வீட்டுக்குபோகவேண்டும்:சஜித் பிரேமதாச! ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்குபோகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு யார் தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மக்கள் எதற்காக  தங்களை தெரிவு செய்தார்களோ அதனை நிறைவேற்ற முடியாவிட்டால் விலகிச்செல்லவேண்டும் நாங்கள் ஆட்சிபுரிவதற்கு அனுமதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த துன்பங்களை இதற்கு மேல் எங்களால் அனுபவிக்க முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இந்த துன்பங்களிற்கு ராஜபக்ச அரசாங்கமும் ராஜபக்ச குடும்பமுமே காரணம் அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கான தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை சீரழித்த அரசாங்கம் வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவிக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் பறிபோன இலங்கையின் அடையாளத்தை தனித்துவத்தை  ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள  எதிர்கட்சி தலைவர் நாட்டைஅழிவின் விழிம்பிலிருந்து பாதுகாக்கவேண்டிய தருணம் இதுவெனவும் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானவர்கள் துப்பாக்கி குண்டுகள் கண்ணீர்புகை பிரயோகம் நீர்த்தாரைகள்; தடியடிகளிற்கு அஞ்சாமல் இங்கு வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments