தவறை ஒப்புக்கொண்டால் தண்டனையிலிருந்து விதிவிலக்கா? பனங்காட்டான்


சாதாரண ஒரு குடிமகன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் சட்டமும் நீதியும் என்ன செய்யும்? ஒரு நாட்டையே அதலபாதாளத்துக்கு தள்ளிய அதன் தலைவர் தமது தவறை ஒப்புக் கொண்டால் ஆகக்குறைந்த தண்டனையாவது வழங்க வேண்டாமா? போராடும் மக்கள் அதனையே கேட்கின்றனர் - கோதா கோ ஹோம்!

கோதபாய வீட்டுக்குப் போ என்ற கோசத்துடன், மிரிகானவிலுள்ள அவரது தனிப்பட்ட இல்லத்துக்கு முன்னால் மார்ச் மாதம் 31ம் திகதி தன்னெழுச்சி முனைப்புப் பெற்ற மக்கள் போராட்டம் மூன்று வாரங்களைத் தாண்டியுள்ளது. 

நாட்டின் கஜானாவை காலி செய்த ராஜபக்சக்களை கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன் காலிமுகத்திடலில் ஆரம்பித்த மாபெரும் பேரெழுச்சியும் இரண்டு வாரங்களைத் தாண்டிற்று. 

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆங்காங்கே வீதி மறிப்புகள், சுலோக எழுச்சிகள், ஊர்வலங்கள் இடம்பெறுகின்றன. அரசியல் கட்சிகள் எதனதும் தலைமையின்றி, அரசியல்வாதிகள் எவரதும் பங்கேற்பின்றி இலங்கை வரலாற்றில் இடம்பெறும் ஆட்சிக்கு எதிரான முதலாவது தொடர் போராட்டமென்றே இதனைக் கூற வேண்டும். 

இவைகளைப் பார்க்கும்போது கோதபாயவும் அவரது கும்பலும் ஆட்சிபீடத்திலிருந்து துரத்தப்படும் காலம் தூரத்தில் இல்லை என்பது போலவே தோற்றம் தருகிறது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் சாதகமாகக் காணப்படவில்லை என்பதே யதார்த்தம். 

மக்களின் தன்னெழுச்சியைத் தடுக்காது, அவர்களுக்கு அதற்கான ஜனநாயக இடைவெளி உரிமையுண்டு என்று கூறியவாறு, அதனை அவர்கள் தொடர தடை விதிக்காதது போல காட்டிக் கொண்டு, மறுதரப்பில் என்ன நடைபெறுகிறது? கால இழுத்தடிப்பு போராட்டத்தின் வேகத்தை இழக்கச் செய்யும் என்ற சூத்திரத்தை கோதபாய பயன்படுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. இதனை அவரது பற்றாளர்கள் கோதபாய கோட்பாடு என்கின்றனர். 

அதேசமயம் போராட்டக்காரரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்ற நாடகத்தை கோதபாயவும் மகிந்தவும் - தனித்தும் இணைந்தும் அரங்கேற்றுவதைக் காணலாம். அடுக்கடுக்காக இடம்பெறும் சில நிகழ்வுகளை கூர்ந்து நோக்கின் இது புலப்படும். 

நிறைவேற்று அதிகாரத்தை மீளாய்வு செய்ய (ரத்துச் செய்யவல்ல) ஜனாதிபதி கோதபாய தயார் என்று ஒரு தகவல் பரபரப்பாக வந்தது. 

அதனையொட்டிய முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் என்ற வகையில்; மகிந்த மேற்கொள்வதாக இன்னொரு தகவல் வந்தது. 

கோதபாயவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இருபதாவது அரசியல் திருத்தத்தில் சிலவற்றை நீக்கி, நல்லாட்சிக் காலத்தில் நிறைவேறற்ப்பட்ட இருபதாவது திருத்தம், அதற்கு முன்னையை பத்தொன்பதாவது திருத்தம் போன்றவற்றின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருபத்தோராவது அரசியல் திருத்தம் வருமென்று மற்றொரு தகவல் வந்தது. 

அடுத்து, நாடாளுமன்றத்துக்கு கூடிய அதிகாரங்களைக் கொடுப்பதுடன் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வரவிருப்பதாக மேலதிக தகவல் வெளியிடப்பட்டது. 

இந்தத் தகவல்கள் அனைத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு சகோதரர்களுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளால் அவ்வப்போது பரிமாறப்பட்டன. மக்கள் குரலுக்கு ராஜபக்சக்கள் செவி சாய்ப்பது போன்றதாக இவைகள் அமைந்தன.

இதற்கிடையில் முன்னைய அமைச்சரவைக்குப் பதிலாக புதிய - சிறிய அமைச்சரவையை கோதபாய நியமித்தார். இதில் ராஜபக்ச குடும்பத்தினர் சேர்க்கப்படவில்லை. ராஜாங்க அமைச்சர்களாக பணியாற்றிய இளையவர்கள் பலருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

போராட்ட அச்சம் காரணமாக பழைய - முதிய அமைச்சர்கள் சிலர் தாமாகவே ஒதுங்கியதாக செய்திகள் வந்தன. அதேசமயம் அமைச்சர் பதவியில் ஆசை கொண்ட சிலருக்கு இடம் கிடைக்கவில்லை (காலக்கிரமத்தில் இவர்களை எவ்வாறு அமைச்சராக்குவது என்பது கோதபாயவுக்குத் தெரியும்). 

பொதுமக்களின் போராட்ட கோரிக்கை கோதபாயவையும் ராஜபக்சக்களையும் வீட்டுக்கு அனுப்புவது என்பதே. ஆனால் கோதபாய அதனை கவனிக்காதவர் போன்று தம் விருப்பப்படி அமைச்சரவையை மாற்றியமைத்தார். புதிய அமைச்சரவை விடயத்தில் தாம் சம்பந்தப்படாதவர்போல, அல்லது தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு நடைபெறாதது போல காட்டிக் கொள்ள விரும்பிய மகிந்த, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வைத் தவிர்த்துக் கொண்டார். 

இவைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச, தமது சித்தப்பாவான கோதபாயவின் செயற்பாடுகளை விமர்சிப்பவராகவும், போராட்டக்காரர்களின் குரலுக்கு சாதகமாகவும் கரிசனையை வெளிப்படுத்தி வந்தார். முக்கியமானது, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற இவரது கருத்து. 

அதேசமயம், அரசமைப்பு மாற்றங்கள் விடயத்தில் மகிந்தவின் செயற்பாடுகளையும் கருத்துகளையும் கோதபாய விரும்பவில்லையென்றும், இருவருக்குமிடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு ஒரு தகவல் கசிய விடப்பட்டது. இதனைக்கூட திட்டமிட்ட ஒரு நாடகம் எனச் சிலர் சொல்கின்றனர். இந்த நாடகத்தினூடாக, மகிந்த எடுக்கும் பிந்திய நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி, அதனூடாக கோதபாயவின் ஆட்சியை தக்க வைப்பதே நோக்கம். இதன் வழியாக காலக்கிரமத்தில் நாமலை ஆட்சியில் இணைத்து அவருக்கான எதிர்காலத்தை நிச்சயிப்பதில் மகிந்த அக்கறையோடு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இரண்டு முக்கியமான - எதிரும் புதிருமான விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றன. 

1. அரசியலமைப்பின் புதிய திருத்தத்துக்கான முன்மொழிவை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துகம சபாநாயகரிடம் கையளித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இ;ல்லாதொழித்து பாராளுமன்ற அதிகார முறையை உருவாக்கும் யோசனைக்கான பிரேரணை இது. 

2. ஜனாதிபதி கோதபாயவின் கீழ் பிரதமராகவிருக்கும் மகிந்த தலைமையில் தொடர்ந்தும் ஆட்சி நடத்துவதற்கு அரச தரப்பு எம்.பிக்கள் பூரண ஆதரவு வழங்கும் பிரேரணை அரசாங்க நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியுள்ளது. (இடைக்கால அரசு அமைப்பைக் கேட்கும் அரச தரப்பு சகாக்கள் சிலரின் குரலை மடக்க எடுக்கப்பட்ட முயற்சி).

ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள பிரேரணை எப்போது விவாதிக்கப்படும், பிரேரணை நிறைவேற அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க இது வழிவகுக்குமா என்பவை கேள்விக்குறி. இதுபோன்ற பிரேரணை ஒன்றை மகிந்த ராஜபக்ச சமர்ப்பிக்கப் போவதாக செய்திகள் வந்த நிலையில், அதனைப் பரீட்சித்துப் பார்க்க சஜித் அணி மேற்கொள்ளும் அமில சோதனையாக சிலர் இதனைப் பார்க்கின்றனர். 

மகிந்த தலைமையிலான நாடாளுமன்ற அதிகாரத்தைத் தொடர ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை கோதபாயவின் கரத்தை பலப்படுத்துமா அல்லது மகிந்தவின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துமா என்பதுகூட பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவை. 

இந்தச் செயற்பாடுகளுக்கு அப்பால் புதிய அமைச்சரவையின் முன்னால் கோதபாய ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் முக்கிய கவனத்துக்குரியவை. 

விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, தொழில்வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி போன்றவைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள கோதபாய, ரசாயன உரத்தடை போன்றவைகளை தவறு என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். 

இருபது ஆண்டுகள் முப்படைகளின் அதிகாரியாக இருந்து ஆற்றிய சேவைக்காக தமக்குத் தாமே புகழாரம் சூட்டியுள்ள இவர், நாட்டின் நிறைவேற்று அதிகார தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ஆட்சிக்காலத் தவறினை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் பேரெழுச்சி வழிவகுத்தது. உண்மையைச் சொல்வதானால், மனவிருப்பம் இன்றியே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை இவர் அளிக்க நேர்ந்திருக்கும். . 

இவ்விடத்தில் எழுகின்ற ஒரு கேள்வி முக்கியமானது. சாதாரண ஒரு குடிமகன், நீதிமன்ற வழக்கொன்றில் தமது தவறை ஒப்புக்கொண்டால் சட்டமும் நீதியும் என்ன செய்யும்? நீதி என்பது நீதியாக வழங்கப்படுமானால் ஆகக்குறைந்த தண்டனையாவது வழங்கப்படும். தவறினை ஒப்புக்கொண்டு விட்டால் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது. 

முழு நாட்டையும் அதலபாதாளத்துக்குள் தள்ளி நாடு தழுவிய மக்கள் போராட்டத்துக்குக் காரணமான கோதபாய வெறுமனே ஷதப்பு| என்று கூறியதால் தப்பிச்செல்ல விட முடியுமா?

ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார நாடாளுமன்றில் உரையாற்றும்போது 'சிரித்துக் கொண்டே படுகொலை செய்ய கோதபாயவால் மட்டுமே முடியும்" என்று குறிப்பிட்டதை, ஷபடுகொலை புரிந்தவாறே சிரிக்கவும் கோதபாயவால் மட்டும்தான் முடியும்| (உதாரணம்: முள்ளிவாய்க்கால் படுகொலைகள்) என்ற உண்மையின் வழியாக, தமது தவறை ஒப்புக்கொண்ட அவரை வீட்டுக்கு அனுப்புவதே ஆகக்குறைந்த தண்டனையாக அமைய வேண்டும் என்பதே போராடும் மக்களின் ஏகோபித்த குரல் - கோதா கோ ஹோம்!

No comments