அடைக்கலம் கோரி காத்திருந்த உறவு மரணம்



இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து 2019 ஏப்ரலில் படகு ஒன்றில் அங்கு வந்து கரை சேர்ந்த சுமார் 120 பேரில் ஒருவரான கிழக்கு இலங்கையைச் சேர்ந்த சேந்தன் என்ற 36 வயதான இளைஞரே அவரது தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.அவரது மேன்முறையீட்டு மனுவின் முடிவு இன்னமும் கிடைக்கவில்லை என்று நண்பர்கள் தகவல் தந்துள்ளனர். 

தங்கியிருந்த இடத்தில் சில தினங்களுக்கு முன்னர் அவர் கழிப்பறையில் மயங்கி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த வேளை உயிரிழந்தார் என்பதை அங்கு அவருடன் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சிலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன்உடலை தாயகத்துக்குக் கொண்டு செல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் குடும்பத்தினரது சம்மதத்துடன் அவரது உடல் வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கேயே தகனம் செய்யப்படவுள்ளதாக நண்பர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

ரியூனியன் தீவுக்கு வந்த படகு அகதிகள் 160 பேரில் சுமார் அரைப்பங்கினர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். ஏனையோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களில் சிலருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. அனுமதிமறுக்கப்பட்டவர்கள் பலர் மேன்முறையீடுசெய்து விட்டு இன்னமும் அங்கு காத்திருக்கின்றனர்.

No comments