போராடாமல் பயனில்லை:வினோ!கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எவ்வித நிபந்தனையுமின்றி  நாம் ஜனாதிபதியோடு பேசத் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினால்தான் எங்களுடைய உரிமையை பெற முடியும். நாங்கள் போராடாமல் வீட்டுக்குள்ளே இருந்தால் எங்களுடைய உரிமையை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியாது. 

ஜனாதிபதி, எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாடு தற்போது இக்கட்டான நிலைமையில் இருந்து கொண்டு இருக்கின்றது.  அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் வரிசையாக நிற்கின்ற யுகத்தை மீண்டும் சந்திக்கின்ற நிலைமை வந்து கொண்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்குவதானாலும், வாங்க நினைத்தாலும் கூட நாங்கள் வரிசையில் நின்றுதான் வாங்குகின்ற நிலைமை வந்து கொண்டிருக்கின்றது.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது. இது போன்றே பல பொருட்களும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்த நாட்டை ஆள முடியாமல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மிகவும் தடுமாறி கொண்டு இருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  அவரின் தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டை ஆள முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.

அவருக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவரை இன்று துரத்தியடிக்க வேண்டும், அவர் இந்த நாட்டை ஆள தகுதி இல்லாதவர் என்று சொல்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்த நாடு வெளிநாடுகளிலே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றது. இனி இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் பிச்சை எடுக்கின்ற நிலைமை இருக்கின்றது. 

இப்படியான நிலைமையில் நாட்டை ஆட்டங்காண வைத்து அதளபாதாளத்தில் தள்ளிவிட்டு, தான் தப்புவதற்காக இவ்வளவு காலமும் பேச முடியாத நிலைமையில் இருந்துகொண்டு ஐநா மனித உரிமை பேரவையிலே கேள்வி மேல் கேள்வி தொடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில் தன்னையும் அரசையும் தப்பவைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்ற வார்த்தை கூறப்பட்டிருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. 

முதலில் அவர்கள் இங்கே தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சென்று அவர்களோடு எதை பேச வேண்டும்.

தற்போதைய நாட்டின் உடைய நிலைமையில் இருந்து சர்வதேச ரீதியாக அல்லது ஐ.நா மனித உரிமை பேரவையின் ஊடாக அல்லது அயலில் இருக்கின்ற மிகப்பெரிய வல்லரசு நாடாகிய இந்தியாவினுடைய தலையீட்டில் இருந்து தப்புவதற்காக எங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை ஒரு போதும் ஏற்று கொள்ள போவதில்லை.

தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினையும் தீர்க்க போவதில்லை, பொருளாதார பிரச்சினையும் தீர்க்க போவதில்லை. ஆகவே தான் கூறுகின்றேன் இந்த போராட்டத்தின் மூலம்  வெற்றி அடைந்தது போல் எதிர் காலத்திலே நாம் ஒவ்வொன்றிற்காகவும் போராட வேண்டிய நிலைமை இருக்கின்றது“ என மேலும் தெரிவித்தார்.

No comments