பிச்சை வேண்டாம்!

 


காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு ஒரு இலட்சம் இழப்பீடும் மரணசான்றிதழும் வழங்குவதான இலங்கை அரசின் அறிவிப்பு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

தேவையாயின் அரசு வழங்குவதாக அறிவித்த ஒரு இலட்சத்திற்கும் மேலதிகமாக பலமடங்கு தொகையை நாம் அரசிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளே தேவையென தெரிவித்துள்ளன.

காணாமல்போனோரின் நெருங்கிய உறவினருக்கு, குடும்ப மறுவாழ்விற்காக ஒரு முறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூபாயினை  வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரி இது தொடர்பில் முன்வைத்த ஆலோசனைக்கு அமச்சரைவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இலங்கை அரசின் மரணச்சான்றிதளோ, அல்லது காணவில்லை என்ற சான்றிதளோ எமக்குத் தேவையில்லை.

நாம் இராணுவத்திடம் எமது உறவுகளை ஒப்படைத்திருக்கின்றோம்.  அவ்வாறு ஒப்படைத்த உறவுகளை அரசு  என்ன செய்தது.

அரசு அறிவித்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் வீதியில் இறங்கிப் போராடவில்லை.

இலங்கை அரசாங்கத்திடம் எமது உறவுகளைக் கேட்டு பதில் எதுவும் கிடைக்காத நிலையிலே, தற்போது நாம் சர்வதேசத்தினைக் கோரி நிற்கின்றோம். உள்ளகப் பொறிமுறையினை ஒருபோதும் நாம் நம்பப்போவதில்லை.

நாம் அரசிடம் கையளித்த உறவுகளை மீண்டும் எம்மிடம் கையளிக்கும்வரையில் எமது போராட்டம் தொடரும். ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகத்தால் வழங்கப்படுகின்ற மரணச்சான்றிதளோ, காணாமல் போனசான்றிதளோ, நட்ட ஈடோ எங்களுக்குத் தேவையில்லை.எமக்கான தீர்வு கிட்டும்வரை எமது போராட்டம் தொடரும் என குடும்பங்கள் அறிவித்துள்ளன.


No comments