காலியாக நிதி அமைச்சு?இலங்கையின் பொருளாதார குழப்பநிலை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் சீற்றம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்குவதால் நிதியமைச்சர் பதவி தொடர்ந்து காலியாக உள்ளது.

நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை 24 மணிநேரத்திற்குள் இராஜினாமா செய்ததை தொடர்ந்தே இந்த நிலை நீடிக்கின்றது.

ஜனாதிபதி தேசிய பட்டியல் மூலம் சுயாதீன நிபுணர் ஒருவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு உதவும் விதத்திலேயே அலிசப்ரி நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அதன்பின்னர் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.

நிதியமைச்சர் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை உடனடியாக நியமிக்கவேண்டிய நிலை காணப்படுவதால் பந்துலகுணவர்த்தனவை நியமிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் அவர் அது குறித்து தயக்கம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான சீற்றம் தீவிரமடைவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சு பதவியை ஏற்க தயங்குகின்றனர்-இதன் காரணமாக பொருத்தமான ஒருவரை கண்;டுபிடிக்க முடியாத நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சரும் பிரதிநிதிகளும் ஏப்பிரல் இரண்டாவது வாரத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவேண்டியுள்ளதால் உடனடியாக நிதியமைச்சரை நியமிக்கவேண்டிய நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்.

எனினும் முக்கிய நிதிபதவி காலியாக உள்ளதால் - எவரும் நியமிக்கப்படாவிட்டால் சர்வதேசநாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் யார் கலந்துகொள்வார்கள் என்பது குறித்து தெளிவின்மை நிலவுகின்றது.


No comments