112 பெற்றோர்களை இழந்து விட்டோம்: எஞ்சியிருப்பவர்களும் இறப்பதற்கு முன்னர் எமக்கு நீதி கிடைக்க வேண்டும்!


வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும்  தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். எம்மில் 75 சதவீதமானவர்கள் வயது முதிந்தவர்களாவர்.

அவர்கள் இந்த வயோதிப காலத்திலும் நீதியை தேடி வீதியில் இறங்கிப்போராடுகிறாரகள். நாம் மன அழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்ட தாலும் 112 பெற்றோர்களை இழந்து விட்டோம். எஞ்சியிருப்பவர்களும் இறப்பதற்கு முன்னர் எமக்கு நீதி கிடைக்க வேண்டும். 

ஆகவே இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கு கடந்த வருட அறிக்கையின் ஊடாக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் வலியுறுத்தியுள்ளனர். 

மேற்படி விடயம் தொடர்பில் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் ஐ.நா மனி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் எமது உறவுகளை தேடும் தொடர் போராட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்தோம்.

எமது போராட்டமானது ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டிலும் தொடர்கின்றது. இறுதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து.

எமது உறவுகள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டும் சுமார் 20,000 இற்கும் மேற்பட்டோர் வலிந்து காணாமலாக்கப்பட்ட னர். இதுதவிர, இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வெள்ளைவேனில் கடத்தப்பட்டும், துணை இராணுவக்குழுக்களால் கடத்தப்பட்டும் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரையும் தேடும் எமது போராட்டமானது நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர், தமது உறவுகளை பிரிந்த துயரால் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்னரும் தொடர்கின்றது.

இது எமக்கான நீதி கிடைக்கும்வரை அல்லது எம்மில் ஒருவராவது உயிர் வாழும் வரை தொடரும். இந்த இறப்புக்களின் காரணமாக அவர்களின் உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கான சாட்சிகள், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

இத்துன்பியல் நிலை தொடர்ந்தால் இறுதியில் சாட்சிகள் இன்மையால் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை முடிவிற்குக்கொண்டுவருவது சிங்கள அரசுக்கு சுலபமாகிவிடும்.

இலங்கை அரசானது உள்நாட்டில் தீர்வை வழங்குவதாக சர்வதேசத்திடம் கூறிவருகிறது. இலங்கை அரசிடமிருந்து நீதி ஒருபோதும் எமக்குக் கிடைக்காது.

தமது கையால் தமது உறவுகளை கையளித்த உறவுகள் சிலர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, வருடக்கணக்கில் விசாரணைக்கு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு இறுதியில் சரணடைந்தவர்கள் ஏற்றிச்செல்லப்பட்ட பஸ் இலக்கத்தை முறைப்பாட்டாளர் தெரிவிக்காததால் சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

யுத்த சூழலிருந்து உயிர்ப்பயத்துடன் ஓடிவரும் ஒருவர் தனது பிள்ளை, கணவன் ஆகியோரைப் பிரியும் நேரத்தில் அழுது புலம்புவார்களா? அல்லது பேப்பர், பேனா தேடித்திரிவார்களா? அதற்குரிய மனநிலையிலா அவர்கள் இருந்திருப்பார்கள்? 

இலங்கையில் தமிழர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை எனினும் நீதியாக செயற்படும் ஓரிருவரால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள்கூட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மிருசுவிலில் சிறுவர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்பவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் இராணுவத்தில் பதவி உயர்வுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

எட்டு தமிழர்களை கொலை செய்ததற்கு வெகுமதியாகவே இவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது எனக்கருதி ஏனையோரும் இதுபோன்ற படுகொலைகளைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.

அதேபோன்று திருகோணமலை கடற்படைமுகாமில் 11 பேர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், திருகோணமலை 5 மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் முறையே சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டும், சாட்சியங்கள் போதவில்லை என்று கூறியும் வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன.

அன்று படையினரை வழிநடத்திய இன்றைய ஜனாதிபதி, எமது உறவுகளுக்கு என்ன நடந்ததெனத் தனக்குத் தெரியாது என்று கூறமுடியாது.

இன்றுகூட எமது உறவுகள் கையளிக்கப்பட்ட வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், மாத்தளன், ஓமந்தை ஆகிய இராணுவக்காவலரண்களின் பொறுப்பாக இருந்த படையதிகாரிகளை உளச்சுத்தியுடன் விசாரிப்பதன் மூலம் எமது உறவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அப்படை அதிகாரிகள் தற்போது வெளிநாட்டின் தூதுவராகவோ அல்லது பதவி உயர்வு பெற்று தளபதியாகவோ தான் இருப்பார்கள். இருப்பினும் இலங்கை அரசாங்கம் அவர்களை விசாரிக்காது, ஏனெனில் உண்மை வெளிவராதிருப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.

இலங்கையில் இறுதியுத்தத்தின்பின் பதவியேறற் அனைத்து ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் சிங்கள மக்களுக்கு வாக்குறுதியொன்றை அளித்திருக்கின்றார்கள்.

யுத்தத்தை முடிவிற்குக்கொண்டுவந்த படையினரைக் காட்டிக்கொடுக்கமாட்டோம் என்பதே அவ்வாக்குறுதியாகும். அதன்பிரகாரம் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மிகுந்த துணிச்சலுடன் முன்னெடுத்துவருகின்றார்கள்.

மிருசுவில் படுகொலையாளி காப்பாற்றப்பட்டமை, வசந்த கரன்ன கொட பாதுகாக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் அதற்கு உதாரணமாகக் காணப்படுகின்றன.

ஆனால் தமிழ் அரசியல்கைதிகள் நீண்ட காலங்களாக விசாரணையின்றி சிறையிலே வாடுகிறார்கள். அவர்கள் செய்த குற்றமாக விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உணவு வழங்கியதும் மற்றும் போராளிகளுடன் தொடர்பில் இருந்தமை போன்றவற்றை காரணம்காட்டி பலவருடங்களாகத் தடுத்து வைத்துள்ளார்கள்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காணப்படுகிறது, தமிழ் மக்களின் மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

இரவோடு இரவாக எமது மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

எமது பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதற்காகவே புது சட்டங்களும் கொள்கைகளும் அமுலுக்கு வருகின்றன. மக்களுக்கு அனுபவங்கள் மூலமாக ஏற்படும் உயிர்ப்பயம் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மௌனிக்கச்செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மனநிலையை பாதிக்கும் வகையில் எம்மீது இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தொடர்கின்றது.

பின்தொடர்தல், தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தல், ஒளிப்பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகள் எமது உறவுகளை அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளன. போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

இப் போராட்டத்திற்கு முன்னிலை வகிப்பவரின் குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற விசாரணைகளுக்குள்ளாகும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.

எமது நீதிக்கான இந்த போராட்டத்தை நிறுத்தும் நோக்கில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதுடன் எம்மில் பலரை வயதாகிய தாய்மார், தனியாக குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்கள் என்றுகூடப்பாராமல், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உழைச்சலை ஏற்படுத்துவதுடன் நீதியை அடைந்துகொள்வதை நோக்கிய எமது பயணத்திற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவே நாம் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எம்மில் 75 சதவீதமானவர்கள் வயது முதிந்தவர்களாவர். அவர்கள் இந்த வயோதிப காலத்திலும் நீதியை தேடி வீதியில் இறங்கிப்போராடுகிறாரகள்.

நாம் மன அழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் 112 பெற்றோர்களை இழந்து விட்டோம், எஞ்சியிருப்பவர்களும் இறப்பதற்கு முன்னர் எமக்கு நீதி கிடைக்கவேண்டும்.

தங்களின் கடந்த வருட அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கான பரிந்துரையை முன்வைத்திருந்தீர்கள்.

அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவுதற்கு அவசியமான நடவடிக்கைகளை நீங்களும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆரம்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments