வாழ வழியில்லை: தனுஷ்கோடிக்கு வந்த குடும்பம்


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  மட்டக்களப்பைச்  சேர்ந்த  ஒரு பெண்,  சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த  3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

அவர்கள் நேற்று இரவு இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகு மூலம் புறப்பட்டு வந்துள்ளனர். அதிகாலை 5 மணி அளவில் தனுஷ்கோடிக்கு வந்து இறங்கியுள்ளனர்.

தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை  மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு ஏற்பட்டு விட்டதால் அங்கு வாழ வழியில்லை. இதனால் தமிழகத்திற்கு வந்து விட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை வந்தடைந்த மூவரும் இலங்கை மட்டக்களப்பு திமிலை தீவு பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி வர்ஷினி (வயது 37) என்ற பெண், தனது குழந்தைகளான நைனிகா(வயது 11), ரங்கிசன்(வயது 4) ஆகியோருடன் வந்துள்ளார்.

கடந்த சில நாட்களில் மட்டும் இலங்கை தமிழர்கள் 40க்கும் மேற்பட்டோர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments