வடக்கில் உயிரோடு விளையாடும் யானைகள்?தென்னிலங்கையிலிருந்து வடக்கில் இறக்கிவிடப்படும் யானைகள் மக்கள் உயிருடன் விளையாடத்தொடங்கியுள்ளன.

அடம்பன் - முருங்கன், மன்னார் பகுதியில் யானை தாக்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சதானந்தன் சுஜாதா வயது 46 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் வீடு அடம்பன் பகுதியில் உள்ள காட்டை அண்மித்தே காணப்படுகின்றது.

தினந்தோறும் குறித்த பெண்ணின் வீட்டுக்கருகில் யானை வருவது வழமை. இவர்கள் யானைக்கு வெடி வைத்து மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் இவர்களின் வளவுக்குள் யானை வந்துள்ளது.

வழியில் சென்று பார்த்த பொழுது வீட்டை விட மிக உயரமான யானை வந்துள்ளது. இவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்தபொழுது யானை வீட்டுக்கு அருகில் நின்றுள்ளது.

கணவனை தும்பிக்கையால் இழுத்து தாக்கியுள்ளது. மனைவி யானைக்கு அஞ்சி அருகிலுள்ள வளவுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார். மனித வாடையை நுகர்ந்து கொண்ட யானை அடுத்த வளவுக்குள் ஒளிந்து கொண்ட மனைவியை தாக்கியுள்ளது.

இதனிடையே கணவன் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்.

ஆவேசமடைந்த யானை வீட்டிற்குள் புகுந்து கொள்ள முற்பட்ட போதும் அதன் உயரம் காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மனைவியை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றிக்கொண்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி மானைவி சிகிச்சை பெற்று வந்தார்.

நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பப்பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments