முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்! பனங்காட்டான்
'முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு கேட்டேன். போர் முடியும்வரை மௌனமாக இருங்கள். அதன்பின்னர் தமிழரின் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம் என்று இரு நாடுகளும் எனக்கு வாக்குறுதி அளித்தன. அதனை நம்பி பன்னிரண்டு வருடங்களாகக் காத்திருந்த என்னை இரு நாடுகளும் ஏமாற்றிவிட்டன" என்பது சம்பந்தனின் வாக்குமூலம்.
உலகின் முதலாவது பெண் பிரதமர் என்று பெயர் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, 1970ம் ஆண்டு இலங்கைப் பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்தவர்.
இலங்கை என்பதை சிறீலங்கா என்று பெயர் மாற்றி சிங்களவர்களை மகிழ்ச்சிப்படுத்திய இவரை, 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அவர்களே தலைகுப்புற வீழ்த்தி ஆறு ஆசனங்களை மட்டும் வழங்கினர்.
1978ம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிறிமாவோவின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு ரத்துச் செய்து மீண்டும் அவரை குசினிக்குள் முடக்கினார். இவ்வேளையில் கொழும்பிலிருந்து வெளிவந்த தவச என்ற சிங்களப் பத்திரிகைக்கு சிறிமாவோ அளித்த செவ்வியில் குறிப்பிட்ட ஒரு விடயம் எக்காலத்திலும் அரசியல் தலைமைகளுக்குப் பொருத்தமானது.
பிரதமர் கதிரையில் ஏழாண்டுகள் தாம் இருந்தபோது, தம்மைச் சுற்றி இருந்தவர்கள் நாட்டினதும் மக்களினதும் உண்மை நிலையை தமக்கு மறைத்து பொய்யுரைத்தமையை தேர்தல் தோல்வியின் பின்னரே தம்மால் தெரிந்து கொள்ள முடிந்ததாக சுட்டியிருந்தார்.
தற்போது, ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி இரண்டரை ஆண்டுகளுக்குள் அல்லோலகல்லோலப்படுவதற்கும், மக்கள் எதிர்ப்பு பேரெழுச்சியாகி நாடு தழுவிய ரீதியில் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதற்கும் சிறிமாவோ அன்று சொன்னதே காரணம் என்பதை விளக்க வேண்டியதில்லை.
காணாமலாக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் ஆண்டுக்கணக்கில் நடத்தி வரும் போராட்டமே இன்றைய அனைத்துப் போராட்டங்களுக்கும் தாயானது. சிங்கள தேசத்தில் நாளாந்தம் எல்லாவற்றுக்கும் போராட்டமாகி விட்டது. இந்த மாதம் 15ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பிரமாண்டமான பேரணி ராஜபக்சக்களை உலுப்பிவிட்டது.
இலங்கை என்றால் கடன்படுநாடு என்ற பட்டத்துக்குள்ளாகி விட்டது. மக்கள் பட்டினியால் வாடும் நிலை வந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக்கூட அரசாங்கத்திடம் டாலர்கள் இல்லாமலாகி விட்டது.
'குடும்பத்தின் இரவு உணவு மேசையில் (குயஅடைல னinநெச வயடிடந) அரசியல் தீர்மானங்களை எடுப்பதே நாட்டின் இன்றைய சீர்கேட்டுக்குக் காரணம்" என்று நாடாளுமன்ற உறுப்பினராகவிருக்கும் அத்தரலிய ரத்ன தேரர் பகிரங்கமாகக் கூறியிருப்பது யதார்த்தமானது.
ராஜபக்ச சகோதரர்களும் அவர்களது பிள்ளைகளும் தங்கள் வீட்டுக்குள்ளேயே அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர். அமைச்சரவைத் தீர்மானம் என்பது உண்மையல்ல என்பதுவே தேரர் இங்கு குறிப்பிடும் மறைபொருள்.
தேரர் தலைமை தாங்கிய ஜாதிக ஹெல உறுமய கட்சி வழங்கிய ஆதரவினாலேயே, 2005ல் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து மகிந்த ஜனாதிபதியானார் என்பதுவும், 2015ல் இவரது கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாலேயே மகிந்த தோற்கடிக்கப்பட்டார் என்பதுவும் நிகழ்கால வரலாறு.
இப்போது ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், 69 லட்சம் சிங்கள மக்களின் அரைப்பங்கு வாக்குகளைக்கூட ராஜபக்சக்கள் பெற முடியாதென்பதை அரச புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்தக் கதிரையில் இருக்கும்வரை (சிறிமாவோ சொன்னதுபோல) முழு உண்மையை கோதபாயவுக்குச் சொல்ல எவரும் முன்வர மாட்டார்கள்.
இந்தப் பின்னணியிலேயே இன்றைய அரச இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. சீனாவும் இந்தியாவும் இல்லையென்றால் இலங்கை தனக்குத் தானே தூக்குப் போட்டு இறந்திருக்கும். ஒரு வகையில் பார்ப்பதானால் ஒரு நாட்டின் கடனுக்கான வட்டியைச் செலுத்த இன்னொரு நாட்டிடம் காமதேனுவான நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிச்சா பாத்திரம் ஏந்துகிறார்.
அயல் நாடே முக்கியம், அதனால் இந்தியா உதவுகிறது என்று கூறிக்கொண்டு 100 பில்லியன் டாலரை கடன் பிணையாக இலங்கைக்கு இந்தியா இ;ந்த வாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியும், பசில் ராஜபக்சவும் நடத்திய கலந்துரையாடலில் இலங்கையின் விவசாயம், மீன்பிடித்துறை, சக்திவளம் உட்பட ஐந்து அம்சங்கள் குறிப்பிடப்பட்டன.
ஆனால், இலங்கைத் தமிழரின் அரசியல் அபிலாசைகள், பதின்மூன்றாவது திருத்த அமுலாக்கல் பற்றி மறந்தும்கூட மோடி ஒரு வார்த்தையும் பேசவில்லை. வடபகுதி மீனவர்களுக்கு இந்தியாவிடமிருந்து இப்போது உலர் உணவுப்பொதி மட்டுமே. இதற்குப் பெயர் - தக்க தருணத்தில் உதவும் நட்பு என்று இந்தியத் துணைத் தூதுவர் ரகீஸ் நடராஜன் கூறியுள்ளார்.
போரினால் அழிக்கப்பட்ட தமிழ் மண்ணை மீட்கவும், காக்கவும், தங்கள் பிறப்புரிமைக்காகவும் தமிழினம் போராடிக் கொண்டிருக்க, நட்பு நாடு சிங்கள தேசத்தை நோக்கி நேசக்கரம் நீட்டுகிறது. ஈழத்தமிழரின் தலைமையும் இதே போக்கில்தான் அரசியல் செய்கிறது. மோடியின் அழைப்பை நிராகரித்த இவர்கள் கோதபாயவைச் சந்திப்பதற்கு காத்திருந்தார்கள். அதற்காக தீர்மானிக்கப்பட்ட இந்த மாதம் 15ம் திகதி கானல் நீராகிவிட்டது.
அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தை சஜித் பிரேமதாசவின் எதிரணி முற்றுகையிடுமென்று தெரிந்திருந்தும், அந்த நாளையே கூட்டமைப்பை சந்திப்பதற்கு கோதபாய தெரிந்தெடுத்தது நாடகத்தின் உச்சம். இது இப்படித்தான் போகுமென்று தெரிந்து கொண்டும் அந்த நாடகத்தில் பங்கேற்றது சம்பந்தன் அணியின் அபார நடிப்பு.
ஜெனிவாவின் 46:1 தீர்மானத்தின் இரண்டாம் கட்டம் தாண்டி, மூன்றாவதும் இறுதிக் கட்டமுமான 51வது அமர்வு எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறவுள்ளது. அடுத்தது ஐ.நா. பொதுச்சபையா அல்லது பாதுகாப்புச் சபையா என்ற கேள்வி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கையில், ராணுவ மயமாக்கலை மறைக்கவும், ஜெனிவாவை ஏமாற்றவும் கோதபாய தரப்பு அவசரம் அவசரமாக இரண்டு சந்திப்புகளை அறிவித்தது.
முதலாவது 15ம் திகதி கூட்டமைப்பின் சந்திப்பு (ரெலோ இதனை நிராகரித்துள்ளதால் தமிழரசு மற்றும் புளொட்டின் சந்திப்பு என்பதே சரி). அடுத்தது 23ம் திகதிய சர்வகட்சி மாநாடு.
15ம் திகதிய சந்திப்பு நடத்திய பின்னர் சர்வகட்சி மாநாடு நடத்தினால் மட்டுமே, தமிழர் தரப்பு முன்வைக்கும் யோசனைகளை அல்லது கோரிக்கைகளை சர்வகட்சி மாநாட்டில் ஆராய முடியும். ஆனால் தமிழர் தரப்பின் சந்திப்பை 25ம் திகதிக்குப் பின்போட்டுவிட்டு, சர்வகட்சி மாநாட்டை அதற்கு இரண்டு நாட்கள் முன்னராக - 23ம் திகதி நடத்துவதால் என்ன பயன்? சிலவேளைகளில் இதனையே காரணமாகக் கூறி சர்வகட்சி மாநாட்டை 25ம் திகதிக்குப் பின்னர் நடத்தும் யோசனையையும் கோதபாய நிர்வாகம் ரகசியமாக வைத்திருக்கக்கூடும். இல்லையென்றால் இதுவும் இன்னொரு நாடகமாகலாம்.
மறுதரப்பில், எதிரணியின் பேரணி பாரிய வெற்றியை பெற்றிருப்பதால், விரும்பியோ விரும்பாமலோ நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டிய அவசியம் கோதபாயவுக்கு ஏற்பட்டது.
இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தமது அரசு எந்த வகையிலும் பொறுப்பில்லை என்றவாறு தமது உரையை ஆரம்பித்த இவர், கொரோனா பேரிடரை முன்னிறுத்தி, அதனிலும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய காரணங்களாலேயே பாரிய பொருளாதார நெருக்கடி தொடர்வதாக தெரிவித்துவிட்டு, தமது போர்க்கால தலைமைத்துவ சாதனையையும் வெற்றியையும் கோடி காட்டியிருந்தார்.
கொடூரமான பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நிர்வகிக்க தம்மால் முடிந்தமையே தமக்கான தகுதியாக குறிப்பிட்ட கோதபாய, தம்மீது நம்பிக்கை வைக்குமாறு மீண்டும் மீண்டும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இவர் அடிக்கடி கூறி வரும் இவரது பயங்கரவாத ஒழிப்புச் சாதனையே, உலக அரங்கிலும் ஜெனிவா மன்றிலும் இவரை முதலாம் இலக்க போர்க்குற்றவாளியாக அடையாளப்படுத்தியிருப்பதை மூடி மறைக்கும் எத்தனத்தில், தம்மை பயங்கரவாதத்தை முறியடித்தவரென முடி சூட்டி வருகிறார். இவரே அரச பயங்கரவாதத்தின் தலைமகன் என்பது முள்ளிவாய்க்காலின் வரலாற்றில் கல்வெட்டாக உள்ளது.
இதனால்தான் தற்போதைய அரசாங்கம் மீது போர்க்கால பொறுப்புக்கூறலும், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதே விடயத்தில், கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் சம்பந்தனின் அண்மைக்கால வாக்குமூலமொன்று, இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டுப் போராடும் ஈழத்தமிழினத்தின் தீவிர பார்வைக்கு உட்பட்டுள்ளது:
'முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு கேட்டேன். போர் முடியும்வரை மௌனமாக இருங்கள். அதன்பின்னர் தமிழரின் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம் என்று இரு நாடுகளும் எனக்கு வாக்குறுதி அளித்தன. அதனை நம்பி பன்னிரண்டு வருடங்களாகக் காத்திருந்த என்னை இரு நாடுகளும் ஏமாற்றி விட்டன" என்பதுவே சம்பந்தனின் வாக்குமூலம்.
அண்மையில் தம்மைச் சந்தித்த இந்தியத் தலைவர்களிடமும், இந்த மாதம் கொழும்பில் சந்தித்த அமெரிக்காவின் புதிய தூதுவரிடமும் சம்பந்தன் இதனை எடுத்துக்கூறி (புலம்பி) தம்மைத் தாமே நொந்து கொண்டார்.
சம்பந்தன் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார், உண்மையே கூறுவார் என்ற நம்பிக்கையில் அவரது வாக்குமூலத்தை உண்மையாகவே ஏற்றுக் கொள்வோமானால்.....
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சம்பந்தனும் சம்பந்தியாகியுள்ளார். எனவே, இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமன்றி சம்பந்தனுக்கும் உண்டு. கோதபாயவும், இலங்கை அரசாங்கமும், சம்பந்தனும் இவ்விடயத்தில் ஒரே தராசில் நிற்பவர்களே.
Post a Comment