அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடி!! வடக்கு மீனவர்கள் பாதிப்பு - சுமந்திரன்


இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பரப்பில் அத்துமீறிய வகையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இலங்கை பொது மீனவர் சம்மேளத்தினர் இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டு ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்றனர்.

இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டதாவது,

இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் குறிப்பாக வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய வகையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதால் வடக்கு மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

இந்திய மீனவர்கள் அத்துமீறிய வகையில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதை தடுக்கும் வகையில் 2007ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 

இச்சட்டத்தை செயற்படுத்தி இலங்கை கடற்பரப்பில் ட்ரோலர் படகு பயன்பாட்டை தடுக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையினையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையில் வடக்கு மீனவர்கள் கடந்த காலங்களில் பாரிய போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள்.

சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தலைநகரில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையின் பாரதூர தன்மையை விளங்கி அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

இந்திய ட்ரோலர் படகு பாவனையினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இலங்கை மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்,இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை தடை செய் என பதாதைகளை ஏந்தியவாறு மீனவ சமூகத்தினர் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்றனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு ஒன்றியம், தேசிய மீனவ தொழிற்சங்கம், அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவ சமூக சங்கத்தினர் இப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

No comments