைத்திலும் தவறாது பங்குபற்றும் ஒரேயொரு தமிழர் கூட்டமைப்பின் சுமந்திரன். பிரதமர் மகிந்தவையும் தனிமையில் சந்தித்து உரையாடியுள்ளார். ஆனால், தாம் கூட்டமைப்பின் பிரதிநிதியாக இவைகளில் சம்பந்தப்படவில்லையென்று விளக்கம் வேறு கொடுக்கிறார். அரசியலைப் பொறுத்தளவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் இல்லாவிடின் இந்த சந்திப்புகளுக்;கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதை சுமந்திரன் ஒரு தடவை தமக்குத் தாமே கேட்க வேண்டும். 

இப்போதுள்ள நிலையற்ற இலங்கை அரசியல் சூழலில் எதிரணிகள் எதனைச் செய்ய முனைந்து கொண்டிருக்கின்றன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளின் அடிப்படையில் இதனை மூன்று வகையாகப் பார்க்கலாம்:

1. கோதபாயவை வீட்டுக்கு அனுப்புவது, ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவது, இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது என்பவை முதலாவதாக வந்தன. எதிரணிகள் தமக்குள் ஒன்றுபட்டு செயற்படத் தவறியதால் இது சாத்தியப்படாமல் போயிற்று. இந்த நிலைமையை தமக்குச் சாதகமாக பயன்படுத்த முனையும் மகிந்த, தமது பிரதமர் பதவியை புதல்வர் நாமல் ராஜபக்சவுக்கு பெற்றுக் கொடுக்க காரியங்களை ஆற்றுவதாக ஒரு செய்தி வந்துள்ளது. 

2. ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்பம் பெறப்படுகிறது. சஜித் பிரேமதாச இதில் ஒப்பம் இட்டிருப்பதற்கு செய்திகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அறுதிப் பெரும்பான்மைக்குரிய ஒப்பங்கள் பெறத் தவறின், இதுவும் சாத்தியப்படாது. சஜித் மீதுள்ள வெறுப்பினால் ரணில் விக்கிரமசிங்க கோதபாய தரப்புக்கு ஆதரவு வழங்கி வருவதையும் கவனிக்க முடிகிறது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுமானால் தற்போதைய பிரதமர் அறுபது நாட்களுக்கு ஜனாதிபதி பதவியை வகித்தவாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் தன்னைத் தயார்படுத்த வேண்டும். இதுகூட தற்போதைய அரசியல் அமைப்பில் திடமாகக் காணப்படவில்லையென்று சில தரப்புகளால் சுட்டிக்காட்டப்படுகிறது. 

3. இம்பீச்மன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஜனாதிபதியை பதவி நீக்கும் குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றும் முயற்சியும் இடம்பெறுகிறது. இதற்கான ஆவணத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பம் பெறப்படுகிறது. இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதனை தெரிந்து கொள்வதற்கு 1991ம் ஆண்டின் நிகழ்வொன்றுக்கு நினைவை கொண்டு செல்ல வேண்டும். 

1991 செப்டம்பர் மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை பதவி நீக்க முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் பிரேரணை எவ்வாறு கருவிலேயே கலைக்கப்பட்டது என்பதை பலரும் மறந்திருக்கலாம். பிரேமதாசவுடன் ஒத்துப்போகாத அமைச்சர்களான லலித் அத்துலத் முதலியும், காமினி திசநாயக்கவும் இம்முயற்சியில் மிகமிக ரகசியமாக ஈடுபட்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பங்களைப் பெற்று சபாநாயகரிடம் கையளிக்கவிருந்த வேளையில், சபாநாயகர் எம்.எச்.மொகமட் தீடிரென நாடாளுமன்ற கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்தார். 

அத்துடன் நிறுத்தாது, பிரேரணையில் ஒப்பமிட்டவர்களில் சிலர் அது தங்களுடைய ஒப்பமில்லையென்று கூறியதாகவும் தெரிவித்து பிரேரணையை நிராகரித்தார். ஜனாதிபதி பிரேமதாசவின் ஆலோசனையில் (உத்தரவில்) இது இடம்பெற்றது என்பது பரம ரகசியம். இதன் அடுத்த கட்டமாக லலித் அத்துலத் முதலியையும் காமினி திசநாயக்கவையும் அமைச்சர் பதவியிலிருந்து பிரேமதாச வெளியே வீசினார். 

இப்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருப்பவர் கோதபாயவின் கட்சியைச் சேர்ந்த அவரின் நம்பிக்கைக்குப் பாத்;திரமானவர். இவரும் அன்றைய சபாநாயகர் மொகமட் போன்றே நடந்து கொள்வார் என்பது நிச்சயம். இந்தச் சூழ்நிலையில் குற்றவியல் பிரேரணை எதிர்பார்க்கும் பலனை அளிக்காதென்றே சொல்ல வேண்டும். 

மறுபுறத்தில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை இழுத்தடித்து, அவர்களின் ஊக்க சக்தியை குறைப்பதில் ராஜபக்சக்கள் சாதுரியமாக செயற்படுகிறார்கள். கள நிலைவரமும், ராணுவ பக்கபலமும், எதிரணியினரை கையூட்டி தம்வசப்படுத்துவதும் ராஜபக்சக்களுக்கு சாதகமாகவே உள்ளது. 

போராட்டம் நடத்துபவர்கள் - முக்கியமாக இளந்தலைமுறையினர் தங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. எப்படிப் போராடுகிறோம் என்பது முக்கியமல்ல, எதற்காக போராடுகிறோம் என்பதை மறவாது அதற்கான பாதையில் பயணிக்க வேண்டும். 

No comments