திருகோணமலையில் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்


திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று (02)   கடமையேற்கச் சென்ற ஆசிரியைக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அதிபரும், ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபாயா அணிந்துகொண்டு சென்றமையால் இந்த சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (03) காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெற்றோர் சிலர், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று அங்கு  ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.

குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வினயமாக வேண்டிக் கொண்டார்.

நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

No comments