கூட்டமைப்பினர் மீது மீண்டும் தாக்குதல்!

 


வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில்  தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய காட்சியின் பெயரைச் சொல்லி ஜிப்ரிக்கோவின் வீட்டின்மேல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  ஜிப்ரிக்கோ உட்பட அவரது குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இளவாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் தாக்குதலுக்குள்ளான அவரது குடும்பத்தினர் அனைவரும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரது ஒரு சகோதரியும் தந்தையும் தாயும் மல்லாகம் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்  ஜிப்ரிக்கோவின் வீட்டிற்கு சென்ற வாள்வெட்டு கும்பல் ஒன்று அவரது உடமைகளை சேதமாக்கியதுடன், செல்லமாக வளர்த்த கிளியையும் வெட்டி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஜிப்ரிக்கோவின் வீட்டில் தாக்குதல் நடாத்திய அதே பகுதியை சேர்ந்த மூவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்,சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

தனியாள் பிரச்சனைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டுமே தவிர காடைத்தனமாகவல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

சட்டத்தைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கோருகின்றோம்.

அரச அராஜகத்தை நாங்கள் ஒருபோதும் மௌனமாகக் கடந்துசெல்லத் தயாரில்லை-என்றார்


No comments