அமெரிக்க தூதரக முகவர்களும் ஆதரவு!இலங்கையின் தற்போதைய பொருளாதாரக்கையறு நிலையின் பின்னணியில் தீவில் பரிணமித்து வரும் நிகழ்வுகள் முற்றாக இயல்பிலும், பண்பிலும் புதியவை. அது மட்டுமன்றி தென்னிலங்கையின் நவீன வரலாற்றில் முன்னுதாரணங்கள் அற்றவையுமாகும். குறிப்பாக இப்போராட்டங்களில் தெற்கின் இளையோரின் ஈடுபாடும், பங்கேற்பும் நம்பிக்கை தருவனவாக உள்ளதாக அமெரிக்க தூதுவராலயத்தால் இயக்கபடும் தனிநபர்களது வடகிகழக்கு சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாள்களாக காலிமுகத்திடலில் தெற்கின் பொது மக்கள் - குறிப்பாகவும் பெருமளவிலும் இளையோர் - நடாத்தி வருகின்ற ஆக்கிரமிப்புப் (இருப்புப்) போராட்டம் தெற்கிற்கு முற்றாகப் புதியது.

காலம் காலமாக எம்மைக் கொன்று குவித்த உங்கள் அரசுத் தலைவர்கள் இன்று உங்களை நோக்கியும் ஆயுதங்களைத் திருப்பியுள்ளனர். உயிரிழப்புகளின் வலி எமக்கு நன்கு புரியும். எங்கள் இதயங்கள் பல்லாயிரக்கணக்கான எம்மவர் இறப்புகளால் உணர்வற்று மரத்துப்போய்விடவில்லை. மேலும் இளகிய உணர்வுகளுடன்தான் உள்ளது. இரம்;;புக்கணையின் அரச வன்முறைகளும் இழப்புகளும் இன்றும் கூட எம் மனங்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

இந்நிலையில் தீவின் இன்றைய பொருளாதார நிலை தொடர்பாக தெற்கின் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்ற சகல வகையான எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் தனது தார்மீக ஆதரவைத் தெரிவிக்க தமிழ் சிவில் சமூக அமையம் விரும்புகின்றது.

ஆனாலும் தமிழர்களாகிய எமது கடந்த எட்டு தசாப்தகால வாழ்வியல் அனுபவம்;, மனத் தடைகள் ஏதுமின்றித் தெற்கின் பொது மக்களுடன் அவர்களின் போராட்டங்களில் கை கோர்ப்பதை தடுத்து நிற்கின்றது.

இலங்கையின் இன்றைய பொருளாதாரக் கையறு நிலைக்கு காரணமானவர்கள் யாரென்ற கேள்வியை எழுப்பி அதற்கு இராஜபக்ச குடும்பத்தினரே காரணமென நிறுவி நிற்கின்றனர் தென்பகுதி மக்கள். அந்த கற்பிதத்தின் வழியில் அவர்கள் ‘கோட்டா கோ கோம்’ என்ற கோஷத்துடன் வரலாறு காணாத வகையில் எழுச்சி பெற்றுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களாகிய எங்களின் வேதனை மிகு வரலாறு வேறுவிதமான அனுபவத்தையே  எங்களுக்குத் தருகின்றது.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும், மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புதல் என்ற கருப் பொருளிலேயே வெற்றி கொள்ளப் பட்டது. குறிப்பிட்ட ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புதல் மட்டும் போதுமானதல்ல என்பதைச் சுட்டிப்பாகக் காட்டும் மிக அண்மைய வரலாற்று உதாரணம் இது. அந்த ஆட்சி மாற்றத்தால் தமிழ்த் தேசத்தின் கட்டமைப்புகள் மீது காலங்காலமாக நடாத்தப்பட்டு வந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளில் எந்த மாற்றமோ அல்லது தொய்வோ ஏற்படவில்லை என்பதையும் எம்மால் மறக்க முடியாதுள்ளது. 

‘சுதந்திர’ இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு, தமிழர்களதும் மலையகத் தமிழர்களதும் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்கும் வலுவின்றி இருந்தது. அதே வேளை  பின் வந்த அரசியலமைப்புகளோ சிங்கள பௌத்தர்களல்லாத தேசத்தவர்களையும், சமூகங்களையும் ஒடுக்குவதைப் பிரதான நோக்கங்களிலொன்றாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒடுக்குமுறைகளை விரைவாகவும், திறனாகவும் செய்வதற்கு ஏதுவாக, அரசமைப்பில், மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பு உள்ளடக்கப்பட்டது. அரசியலமைப்பின் அடிப்படையிலே அரசும் சிங்கள பௌத்த மேலாதிக்கக் குணாம்சத்தைப் பெற்றுக் கொண்டது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளும், பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் கொள்கைகளும், நடைமுறைத் தீர்மானங்களும், இவ்வரசியலமைப்புகளின் பின் புலத்திலும் பலத்திலுமே மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் தான் பண்டா, டட்லி, சிறிமா, ஜே. ஆர், பிரேமதாசா, சந்திரிகா, ரணில், ராஜபக்சக்களை உருவாக்கின.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் சகல அரசுகளாலும் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளை அறுவடை செய்யும் இந்தக் காலப்பகுதியில் பதவியில் உள்ள ஒரே காரணத்துக்காக இராஜபக்ச குடும்பத்தை மட்டும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களாக முன்னிறுத்தி ஏனைய சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இவற்றுக்கெல்லாம் ஒத்தூதிய அதிகாரிகளுக்கும் பாவமன்னிப்பு வழங்கும் தெற்கின் போக்கு இன்று, நேற்றுத் தோன்றிய ஒன்றல்ல.

இலங்கையின் நவீன வரலாறு முழுவதும் ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அரசாங்கங்களும் ஊழல் மிகுந்தவர்களாகவும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர்களாகவுமே இருந்துள்ளனர். அவர்களின் ஊழல்கள், தவறான பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் சிங்கள பௌத்த மேலாதிக்க அபிலாசைகளின் காவலர்கள் என்று அவர்களின் பாத்திரத்துக்கு அவர்கள் விசுவாசமாகச் செயற்பட்ட காரணத்தால் கண்டு கொள்ளப்படாமலேயே விடப்படடன. அதன் இறுதி விளைவுதான் இன்றைய நிலை என்பதே வரலாறு எமக்குத் தந்த அனுபவமாகும்.

ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் தமிழ்த் தேசத்தை இனவழிப்புச் செய்வதற்காக தொடர்ச்சியாகச் செய்துவருபவையான - அந்நியச் செலவாணியை உழைத்துத்தந்த மலையகத் தமிழரின் குடியுரிமைப் பறிப்பாகட்டும், அபிவிருத்திக்கான விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் என்ற பெயரில் கோடானு கோடிகளைக் கொட்டி தமிழர் தாயகத்தில் செய்யப்பட்ட நில ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களாகட்டும், நாட்டின் காற்பங்கினரின் மொழியுரிமையைத் தட்டிப்பறித்து அவர்களை உழைப்பாளர் அணியிலிருந்து அகற்ற முயன்ற தனிச் சிங்களச் சட்டமாகட்டும், அரச வேலைக்கு சிங்களம் கட்டாயமாக்கப்பட்டு அரச வேலைகளில் தமிழர்களின் பங்கைக் குறைக்கும் முயற்சியாகட்டும், தமிழர்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்று விடக்கூடாது என்பதற்காக போரின்போது மட்டுமன்றி போரின் முன்னரும் பின்னரும்கூட அரசுகள் தொடர்ச்சியாகத் திட்டமிட்ட வகையில் செய்த அபிவிருத்திப் புறக்கணிப்புகள், பொருளாதார அழித்தொழிப்புகள், தமிழர்களிற்கான கல்வி வாய்ப்புகளின் மீதான சீரழிப்புகள், தொழிற் சக்தியான தமிழ் இளைஞர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட நெருக்கடிகள் மூலம் அவர்களைத் தீவை விட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் - இவை அனைத்துமே நாட்டின் பொருளாதார நலன்களுக்கும் அபிவிருத்திக்கும் பாதகமானது என்றோ பொருளாதாரத்தை வீழ்த்தும் என்றோ தெற்கில் ஒரு சிலரைத் தவிர எவருமே உறுதியாகக் கூறியதில்லை, யாரும் எதிர்த்து நின்றதில்லை. இன்றும் கூட யாரும் கூறவுமில்லை. மாறாக, இத்தகைய இனவழிப்பு நாசங்களைச் செய்வோமென வாக்குறுதி தந்தவர்களே தேர்தல்களில் வெற்றி பெற வைக்கப்பட்டனர். செய்தவர்கள் தேசிய வீரர்களாகப் போற்றப்பட்டனர்.

இனக்கலவரங்கள் எனப் பெயரிடப்பட்டு காலத்துக்குக் காலம் (1956, 1958, 1977, 1983) தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளினாலும் சொத்துக்களின் அழிப்பினாலும் முழுநாட்டினதும் பொருளாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது என்பதை முன்னுணர்ந்து, அதன் விளைவாக இனக்கலவரங்களுக்கு காரணமாயிருந்த அல்லது அதைத் தடுக்கத் தவறிய  எந்த தென்பகுதி அரசியல்வாதியும் அடுத்து வந்த தேர்தல்களில் அவற்றுக்காக நிராகரிக்கப்பட்டதில்லை.

தமக்கெதிரான இத்தகைய இனவழிப்பு விடயங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக நடாத்திய சாத்விகப் போராட்டங்கள் வன்முறை கொண்டு அடக்கப்பட்டன. குறிப்பாக இதே காலி முகத்திடலில் இற்றைக்கு 66 ஆண்டுகளுக்கு முன்னர் 1956 ஜுன் 05ல் இன்றைய நாட்களைப் போலவே அமைதியாக தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமர்ந்திருந்த தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கும் அதேநாள் கல்லோயாக் குடியேற்றத்திட்டப் பகுதியில் 150 அப்பாவித் தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் மனிதாபிமான அடிப்படையிலன்றி ஆகக் குறைந்தது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதகமானது என்ற அளவில் கூட எதிர்ப்புத் தெரிவித்து தெற்கின் எந்த ஒரு அரசியல்வாதியும் குரலெழுப்பியதில்லை. அவ்வாறு குரலெழுப்பக் கூடிய ஒரு அரசியல் தலைவர் அங்கு தோற்றம் பெற்றதுமில்லை. அதற்கான பிரதிபலிப்பு தென்பகுதிப் பொதுமக்களிடம் கூட காணப்பட்டதுமில்லை.

தமிழர்கள் இவ்வாறெல்லாம் தமது நியாயமான அரசியல் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு சாத்விக வழிப்போராட்டங்களும் வன்முறைகள்மூலம் புறக்கணிக்கப்பட்ட போது, ஆயுதமேந்திப் போராட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர். அப்போது தமிழர்களுடனான முரண்பாடுகளை வன்முறையற்ற வழிகளின் மூலம் தீர்க்க வேண்டும் என்று தெற்கிலிருந்து  யாரும் புறப்பட்டதில்லை. அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. மாறாக நாட்டின் செல்வத்தை அழித்தும் கடன்களை வாங்கியும் இனவழிப்புப்போரைத் தொடர்ந்த அரசின் ஆயுத அடக்கு முறைகளுக்கு தெற்கு எப்போதும் ஆதரவாக இருந்ததுடன் அதற்கு பொருத்தமானவர்களென தாம் கருதியவர்களையே தேர்தல்களில் தெரிவு செய்தும் வந்தது.

அனைத்தினதும் உச்சமாக 2006 முதல் தமிழ் மக்கள் மீதான தனது ஆக்கிரமிப்புப் போரை மனிதாபிமான மீட்பு யுத்தம் என்ற நயவஞ்சகத்தனமான பெயரில் முன்னெப்போதையையும்விட கொடூரமான  பாரிய தமிழினப் படுகொலைகளுடன் இராஜபக்ச அரசு செய்து வந்தது. ஈற்றில் 2009ல் முள்ளிவாய்க்காலில் 21ம் நூற்றாண்டிற்கான உலகின் முதலாவது இனப்படுகொலையுடன் தமிழரின் ஆயதப் போராட்டத்தை அரசு முடித்து வைத்தது. அப்போது அதைப் பெருவெற்றியாகக் கொண்டாடிய தெற்கு இன்று அதே ‘வெற்றி’யின் நாயகர்களை வீட்டிற்குப் போ எனக் கொந்தளித்து எழுச்சியுற்று நிற்பது காலத்தின் முரணேயன்றி வேறென்ன?

இன்று இராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்களால் அதிர்ச்சியுற்றுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் இதே தெற்குத்தான் 2019ன் ஜனாதிபதி தேர்தலிலும் 2020ன் பாராளுமன்றத் தேர்தலிலும் இராஜபக்ச குடும்பத்தினரை அமோக வெற்றி பெற வைத்தவர்கள் என்பதை மறக்க முடியாது.  2015ல் தெற்கில் இராஜபக்ச குடும்பத்தினர் 10 ஆண்டுகளாகச் செய்த ஊழல்களால் துவண்டிருந்த சிங்களவர்கள் வாக்களிப்பில் சலிப்புற்று பங்கேற்காமல் இருந்தத அதே வேளை தமிழ் பேசும் தேசங்களின் வாக்குகள் இராஜபக்சக்களுக்கு எதிராக ஒன்று திரண்டதனால்; இராஜபக்ச குடும்பம் அரசமைக்கும் உரிமையை இழந்தது. ஆனால் 05 ஆண்டுகளுக்குள் ஈஸ்ரர் தாக்குதல்களின்மூலம் முஸ்லிம்கள் மேல் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு, ‘சிறுபான்மையினர்’ எமது நாட்டின் தலைவரைத் தீர்மானிப்பதா என்ற மேலாதிக்க மனப்பான்மையால் ஏற்பட்ட  ஆத்திரம், ரணில் - மைத்திரி அரசாங்கள் தமிழர் கேட்கும் அரசியல் உரிமைகளைக் வழங்கப் போகின்றார்கள் என்ற தவறான கணிப்பு என்பவற்றால் சிங்கள தேசம் ஒன்றென பேரெழுச்சி கொண்டது. தெளிவான ஊழல் வரலாற்றைக் கொண்ட இராஜபக்ச குடும்பத்தை தெற்கு மீளவும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. ஐந்து ஆண்டுகளில் சிங்கள மக்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கான காரணத்தின் சாராம்சம் என்ன? தென்பகுதி வாக்காளர்;களுக்கு இராஜபக்சக்களின் ஊழல்வாதிகள் என்ற அடையாளத்திலும் விட போட்டியில் நின்றவர்களுக்குள் இராஜபக்சக்களே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் விட்டுக் கொடுப்பற்ற பாதுகாவலர்கள் என்ற அடையாளமே முக்கியமான தீர்மானத்திற்குரிய விடயமாக இருந்தமையே.

இன்றும் கூட தமிழர்களிடம் முறையிடவென நீண்ட துயர்களின் பட்டியல் ஒன்று உள்ளது. ஒட்டு மொத்தமான இன அடையாள அழிப்புக்கு அப்பால் எந்த ஒரு மனிதரினதும் உணர்வுகளில் இலகுவாகத் தொற்றக் கூடியவையான, இந்தப் பட்டியலில் உள்ள - சிறீலங்காப் படையினராலும் பொலிசாராலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுதப் போரின் இறுதியில் உறவுகளாலேயே படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் நிலையறியாது கலங்கும் ஆயிரமாயிரம் உறவுகள், அவர்களைத் தேடி 1000 நாள்களுக்கும் மேலாக வீதி ஓரங்களில் கொட்டகை அமைத்துப் போராடி வரும் தாய்மார், படைகளாலும், வன வளத் திணைக்களத்தாலும்  தொல்லியல் திணைக்களத்தாலும் என இயலுமான எல்லா வழிகளாலும் தங்கள் வாழிடங்கள், வயல் நிலங்கள், என வாழ்வாதாரமான நிலங்களும் கிராமங்களும பறிக்கப்பட்டு தங்கள் நிலத்திற்கு திரும்பும் காலம் வராதா என ஏக்கமுடன்  காத்திருக்கும் குடும்பங்கள்;, விசாரணைகளே இன்றிப் பல்லாண்டுகளாக சிறைகளில் வாடும் எங்கள் உறவுகள் என்பன உட்பட - எங்கள் துயரங்கள் தொடர்பாக  தெற்கிலிருந்து இன்றுவரை காத்திரமான ஒரு ஆதரவுக் குரல் மட்டுமல்ல அனுதாபக் குரல் கூட வெளிப்பட்டதை நாங்கள் அறிந்ததில்லை.

முள்ளிவாய்க்காலின் பின்னான போர் ஓய்ந்த கடந்த 13 ஆண்டுகளில் கூட இலங்கையில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்காததையொட்டி சிறீலங்காவின் அரசுகள் மட்டுமல்ல தென்பகுதி மக்களும் புத்திஜீவிகளும் கவலை கொண்டதில்லை. அது மட்டுமல்லாது, போர்க்குற்றங்களுக்காக இலங்கை ஜெனீவாவில் சிக்கல்களைச் சந்தித்தபோதோ அல்லது மனித உரிமைத் தரக் குறைவுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையினை இழந்தபோதோகூட மனித உரிமை நிலைமையைச் சீரமையுங்கள் தமிழர்களுட்பட ஏனைய தேசங்களினதும் சமூகங்களினதும் உரிமைக் கோரிக்கைகளைச் சுமுகமான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ளுங்கள், அதன்மூலம் பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள் என தெற்கிலிருந்து எந்தக் குரலும் எழுந்ததில்லை. மாறாக இலங்கை அரசு, மனித உரிமைகளை வலியுறுத்தாத, தமிழர்களுக்காக பரிந்து வராமல் நிதி உதவிகளைச் செய்யக்கூடியவர்கள் எனத் தாம் கருதிய நாடுகளிடம் நிதியுதவி கோரிச் சரணடைந்தது. அதையே தெற்கும் வரவேற்றிருந்தது. இன்றைய இந்த பொருளாதார நிலைக்கு இவையுமே காரணம் என்பதே எமது புரிதலாகும்.

இலங்கையின் வரலாற்றில் இதுவரை நடந்தேறிய அரசியற் தீர்மானங்கள், பொருளாதாரத் தீர்மானங்கள், பொருளாதாரத்தைப் பாதிக்கும் தீர்மானங்கள், ஊழல்களையும் முறைகேடுகளையும் சகித்துக் கொண்டும் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் உளவியற் கட்டுமானம் என்பவை சிங்கள பௌத்தக் மேலாதிக்கக் கருத்தியலிலும், அதன்மேல் கட்டப்பட்ட அரசியல் அமைப்பு, அரசு என்பவற்றாலுமே சாத்தியமாகியுள்ளன.

ஆனாலும் இன்றும்கூட நாட்டின் சகல சிக்கல்களுக்கும் காரணமான இனச்சிக்கல்கள் தொடர்பிலும் அவற்றுக்குக் காரணமான பௌத்த சிங்கள மேலாதிக்க அபிலாசைகள் தொடர்பிலும் தெற்கின் அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமன்றி எழுச்சி பெற்று நிற்கின்ற பொது மக்களிடமும் அவர்களுள் பெருமெடுப்பில் பங்கு கொள்ளும் இளையோரிடமும் அவர்களால் ஆள்வதற்கு பொருத்தமானவர்கள் எனப் பரிந்துரைக்கப்படும் புத்திஜீவிகளிடமும் முற்போக்கான மாற்றங்களேதும் ஏற்பட்டதாக எமக்குத் தெரியவில்லை. காலிமுகத் திடலில் தன்னெழுச்சியாக கூடியுள்ள இளையோரிடமிருந்துகூட இவை தொடர்பாகக் காத்திரமான குரலேதும் வெளிப்பட்டதாக நாம் உணரவில்லை.

அரசியல்வாதிகள் எம்மை இனங்களாகப் பிரித்து விட்டார்கள், நாம் எல்லோரும் இலங்கையர்கள், தமிழிலும் தேசிய கீதம் பாடலாம், எல்லோரும் ஒன்றாக வாருங்கள் என மேம்போக்கான அறைகூவல்கள் விடப்படுகின்றனவே தவிர தமிழர்கள் உட்பட இந்நாட்டின் ஏனைய தேசங்களினதும் சமூகங்களினதும் நியாயமான கரிசனைகள் மற்றும் அச்சங்கள் தொடர்பில் காத்திரமான மாற்றம் எதையும் இன்று போராடுபவர்களிடையே இருந்தும் கூட யாரும் முன்மொழிந்ததை நாம் காணவில்லை. காலி முகத் திடலில் தமிழில் தேசிய கீதம் பாடுவதைவிட தமிழ் மக்களது பிரச்சினைகள் பன்மடங்கு கடுமையானது, வலி மிகுந்தது, அச்சம் தரக்கூடியது. ஒரு தேசமாக எமது இருப்பு இந்நாட்டில் எந்த அளவுக்கு அச்சுறுத்தலில் உள்ளது என்பதை இன்று போராட எம்மையும் வருமாறு தெற்கிலிருந்து அழைக்கும் யாரும் உணர்ந்ததாகத்  தெரியவில்லை.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் மகாவம்ச மன நிலையும் ஒற்றையாட்சி மேலான சிங்கள மக்களின் அசாதாரணமான பற்றுறுதியும் ஏனைய இனங்களையும் சிங்கள இனத்தையும் இரு வேறு துருவங்களில் கொண்;டுபோய் நிறுத்தியுள்ளது என்பதையோ, இவைதான் இன்றைய நிலைக்கு நாடு வரப்போவதற்கான முன்னரே தெரிந்த அறிகுறிகளைத் தாங்கள் உணராமைக்கு காரணம் என்பதையோ சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்லாது இன்றைய மக்கள் எழுச்சிகளின் முக்கியத்தர்களும் கூட இன்றும் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கான சமிக்ஞைகளெதையும் எம்மால் காணவும் முடியவில்லை.

இத்தனை நாட்களில் காலி முகத் திடலில் இருந்துதான் ஓரளவுக்குக் கட்டமைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் இராஜபக்ச ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த முன்மொழிவுகளில் ஒன்றுகூட தமிழ் மக்களினதும் ஏனைய தேசங்களினதும் சமூகங்களினதும் துயரங்களுக்கான விடைகளாகக் காணப்படவில்லை. சொல்லப்போனால் இவர்களால் கூட நாட்டின் இன்றைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு உண்மையான அடிப்படைக் காரணமான சிங்கள பௌத்த மேலாதிக்க அபிலாசைகளுக்கு மாற்றீடுகள் முன்வைக்கப்படவில்லை.

மேலும் இன்று வெறுமனே முன்மொழியப்படும் ஆட்சி மாற்றம் தமிழருக்கு எதையும் தந்துவிடப்போவதில்லை. 2015ல் தமிழ் பேசும் இனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தால் பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டினாற்கூட தமிழர்கள் மற்றும் ஏனைய தேசங்கள் தொடர்பிலான அரசின்  அணுகுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக தமிழர்களை ஏமாற்றி அவர்களையும் இணைத்துக் கொண்டு தமிழர் தாயகத்தில் 1000 விகாரைகள் கட்டுவதுட்பட, தமது தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடரும் பொறிமுறைகளை தொடர்ந்தமையே நடந்தது. அதுமட்டுமல்லாது மைத்திரி – ரணில் அரசு ஜெனீவாவில் தமது பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பட்டிருந்த தடைக்கற்களை தமிழர் பிரதிநிதிகளின் உதவியைக் கொண்டே அகற்றிக் கொண்டது என்பதையும் நாம் மறக்கவில்லை.

இத்தகைய பின்னணியில் தமிழர்களாகிய நாம் இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சிகள் தொடர்பாக கரிசனையுடன் அணுகும் அதே வேளையில் தமிழர்களாகிய எமக்கு போராட்டக்காரர்களுடன் கைகோர்ப்பது தொடர்பில் எமது நீண்ட கால இருப்புத் தொடர்பான கரிசனைகளுடனான பரிசீலனையுடன் கூடிய முடிவுகளை அவதானமாக எடுப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்றே தெரிகின்றது.

இன்று தெற்கில் போராடிக் கொண்டிருக்கும் பொது மக்களே, இளைஞர்களே, நாம்; எமது தோழமையை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். உறுதியாகத் தெரிவிக்கின்றோம். நீங்கள் இன்று போராடப் புறப்பட்டதற்கான காரணங்களான பொருளாதார வியடங்கள் எம்மையும் தாக்குகின்றனதாம். ஆனால் எம் தோள்களை உங்களுடன் இணைப்பதில் எங்களுக்கு உள்ள மனத் தடையை ஏற்படுத்த காரணமாக இருப்பது தமிழர்களாகிய எம் மனதில் எழுந்து நிற்கின்ற அச்சமும் களைப்பும் தருகின்ற கேள்வியொன்றே. ஒரு தேசமாக எமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது  தொடர்பான எங்களது நீண்டகாலக் கேள்விகளுக்கு (ஙரநளவ) தங்களிடமாவது பதிலேதும் உண்டா?


No comments