கஜேந்திரன் புதிய பேச்சாளரா? சுரேஷ் கேள்வி!

இறுதி வரை தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ தாயகத்திற்காகவே போராடினார்கள். அதற்காகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் உயிர்களை ஆகுதியாக்கினார்கள்.

அத்தகைய தியாகங்களை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக, பேச்சாளராக செல்வராசா கஜேந்திரனை யார் நியமித்துள்ளார்கள் என்பதை புலம்பெயர் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள முன்னாள் போராளிகள் தெளிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுதலைப்புலிகளது பேச்சாளராகவோ அல்லது ஏதாவது பிரிவுகளிலோ செல்வராஜா கஜேந்திரன் இருந்திருந்தாராவென்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதே போல தமிழீழ கோரிக்கையினை கைவிடுவது பற்றி விடுதலைப்புலிகள் தலைமை அவரிடம் தனிப்பட்டதாக ஏதாவது கூறியிருந்ததா என்பது பற்றியும் நானறியேன்.

ஆனாலும் பேசாத விடயங்களை பேசியதாக செல்வராசா கஜேந்திரன் அறிக்கை விடுவது போன்ற அரசியல் பித்தலாட்டங்களை அவர் செய்யாதிருப்பது நல்லது.

இறுதிவரை தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக நின்ற போராடியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்கள் மட்டுமல்ல ஏனைய அமைப்புக்களான ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ,தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமென அனைத்து தரப்பும் தமிழீழத்திற்காகவே போராடினார்கள். கால ஒட்டத்தில் அவர்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டனர்.

புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் கூட மிகக்கவனமாகவே அதனை ராஜதந்திரமாகவே கையாண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் அண்மையில் கஜேந்திரன் விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காகவோ, தனிநாட்டிற்காகவோ போராடவில்லை என்று விவாதத்தின் போது தெரிவித்திருந்தார். ஆனால் நான் புலிகளின் கொள்கை தமீழீழம் என்றபோதும் இல்லை என மறுத்திருந்தார். பின்னர் பேச்சுவார்த்தையில் அதனை கைவிட்டே சென்றதாக தன்னை நியாயப்படுத்தியிருந்தார்.

பின்னர் ஊடகங்களிற்கு விடுத்துள்ள மறுப்பு அறிக்கையிலும் அதனையே மீள வலியுறுத்தியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது கஜேந்திரன் போன்றவர்களே. ஆனாலும் குறித்த தொலைக்காட்சி நிகழ்வில் பார்வையாளர்களாக பங்கெடுத்தவர்களது கேள்விகளால் குழப்பமுற்ற மனநிலையில் இதனை தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.

தனது மறுப்பறிக்கையில் கூட மீண்டும் புலிகள் தனிநாட்டு கோரிக்கைக்காக போராடினாலும் இலங்கை அரசு பொருத்தமான தீர்வொன்றை முன்வைத்தால் பரிசீலிக்க தயாராக இருந்ததாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக, பேச்சாளராக செல்வராசா கஜேந்திரனை யார் நியமித்துள்ளார்கள் என்பதை புலம்பெயர் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள முன்னாள் போராளிகள் தெளிவுபடுத்த வேண்டுமென சுரேஷ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 


No comments