புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பணப்பெட்டியில் கண் வைக்கும் சிங்கள பௌத்த தேசாபிமானம்! பனங்காட்டான்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவெனக் கூறி வெற்றி பெறாத சர்வகட்சி மாநாடு, புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பைகளுக்குள் கை வைத்து டாலர்களை எவ்வாறு சூறையாடலாம் என திட்டமிடுவதில் முடிவடைந்துள்ளது. தங்கள் உறவுகளுக்கு உதவவும் தங்களின் பூர்வீக மண்ணை வளங்கொழிக்க வைக்கவும் புலம்பெயர் தமிழர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்ற பெயரில் இடைத்தரகர்கள் தேவையா?
பரவலாகவும் மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்ட கோதபாயவின் சர்வகட்சி மாநாடு, பலராலும் எதிர்வு கூறப்பட்டவாறு வெறும் பேச்சோடு முடிவடைந்துவிட்டது.
இந்த மாநாட்டை நடத்துமாறு கோரிய மைத்திரிபால சிறிசேனவின் சிறீலங்கா சுதந்திர கட்சி முக்கியமான தரப்பாக இதில் பங்கேற்றது. ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க சில கருமங்களைப் பகிரங்கப்படுத்தும் நோக்குடன் கலந்து நினைத்ததை முடித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மூன்றிலிரண்டு அணியினர் (தமிழரசும் புளொட்டும் மட்டும்) சமுகமளி;த்து தங்கள் கருத்தை வெளியிட்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் தவறினால் பின்னர் கோதபாயவுடனான சந்திப்புகளை மேற்கொள்ள முடியாது போகலாம் என்ற உள்ளச்சம் காரணமாக இவர்கள் கலந்து கொண்டிருக்கலாம்.
மற்றப்படி, சர்வகட்சி மாநாடு என்பது சர்வதேச அளவில் கோதபாய தரப்புக்கு எந்தப் பலனையும் அளித்திருக்கவில்லை. இதன் காரணமாகவே சகல கட்சிகளையும் இணைத்து இன்னுமொரு சர்வகட்சி மாநாட்டை நடத்தப் போவதாக கோதபாய அறிவித்துள்ளதானது முதற் தோல்வியை மறைக்கும் முயற்சி.
முப்பது வருட யுத்தம் ஏற்பட்டதுக்கான காரணத்துக்குரிய விடயங்களை தீர்;த்து வைப்பதற்கு இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே தற்போதைய பிரச்சனைகளுக்குக் காரணமென இம்மாநாட்டில் எடுத்துக்கூறிய சம்பந்தன், தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் வேறு எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண இயலாது என்று அழுத்திச் சொன்னார்.
சம்பந்தனின் உதவியாளராக மாநாட்டில் பங்கேற்ற சுமந்திரன், பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டமொன்றை தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டதோடு, இதற்கு ஏதுவாக புலம்பெயர் சமூகத்தின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டுமென வலியுறுத்தினார். கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர் போன்றும், புலம்பெயர் அமைப்புகளின் பேச்சாளர் போன்றும் சுமந்திரனின் கருத்துகள் காணப்பட்டன (இவைபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராயலாம்).
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தலைவர்களாகக் கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும் மாநாட்டைப் புறக்கணித்தன. மனோ கணேசனின் அணியினரும் பங்கேற்கவில்லை. ஆனால் ஜீவன் தொண்டமானைத் தலைவராகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்து கொள்ளாதது எவரும் எதிர்பார்க்காதது.
சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சி, அமைச்சர்கள் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட விமல் வீரவன்ச - உதய கம்மன்பில - வாசுதேவ நாணயக்கார அணியினர், ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் கட்சிகளும் மாநாட்டைப் பகிஸ்கரித்தன. பொறுப்பற்ற செயற்பாடுகளாலும் ஊழலாலும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள கோதபாய அரசு அதிலிருந்து தன்னைப் பிணையெடுத்து, அனைத்துக் கட்சிகளினதும் தலையில் ஏற்றுவதற்கான உள்நோக்கமே சர்வகட்சி மாநாடு என இந்தக் கட்சிகள் தெரிவித்ததில் உண்மை இல்லாமலில்லை.
இம்மாநாடு நடைபெற்ற அதே நேரத்தில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை ஜே.வி.பி.யினர் கொழும்புப் பெரும்பாகத்திலுள்ள நுகேகொடையில் நடத்தினர். பல்லாயிரக்கணக்கானவர்கள் அரச எதிர்ப்பு சுலோகங்களுடனும் கோசங்களுடனும் இதில் பங்கேற்றனர். (நுகேகொடைக்கு அருகிலுள்ள மிரிகான என்ற இடத்தில்தான் கோதபாய வசிக்கும் வீடு இருக்கிறது)
விமல் வீரவன்ச - உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையிலான சுமார் பத்து அரசியல் அணிகளின் பிரமுகர்கள் இதே 23ம் திகதியன்று கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மல்வத்த - அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஆசி பெற்றதுடன் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் எடுத்துக் கூறினர். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே கோதபாயவும் தலதா மாளிகை சென்று பீடாதிபதிகளிடம் ஆசி பெற்று தமது கையில் நூல் கட்டுவித்தார். தலதா மாளிகைக்கு வெளியே வந்த விமல் வீரவன்ச விரைவில் தற்போதைய ஆட்சி கவிழ்க்கப்படுமென்றும், அதற்கு முன்னர் அரசின் பெரும்பான்மை இழக்கப்படுமென்றும் அறிவித்துள்ளார்.
அநுராதபுரம் ஞானக்காவும், தலதா மாளிகை பீடாதிபதிகளும் அரசியல் பேதமின்றி சகல பௌத்த மத நம்பிக்கையாளர்களுக்கும் ஷவெற்றி| ஆசிர்வாதம் வழங்குவது விநோதமானது. அரசியல் தலைவர்கள் இவர்களை நம்பி நாடிச் செல்வதும் விந்தையானது.
சர்வகட்சி மாநாட்டின் முடிவில் முக்கியமான செய்தியாக ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களில் இடம்பெற்றார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சர்வதேச நாணய சபையிடம் கடனுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வந்தவர் இவரே. கடைசியில் பசில் ராஜபக்ச அங்கு கையை நீட்டி விட்டார்.
இது தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துமாறு இம்மாநாட்டில் ரணில் கேட்டபோது அவை இன்னும் வந்து சேரவில்லையென்று பசில் பதிலளித்தார். அப்படியானால், சர்வதேச நாணய சபை அதிகாரிகளை அழைத்துப் பேசுவோமென ரணில் கூறியபோது, ஆவணங்கள் வந்துவிட்டன - ஆனால் இப்போது பகிரங்கப்படுத்த முடியாது என பசிலை பதிலளிக்க வைத்ததன் ஊடாக அவர் முதலில் கூறிய பொய்யை ரணில் அம்பலப்படுத்தினார்.
அடுத்ததாக, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு என மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரால் தெரிவித்தபோது ரணிலுக்குச் சூடேறியது. சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே மாநாடு நடைபெறுவதாகவும், அவர்கள் கேட்டுக் கொண்டதாலேயே தாம் பங்குபற்றுவதாகவும் தெரிவித்த ரணில், நல்லாட்சியில் உணவு இருந்தது, எரிபொருள் இருந்தது - இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டுமென்று இறுக்கமாகப் பதிலளித்தார். நிலைமை கட்டை மீறிப் போவதை உணர்ந்த கோதபாய, மிகச் சாதுரியமாக ரணிலிடம் மன்னிப்புக் கோரி சமாளித்துக் கொண்டார்.
தமிழர் தரப்பைப் பொறுத்தளவில் இங்கு முக்கியமாகப் பார்க்கப்படக்கூடியது, புலம்பெயர் தமிழர் தொடர்பாக டயானா கமகே என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து. புலம்பெயர்ந்த தமிழரிடம் நிதி உதவி பெற்று வடமாகாணத்தை வளப்படுத்தலாமென்று டயானா கூற, அதனைச் செயற்படுத்த தாம் தயாராக இருப்பதாக சுமந்திரன் சொன்னார். (முற்கூட்டிய ஒத்திகை ஒன்று அரங்கேறியது போன்று இது காணப்பட்டது)
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசுவது, தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காண்பது என்பவை கோதபாயவின் அண்மைக்கால பரப்புரைகளில் பிரதானமான அம்சமாகக் காணப்படுகிறது. அதற்கு இம்மாநாடு மேலும் களம் அமைத்துக் கொடுத்தது.
மாநாடு நடைபெற்ற காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் விக்டோரியா நூலன்டிடமும் இதே கருத்தை கோதபாய முன்வைத்தார்.
புலம்பெயர்ந்தவர்களை சந்திப்பதில் தாம் ஆர்வமாக இருப்பதாகக் கோதபாய குறிப்பிட்டபோது, அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுமாறு விக்டோரியா நூலன்ட் ஊக்குவித்தார்.
புலம்பெயர் தமிழர் பற்றி கோதபாய குறிப்பிடுவது இதுதான் முதன்முறையன்று. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்தபோதும், பின்னர் பிரித்தானியா சென்றிருந்த போதும் இதனை அவர் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது.
மறுபுறத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களை புலிப் பயங்கரவாதிகள் என்றும், உள்நாட்டு பயங்கரவாதத்தை முறியடித்து விட்டோம் - இனி புலம்பெயர் பயங்கரவாதம்தான் எங்கள் இலக்கு என்று கோதபாய ஏற்கனவே அறைகூவியதும் ஞாபகம் இருக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக, புலம்பெயர்ந்த தமிழர் பலரையும், அவர்களின் அமைப்புகள் பலவற்றையும் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி ஊடாக தடை செய்ததும் இவர் தலைமையிலான சிங்கள அரசுதான்.
வடமாகாண சபை இயங்கியபோது புலம்பெயர் தமிழர் உதவியை சட்டரீதியாகப் பெற்று முதலமைச்சர் நிதியம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதற்குத் தடை விதித்ததும் இதே சிங்கள் ஆட்சிபீடம்தான்.
இவைகளுக்கு அப்பால், புலம்பெயர்ந்த உறவுகள் தங்கள் தாயக உறவுகளை மறவாது அவர்களின் கல்வி, தொழில் முயற்சி, முன்னேற்றம் மற்றும் உள்;ர் கட்டுமானங்களில் தொடர்ந்து உதவி வருவது பரகசியமானது. இது ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.
சிங்கள் ஆட்சியாளர்கள் சொல்லி இதனை அவர்கள் செய்யவில்லை. அவர்களிடம் அனுமதி பெற்றும் செய்யவில்லை. அரசாங்கம் தனது குடிமக்களுக்குச் செய்ய வேண்டியவற்றை இனரீதியாகப் பார்த்து இனவாதத்தை முன்னிறுத்தி தாயகத் தமிழரை பாரபட்சமாக நடத்தியதால்தான், புலம்பெயர்ந்த தொப்புள் கொடி உறவுகள் தாமாகவே முன்வந்து உதவி வருகின்றனர். இதில் அரசியல் கிடையாது.
ஆனால், இன்று புலம்பெயர் தமிழர்களை தடவிக் கொடுத்து அவர்களை அணைப்பது போன்று நாடகம் போடும் சிங்களவர்களை நம்பி அவர்களிடம் நிதியைக் கையளிக்க இவர்கள் மடையர்கள் அல்ல.
அரசாங்கத்திடம் - ராஜபக்சக்களிடம் தமிழர் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கம் ஆத்மசுத்தியாக இருக்குமானால் போர்க்குற்றத்துக்கான பொறுப்புக்கூறலையும், சர்வதேச நீதிப் பொறிமுறையையும் ஜெனிவாவில் ஏற்று இணக்கத்தை ஏற்படுத்த முதலில் முன்வர வேண்டும்.
இதனைவிடுத்து புலம்பெயர்ந்து வாழும் தமிழரை பணம் காய்க்கும் மரங்களாக எண்ணி அவர்கள் பைகளுக்குள் கை வைக்க கனவிலும் நினைக்கக்கூடாது. இவர்களை இனியும் இலகுவாக ஏமாற்றவும் முடியாது. சிங்கள பௌத்த தேசாபிமானத்துக்கு ஒத்தூதுவதற்கு தமிழர் தரப்பில் எவரும் முனையவும் கூடாது.
Post a Comment