அமைச்சு பதவியா?பிச்சை வேண்டாம் நாயை பிடி!



இடைக்கால அரசில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை முஸ்லீம் கட்சிகளும் நிராகரித்துள்ளன.

யார் ஆட்சி கதிரை ஏறினாலும் ஒட்டிக்கொண்டு அமைச்சு கதிரை ஏறும் முஸ்லீம் தலைவர்களும் மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி வெளியேறிவருகின்றனர்.

இலங்கையில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளும் நிராகரித்துள்ளன.

அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிப்பதாக நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகிய கட்சிகள் எந்தவொரு சர்வகட்சி, இடைக்கால அல்லது தேசிய அரசாங்கப் பொறிமுறைகளிலும் பங்குபற்றப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளது.

தென்னிலங்கை கட்சிகளும் இக்கோரிக்கையினை நிராகரிப்பதாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியதையடுத்து, தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி நேற்று காலை அழைப்பு விடுத்தார்.

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments