சி.வி.கே. அவமானப்படுத்தப்பட்டதற்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு! யாழ் நகர மேயர் ''ரிமோட் கன்ட்ரோலில்'' இயங்குகிறாரா?


செம்மணியில் சி.வி.கே.சிவஞானம் அவமானப்படுத்தப்பட்டதற்கு அவரது செயற்பாடு காரணமல்ல. தமது கட்சிக்காக கதிரை பிடிக்கப் போனதற்று இவருக்குக் கிடைத்த பரிசு இது. இதனால் கட்சியை காப்பாற்ற வேண்டுமென சிந்தனையின்றி குட்டித்  தலைவர்கள் இருவரும் மௌனம் காப்பது ஏன்? இந்தப் பிரச்சனை எழவே காரணமான யழ்ப்பாண நகர மேயர் கதிரையில் இருப்பவர் '' ரிமோட் கன்ட்ரோலில்'' இயங்குவதாகக் கூறப்படுவது உண்மையா?

கடந்த வாரம் சகலராலும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்பட்டது செம்மணி புதைகுழி தொடர்பான அணையா விளக்கு நிகழ்வும், மனித உரிமைகள் ஆணையக தலைவரின் யாழ்ப்பாணத்துக்கான நேரடி விஜயமும். எல்லாம் திட்டமிட்டவாறும், எதிர்பார்க்கப்பட்டவாறும் நடைபெற்ற வேளையில், எதிர்பாராத ஓர் அரசியல் ஆரவாரம் அதற்குள் நுழைந்து அனைத்தையும் திசைதிருப்பிவிட்டது.

இந்த எதிர்பாராத சம்பவம் எதுவென்று குறிப்பிட வேண்டிய தேவையில்லை. சமூக ஊடகங்களின் ஆதிக்கம் உலகத்தின் பார்வையில் அனைத்தையும் நேரடியாகப் பார்க்க வைத்தது. ஆனால், உண்மையை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை. 

இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவதற்கு அத்திவாரம் போட்டது யாழ்ப்பாணம் மாநகர சபையை கைப்பற்றுவதற்கு தமிழரசு கட்சி எடுத்த முயற்சி என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இதன் விளைவாக அவமானப்படுத்தப்பட்டதற்கு உள்ளாகியிருப்பவர் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம். 

செம்மணி புதைகுழி இவரது இருப்பிடத்துக்கு மிக அண்மித்த ஓர் இடம். யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆணையாளராகவும், விசேட ஆணையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நாற்பத்தைந்தில் பதின்மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்ற யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகம் தங்கள் கைகளை விட்டு செல்லக்கூடாது - அதாவது, தமிழரசின் கைகளுக்குள் வரவேண்டுமென்பதற்காக இவர் படியேறி இறங்கிய செயல், ஒரு சிலரால் இவரை அவமானப்படுத்த காரணமாகியுள்ளது.

ஈ.பி.டி.பி.யின் நான்கு ஆசனங்களுக்காக அவர்களை இணைத்ததைத் தவிர்த்து, கஜேந்திரகுமாரின் பன்னிரண்டு ஆசனங்களை இணைத்து அவர்களுக்கும் அரைவாசிக் காலத்தை பங்கு போட்டு மாநகர சபையை கைப்பற்றியிருக்கலாமே என்று சி.வி.கே.யிடம் சிலர் கேட்டதுண்டு. தாங்கள் கஜேந்திரகுமாரிடம் அதனை கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் இதற்கான பதில் அவரிடமிருந்து வந்திருக்கிறது. 

சரி, அதுபோகட்டும். தேர்தல்கால சகல முடிவுகளுக்கும் அதற்கான ஏற்ற இறக்க முயற்சிகளுக்கும் தாமாகவே முடிவெடுத்த கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் டக்ளசிடம் சென்றிருக்கலாமே என்ற கேள்விக்கு, சுமந்திரன் மறுத்துவிட்டார் அல்லது சுமந்திரன் போகமாட்டார் என்பதாக சி.வி.கே.யின் பதில் சில இடங்களில் வந்துள்ளது. அப்படியென்றால் கட்சியைக் காப்பாற்றவும், மாநகர சபையை கைப்பற்றவும் சி.வி.கே. பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதனையும் சுமந்திரனின் கோட்பாடு என்றே குறிப்பிடலாம். 

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியும், யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஒரே பிரதேசம். யாழ்ப்பாணத் தேர்தல் தெரிவும், மாநகர சபையின் தேர்தல் வெற்றியும் எப்போதும் தமிழரசு கட்சியின் ஆதரவுக் களமாக இருந்ததில்லை. இதனை நன்கறிந்த ஒரேயொருவர் சி.வி.கே. அவர்கள் மட்டும்தான். இதன் வரலாற்றை சுருக்கமாக இங்கு பார்க்கலாம். 

1947ம் ஆண்டு, 1952ம் ஆண்டு, 1956ம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார். 1960ம் ஆண்டின் மார்ச் மாதத்திலும் ஜுலையிலும் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் யாழ்நகர மேயராக அல்பிரட் துரையப்பா வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டுத் தேர்தலில் ஜி.ஜி.பொன்னம்பலம் மீண்டும் தொகுதியைக் கைப்பற்றினார். 1970ம் ஆண்டு தேர்தலிலேயே முதன்முறையாக தமிழரசுக் கட்சி வேட்பாளரான சி.எக்ஸ்.மார்ட்டின் இங்கு வெற்றிபெற முடிந்தது. 

ஆனால், 1972ல் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திர கட்சி ஆட்சியில் புதிய அரசியலமைப்பை ஏற்று இயங்கியதால் மார்ட்டின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தமது மனச்சாட்சிக்கு ஏற்ப தாம் வாக்களித்ததாக அவர் கூறியதால் அவரை, ஷமனச்சாட்சி மா டின்| என்று தமிழரசு கட்சியும், கட்சிப் பத்திரிகையான சுதந்திரனும் வாட்டியெடுத்தன. 

யாழ்ப்பாணம் தொகுதியில் 1947ல் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக அருணாசலம் மகாதேவா போட்டியிட்டு தோல்வியுற்றார். 1952, 1956 தேர்தல்களில் தமிழரசு கட்சி நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன் இங்கு போட்டியிட்டு தோல்வி கண்டார். (இதன் பின்னரே நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு இவரால் வெற்றி பெறமுடிந்தது). 1960ம் ஆண்டின் இரண்டு தேர்தல்களிலும் யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழரசு வேட்பாளராக சி.கதிரவேற்பிள்ளை போட்டியிட்டு தோல்வியடைந்தார். (இதன் பின்னரே கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்). 

1975ல் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவான பின்னரே அதன் வேட்பாளராகப் போட்டியிட்ட வெற்றிவேலு யோகேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் வெற்றிபெற முடிந்தது. இந்த வரலாற்றை மீள்நோக்கின் தமிழரசு கட்சிக்கு யாழ்ப்பாணத் தொகுதி ஒவ்வாமையாக இருந்ததை புரிந்து கொள்வது இலகுவாகும். 

யாழ்ப்பாண மாநகர சபையின் வரலாறும் இவ்வாறானதே. 1923ல் பட்டினக் கவுன்சிலாக உருவாகி, 1940ல் பட்டினசபையாகி, 1949ல் இது மாநகர சபையானது. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் சுமார் இருபது வரையான மேயர்கள் பதவி வகித்துள்ளனர். முதலாவது மேயராகத் தெரிவான சாம் ஏ.சபாபதி தொடக்கம் 1975ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகும் வரையான காலகட்டத்தில் இங்கு மேயராகப் பதவி வகித்தவர்களில் ஒரு கை விரலுக்கு உட்பட்டவர்களே தமிழரசு கட்சியினர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. 

இந்தப் பின்னணியைப் பார்க்கையில், இம்முறை எவ்வாறாவது மாநகர ஆட்சிக் கதிரையை கைப்பற்ற வேண்டுமென தமிழரசுக் கட்சி திட்டமிட்டதில் நியாயம் உண்டு. ஆனால், அதற்காக யாருடன் சேர வேண்டுமென்பதை அவர்கள் உணராமல் போனதே பலரது புருவத்தையும் உயர வைத்தது. 

2018ம் ஆண்டில் தங்களின் ஆனோல்டை இங்கு மேயராக்குவதற்கு ஈ.பி.டி.பி.யின் ஆதரவை தமிழரசு கட்சி பெற்றது. ஆனால், இது காதும் காதும் வைத்ததுபோல காரியமாக்கப்பட்டது. இம்முறை தமிழரசு ஆதரவு கேட்டால் அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று டக்ளஸ் விரும்பியதும், ஜனநாயக தமிழ் கூட்டணியின் தலைவர் சித்தார்த்தன் டக்ளசை சந்தித்து தாங்கள் இணைந்திருக்கும் கஜேந்திரகுமாரின் பேரவைக்கு ஆதரவை பெற்றுவிடுவதற்கு முன்னர் தாங்கள் அதனை பெற்றுவிட வேண்டுமென்ற அரசியல் விளையாட்டு சி.வி.கே. அவர்களுக்கு வினையாகி விட்டது. இதன் விளைச்சலையே செம்மணி அணையா விளக்கில் அவருக்கு புரிய வைக்கப்பட்டது. 

செம்மணி நிகழ்வுக்கு சி.வி.கே. அவர்கள் இரண்டாம் நாளும் சென்றிருந்தார். எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. மூன்றாம் நாள் சென்றார். மலரஞ்சலி நிகழ்த்தினார். சில நிமிடங்கள் அங்கு தங்கிவிட்டு வாகனத்தை நோக்கி செல்லும்போதே ஒரு சிலரால் தகாத வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டார். அணையா விளக்கு ஏற்பாட்டாளர்கள் தங்களால் முடிந்தவரை நிலைமையை கட்டுப்படுத்தி நிலைமையை பாதுகாத்தனர். இதுவெல்லாம் தெரிந்த விடயங்கள். 

அசம்பாவிதத்தை முன்னின்று செயற்படுத்தியவர் சில காலத்துக்கு முன்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்   சி.வி.கே. பகிரங்கமாகக் கூறுகிறார். அந்த நபர் இப்போது கிளிநொச்சி சிறீதரனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். தம்மைக் கட்சியிலிருந்து நீக்கியதற்காகவே பொதுவெளியில் சி.வி,கே. அவர்களை பழிவாங்க வேண்டுமென இவர் விரும்பியுள்ளார். இதனால் சிலவேளை அவர் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் இச்சம்பவம் முழுத்தமிழரையும் தலைகுனிய வைத்திருக்கிறது என்பதை அவர் அறிவாரோ தெரியாது. 

தமது ஆதரவாளரின் தகாத செயலுக்காக சிறீதரன் சி.வி.கே.யிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இதனை பகிரங்கமாக அல்லது ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க அவர் ஏனோ விரும்பவில்லை. தொட்டதற்கெல்லாம் அறிக்கை விடுவதையே வாலயமாகக் கொண்ட கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் இவ்விடயத்தில் எந்த அறிக்கையும் விடாது மௌனம் காக்கிறார். செம்மணியில் கிடைத்த அவமானம் தங்கள் கட்சிக்கானதல்ல என்று இரண்டு குட்டித் தலைவர்களும் எண்ணுகிறார்கள் போலும். 

இன்னொரு முக்கியமான விடயம் மாநகர சபையின் மேயராகத் தெரிந்தெடுக்கப்பட்ட பெண்மணியால் அதன் கூட்டங்களை நேர்த்தியாக நடத்த முடியாமலிருப்பது. ஒரு பெண்மணியை மேயராக்கியது நல்ல அறிகுறி. ஆனால் இவருக்கு இப்பதவியை வகிக்கக்கூடிய அரசியல் அனுபவமோ ஆளுமையோ இருக்குமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. வெளியிலிருக்கும் யாரோ ஒருவரால் இவர் வழிநடத்தப்படுவதாக உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேயர் பதவியை வகிப்பவர் தமக்கு நம்பிக்கையானவர்களின் ஆலோசனையை தேவைப்படும்பொழுது பெறுவது தவறல்ல. கட்சி அரசியலில் இது வழமையான முறை. அதற்காக, மக்களால் தெரிவாகி, கட்சியால் கதிரையில் அமர்த்தப்பட்டவர் ''ரிமோட் கன்ட்ரோலில்'' இயங்குவது நீண்ட காலத்துக்கு அக்கதிரையில் தங்க விடாது. 

No comments