யேர்மனியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! பாடல் வெளியீடு!

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த 

“உலகின் செவிகள் நம்பக்கம்-நீ

உரிமை கேட்டுப் பறை கொட்டு”

என்ற பாடல் இன்று லண்டோ நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லனட் மாநில கலைப்பிரிவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

லண்டோ தமிழாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை லண்டோ தமிழாலய நிர்வாகி திரு.கந்தசாமி குலேந்திரராசா அவர்கள் தொகுத்து வழங்க மதுரக் குரலோன் திரு.கண்ணன் அவர்கள் பாடலை அரங்கில் பாடிக் காண்பித்து திருமதி.சோபா கண்ணன் அவர்களுடன் இணைந்து வெளியிட லண்டோ தமிழாலயத்தின் கலைப் பிரிவுப்பொறுப்பாளர் திருமதி.சாந்தினி குலேந்திரராசா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் லண்டோ பிரதேச செயற்பாட்டுப் பிரதிநிதி திரு.சபாபதி விமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தொடர்ந்து பாடலாசிரியர் திரு.அப்பையா தேவதாஸ் அவர்களின் உரை இடம்பெற்றது.

அத்தோடு தமிழ்க் கல்விக்கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் பாடலையும் சிறப்பித்து மக்களின் வரலாற்றுக் கடமைகளையும் தெளிவு படுத்தி உரையாற்றினார்.

பாடல் உருவாக்கத்திற்கு ஒருங்கிணைப்பு நல்கிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டுப் பிரதிநிதி திரு.பூபால் அவர்கள் கலைஞர்களை வாழ்த்திப் பாராட்டினார்.

மிகுந்த ஆர்வத்தோடு நிகழ்வுகளை கண்டு கழித்த மக்கள் இறுதியாக “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” எனும் தாரகை மந்திரத்தைக் கூற நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.


No comments