13 இற்கு காவடி எடுத்த தமிழ் தரப்புக்களிற்கு ஒரு கடிதம்!இலங்கை எதிர்கொண்டு நிற்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நோக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  உறுதியை பெற்று கொடுக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே இன்று கைச்சாத்திடப்பட்டு இருக்கிறது 

இதன் அடிப்படையில் மேற்படி  கடன் உதவியை  பெற்று கொள்ளுவதற்காக இந்தியா முன்வைத்த பல்வேறு நிபந்தனைகளை ராஜபக்சே நிருவாகம் ஏற்று கொண்டு இருக்கிறது 

குறிப்பாக  திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றி இந்தியாவின் மூலோபாய நலன்களை வலுப்படுத்தும் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட   ராஜபக்சே நிர்வாகம் தயாராக இருப்பதாக அறிவித்து இருக்கின்றது 

திருகோணமலை துறைமுக சூழலில்  கப்பல் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியாவிற்கு ராஜபக்சே நிருவாகம் அனுமதி அளித்து இருக்கின்றது 

அதே போல  அமெரிக்க கடற்படையின் முயற்சியான பஹ்ரைனை தளமாகக் கொண்ட உளவுத்துறை பகிர்வு அலுவலகதில் (Intelligence Fusion Centre)  கடற்படை அதிகாரி ஒருவரை நியமிக்கவும் ராஜபக்சே தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டு இருக்கிறது 

இதற்கு மேலதிகமாக திருகோணமலைக்கு அருகிலுள்ள சம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரிய சக்தி) திட்டத்தை மேற்கொள்ள இந்தியாவின் அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது 

அதே போல மன்னார் , பூநகரி மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரிய சக்தி) திட்டங்களை மேற்கொள்ள இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டு இருக்கின்றது 

இது மாத்திரமின்றி இந்தியாவின் வணிக நடவடிக்கைகளுக்காக பலாலி விமான நிலையத்தை மீள திறக்கவும் இலங்கை உடன்பட்டு இருக்கின்றது 

இதற்கு மேலதிகமாக யாழ்.குடா நாட்டில் இந்தியாவின் கலாசார திட்டங்களைச் செயற்படுத்தவும் இந்தியாவிற்கு  உத்தரவாதம் வழங்கப்பட்டு இருக்கின்றது 

சிங்கள பௌத்த அரசியலை ஆதரிப்பது தான் தமது நலன் சார்ந்தது என்ற மூலோபாய மாற்றத்தை இந்தியா வரித்து,  தமிழ் மக்களை  இந்தியா தொடர்ச்சியாக ஏமாற்றி  வருவதற்கு மேற்குறித்த நிபந்தனைகள் மற்றுமொரு சான்றாக அமைந்து இருக்கின்றது 

உண்மையில் இந்தியாவுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெறவேண்டும் என கிஞ்சித்தும் அக்கறை இல்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக இலங்கையின் பாதுகாப்பு வெளியுறவுக் கொள்கையில் முதன்மையான இடத்தை தக்க வைத்து கொள்ளும் நோக்கில் தாங்கள பேசி வந்த 13 ஆம் திருத்தத்தையும் தற்போது கை விட்டு விட்டார்கள் 

வடக்கு கிழக்கில் குவிந்து கிடக்கும் வளங்கள் தொடர்ப்பன சகல அதிகாரங்களும் தென்னிலங்கையில் இருப்பதால் தமிழ் மக்களின் அனுமதியின்றி  தென்னிலங்கையுடன் சேர்ந்து கொள்ளையடிக்கவே இந்தியா  முயலுகின்றது 

அதாவது  பூகோள அரசியல் விளையாட்டில் தாம் தமிழ் மக்கள் பகடைக் காய்களாக வைத்து தங்களின் நலன்களை அடைந்து கொள்ள இந்தியா தொடர்ந்து முயற்சிக்கின்றது 

இந்த நிலையில்  இந்தியாவை எமது ராஜதந்திர செயற்பாடுகளின் மையமாக வைத்திருப்பதிலுள்ள மட்டுப்பாடுகளை இந்தியாவிற்கு கடிதம் எழுதும் தமிழ் விசுவாசிகள் தெரிந்து கொள்ள வேண்டும்

குறைந்த பட்சம் எங்கள் வளங்களை பாதுகாப்பதற்கேனும்  இந்தியாவை அடிப்படையாகக்  கொண்ட தமிழ் ராஜதந்திர அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும்

No comments