ஜெனிவா முன்னெடுக்கும் ஆதார சேகரிப்பு அலுவலகம் இலங்கைக்கான பொறியா? பனங்காட்டான்


பான் கி மூனையும் நவநீதம்பிள்ளையையும் முன்னர் அழைத்ததுபோல தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் பச்சிலற் அம்மையாரை நேரில் வாருங்கள், உண்மையை அறியுங்கள் என்று இலங்கை அரசு விடுத்த அழைப்பை மறந்துள்ள அதன் பிரதிநிதி அமைச்சர் பீரிஸ், பேரவை முன்னெடுக்கும் ஆதார சேகரிப்பு அலுவலக பொறிமுறையை எதற்காக எதிர்க்கிறார்? இதனைக் கண்டு ஏன் அஞ்சுகிறார்?

வெளியிலும் உள்ளேயும் சமகாலத்தில் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சிக்கலில் கோதபாய ஆட்சித்தரப்பு அகப்பட்டுள்ளதை காணமுடிகிறது. 

ஜெனிவா முடிச்சை அவிழ்க்க இரண்டு அமைச்சர்களும் இரண்டு உயர் அதிகாரிகளுமாக நால்வர் அங்கு சென்று சர்வதேசத்தை தங்கள் பொய்க்குள் சிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கஇ கொழும்பில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றப்பட்டுள்ளனர். 

இவை இரண்டுமே எதிர்பார்க்கப்பட்டவைதான். ஆனால்இ ஒரே வேளையில் இரண்டையும் ஆட்சித்தரப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியதுவே விசித்திரமானது. 

குழப்பங்காலிகள் என்று பெயர்பெற்ற விமல் வீரவன்சவும்இ உதய கம்மன்பிலவும் அமைச்சர்கள் பதவிகளில் இருந்தவாறே தொடர்ந்து கோதபாயவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறுவார்களா அல்லது வெளியேற்றப்படுவார்களா என்பதே பொதுவான கேள்வியாக இருந்தது. 

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சர் பதவியும் வழங்கியபோதே இவர்களின் போராட்டம் வெளியே தெரியவந்தது. இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொருவரான ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதுவரை பதவி நீக்கப்படவில்லை. 

அரசாங்கத்தின் பதினொரு பங்காளிக் கட்சிகளும் பல வழிகளிலும் தங்கள் உள்வீட்டுப் போரை வெளியில் அம்பலப்படுத்தி வந்தவர்கள். சில நாட்களுக்கு முன்னர் ஷமுழு நாட்டையும் சரியான பாதைக்கு| என்ற தொனிப்பொருளில் இவர்கள் நடத்திய கூட்டம் அதியுச்ச செயற்பாடாக அமைந்தது. 

'நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு அரச தலைவர்களே காரணம். இவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றனர். கறுப்புப் பணச் சந்தையை நிதி அமைச்சர் (பசில் ராஜபக்ச) செயற்படுத்துகிறார். நாட்டை அழிக்க இவர்களுக்கு இடமளிக்க முடியாது. இறுதியான தீர்மானங்களை முன்னெடுப்போம்" என்று செஞ்சட்டை வீரர் பாணியில் உரையாற்றிய விமல் வீரவன்ச தமது உரையின் இறுதியில் 'நாங்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காரர்கள் அல்ல. இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் இறப்போம்" என்று கூறியது நேரடியாக பசிலை பகிரங்கமாகச் சாடுவதாக அமைந்தது. 

இதன் பின்னர் இறுதி முடிவை இவர்களை எடுக்கவிடாது கோதபாய தாமே எடுத்துக் கொண்டார். வியாழக்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டத்துக்கு விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அழைக்கப்படாதபோதே விசயம் கசிந்துவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது எழுத்து மூலம் அனுப்பப்பட்டது. 

வாசுதேவ நாணயக்கார தாமாக வெளியேறுவதற்கு அரசாங்கக் கதவு திறந்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் கோதபாய நாட்களை எண்ணுவதாக செய்திகள் கூறுகின்றன. சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவை குறிவைத்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெறுவதும் தெரியவருகிறது. 

எந்த நேரத்திலும் அரசிலிருந்து வெளியேற தாங்கள் முடிவெடுத்து விட்டோமென்று மேடைகளில் முழங்கி வரும் சுநத்திரக் கட்சியினரைஇ அதற்கு முன்னரே கழற்றி விடவும் ஆட்சி பீடம் தயாராகியுள்ளது. இவைகள் இவ்வாறே இடம்பெறுமானால் பதவி இழக்கும் அல்லது பதவி பறிக்கப்படும் முக்கியஸ்தர்களின் பழைய கோவைகள் சில தூசு தட்டி எடுக்கப்பட்டு உரிய இடத்துக்கு அவர்களை அனுப்பவும் ராஜபக்சக்கள் தயாராகி வருகின்றனர். 

இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆட்சித்தரப்பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை குறைக்காமலிருக்கஇ எதிரணிகளிலுள்ள சிலர் புதிய பதவிகளுடன் தங்களுடன் சேர காத்திருக்கின்றனர் என ராஜபக்ச குடும்பத்தின் இளவல் ஒன்று தமது நண்பர்களிடம் கூறியதும் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது. 

இனி வரவுள்ள வாரங்களும்இ மாதங்களும் ஆட்சித்தரப்பினரின் நகர்வுகள் அதற்கான எதிர் நகர்வுகள் என பல நெருக்கடிகளை இப்போதுள்ளதற்கும் மேலாக நாடு சந்திக்கவிருப்பது தெரிகிறது. 

உள்நாட்டு நிலைவரம் இவ்வாறிருக்கையில்இ ஜெனிவா விவகாரம் எதிர்பார்க்கப்பட்ட வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள அரசாங்கங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் காப்பராக எப்போதும் செயற்படும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அரசாங்கத்தின் நால்வர் அணி ஜெனிவாவில் முகாமிட்டுள்ளது. கூட்டத்தொடர் 28ம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னரே போர்க்குற்றத்தையும் மனித உரிமைகள் மீறலையும் போர்த்து மூடும் புரட்டுக் கருத்துகளை பீரிஸ் வெளியிட ஆரம்பித்தார். 

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையாரின் பதினேழு பக்க இலங்கை தொடர்பான அறிக்கைக்கு ஏற்கனவே எழுத்து மூலம் பதிலளித்த இலங்கை அரசின் பிரதிநிதி என்ற வகையில்இ எழுத்தில் சொல்லப்பட்டவைகளுக்கு மேலும் நம்பகத்தன்மை ஊட்டும் வியாக்கியானம் கொடுத்து சர்வதேசத்தை தம் பக்கம் இழுக்க வேண்டியது அமைச்சர் பீரிஸின் கடமையும் பொறுப்பும். 

ஏற்கனவே வரையப்பட்டு பின்னர் மேலும் சீரமைக்கப்பட்ட தமது அறிக்கையை பச்சிலற் அம்மையார் மூன்றாம் திகதி வியாழக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அமைச்சர் பீரிஸ் பதிலுரையாற்ற வேண்டும். 

ஆனால்இ உக்ரைன் மீது ரஸ்யா நடத்தும் ஆக்கிரமிப்பு அழிப்புத் தாக்குதல் பற்றி மூன்றாம் திகதி பேரவையில் ஆராய வேண்டியிருந்ததால்இ இலங்கை விவகாரம் ஒரு நாளுக்கு பின்போடப்பட்டது. 

கடந்த வருடம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46:1 தீர்மானத்தின் பிரகாரம் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற 48வது அமர்வும்இ தற்போதைய 49வது அமர்வும்இ இவ்வருட செப்டம்பரில் நடைபெறவுள்ள 51வது அமர்வும் மூன்று கட்டங்களாக படிமுறையில் பகிரப்பட்டவை. அதன் பிரகாரம் தற்போதைய அமர்வில் 46:1 தீர்மானத்தில் கூறப்பட்ட இலங்கை தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான பொறிமுறை வெளிவந்துள்ளது. 

அதாவது இலங்கையின் பொறுப்புக்கூறல்இ சர்வதேச நீதி விசாரணை போன்றவற்றுக்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கு இலங்கையில் அலுவலகம் ஒன்றை அமைப்பதை ஆணையாளர் அறிக்கை தெரிவித்துள்ளது. இதனை இலங்கைப் பிரதிநிதி பீரிஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். 

இலங்கையின் அனுமதியின்றியே 46:1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற தமது அரசின் ஆதங்கத்தைச் சுட்டிய இவர்இ ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையால் பாதகமான நிலைவரங்களே ஏற்படுமென்று ஒருவகை மென்போக்கில் - ஆனால் எச்சரிக்கைப் பாணியில் தெரிவித்துள்ளார். 

மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்துள்ள பொறிமுறையால் நல்லிணக்க முயற்சிகளுக்கு தடையேற்படும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளதானது ஏற்கனவே இலங்கை அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருவதாக நம்ப வைக்கும் பாணியில் அமைந்தது. அதுமட்டுமன்றி இனங்களுக்கிடையிலிருக்கும் கடந்த கால கசப்புணர்வு புதிய பொறிமுறையால் மீண்டும் கிளறப்படுமெனவும்இ இதனால் சமூகங்கள் பிளவுபட்டு வெறுப்புகள் வளர்க்கப்படுமெனவும் இலங்கை அரசை பாதுகாக்கும் ஆலோசனைப் பாணியிலும் பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார். 

மைத்திரிபால - ரணில் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை தொடர்பான  தீர்மானத்துக்கு அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கியது. அந்த ஆட்சியின் நாலரை ஆண்டுகளும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு கால அவகாசம் பெறப்பட்டதே தவிர எதுவும் இடம்பெறவில்லை. 

கோதபாய ஜனாதிபதியாக வந்ததும் தமது தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டதுபோல இந்தத் தீர்மானத்தை ஒருதலைப்பட்சமாக விலத்திக் கொண்டார். இதன் காரணமாகவே 46:1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழ்நிலை உருவானது என்பதை அமைச்சர் பீரிஸ் மறந்துஇ அந்த வரலாற்றை உண்மைக்குப் புறம்பாக்கும் நடவடிக்கைக்குச் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளார். 

இனங்களுக்கிடையிலான காயங்களை மூடவேண்டுமென்றும் அதற்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை தடையாக இருக்குமெனவும் இவர் கூறுவது கூட அபத்தமானது. திரிகரண சுத்தியான பொறுப்புக்கூறல் இன்றி காயங்களை மூட முடியாதுஇ ஆற்றவும் முடியாது. இதனைச் செய்வதற்கு  மறுக்கும் அரசின் பிரதிநிதியான பீரிஸ் மனித உரிமை மீறல் தொடர்பான ஆதார சேகரிப்புப் பொறிமுறைகூட இனங்களுக்கிடையில் விரிசலையும் பிளவையும் அதகரிக்குமென கூறுவதுகூட ஏற்க முடியாதது. 

2009 மே 18ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் உறைநிலைக்குச் சென்றதையடுத்து அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அதே மே மாத இறுதியில் களவிஜயம் மேற்கொண்ட ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கி மூனும்இ 2013ல் அதே மகிந்தவின் அழைப்பின் பேரில் அங்கு அனைத்தையும் நேரில் சென்று பார்த்த அப்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் முன்னெடுத்த முயற்சிகளாலேயே பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற ஆரம்பித்தன. 

பான் கி மூனும் மகிந்த ராஜபக்சவும் விடுத்த கூட்டறிக்கையில் பொறுப்புக்கூறலே முக்கியமான கருப்பொருள். நிச்சயமாக இந்த அறிக்கை தற்போது வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் ஜி.எல்.பீரிஸின் அலுவலகத்தில் இருக்கும். இதனையே தெரியாதவர் போன்று ஜெனிவா தீர்மானங்களை தூக்கியெறிந்து பேசுவது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின்மையை வெளிப்படுத்துகிறது. 

அண்மையில் - மிக அண்மையில்இ தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் பச்சிலற் அம்மையாரைக்கூட 'இலங்கைக்கு வாருங்கள்இ வந்து உண்மை நிலைமையை நேரில் பாருங்கள்" என்று இலங்கை அரசு விடுத்த அழைப்பைக்கூடவா பீரிஸ் மறந்துவிட்டார். 

தமது சார்பில் ஒரு அலுவலகத்தை அங்கு அமைத்து போர்க்கால ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை ஆணையாளருக்கு உறுப்பு நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. அதனை பகிரங்கமாக நேர்த்தியாக மேற்கொள்ள அவர் விரும்புகிறார். 

இறுதியாகஇ அமைச்சர் பீரிஸிடம் ஒரு கேள்வி: இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையெனில்இ மனித உரிமைகள் மீறப்படவில்லையெனில்இ மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லையெனில்இ எவரும் காணாமலாக்கப்படவில்லையெனில்இ இவை பற்றி ஆராயவும் ஆதாரங்கள் சேகரிக்கவும் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுப்பதை எதற்காக மறுக்க வேண்டும்? எதற்காக இதனைக் கண்டு அச்சப்பட வேண்டும்?

No comments