13க்கு அப்பால்.... அப்பால்.... தாமதப்படும் மோடி சந்திப்பும் இழுபடும் கடித கையளிப்பும் - பனங்காட்டான்

வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கைச் சட்டத்தின் துணை கொண்டு பிரிக்கப்பட்டு விட்டது. முதலில் கிழக்கு மாகாணத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. அது கடந்து பல ஆண்டுகளின் பின்னர் வடமாகாண தேர்தல் நடத்தப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறப்பட்ட காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லையென்றாகி விட்டது. இவைகளெல்லாம் இடம்பெற்றபோது வாய் மூடி மௌனித்து நின்ற இலங்கை இந்திய ஒப்பந்தப் பங்காளரான இந்தியா இனி ஏதாவது செய்யுமென நம்ப இடமுண்டா?

கடந்துபோன ஆண்டு விட்டுச் சென்ற அரசியல் முறுகல்கள், ஸ்திரமற்ற தன்மைகள், உறவுகள் முறிவுகள் என்பவை பிறந்திருக்கும் புத்தாண்டிலும் கொரோனாவிலும் பார்க்க வீரியம் மிக்கதாக அமையப்போவதை காணக்கூடியதாகவுள்ளது. 

இவ்விடயத்தில் சிங்கள தேசத்துக்கும் தமிழர் தாயகத்துக்குமிடையில் பெரும் வித்தியாசம் தெரியவில்லை. ராணுவ ஆட்சியில் அரைத்தூரத்தைத் தாண்டியுள்ள கோதபாய அரச இயந்திரம் உள்வீட்டு முரண்களை குசினிக்குள் தீர்க்க முடியாத நிலையில் தன்னைத்தானே சந்திக்குக் கொண்டுவந்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக மூத்த அரசியல்வாதி ஒருவரை கழுத்தில் பிடித்து வெளியே தள்ளியுள்ளது. ராஜாங்க அமைச்சராகவிருந்த சுசில் பிரேமஜெயந்த, சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளராகவும் சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அமைச்சரவைகளில் முக்கியமான ஐந்து வெவ்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்த ஒரு வழக்கறிஞர். 

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சித்தவர் என்ற காரணம் கூறி இவரை கோதபாய தமக்குரிய நிறைவேற்று அதிகார வழியாக பதவி நீக்கம் செய்தார். அடுத்து அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்படக்கூடும். 

பதவி பறிப்புக்கு பதில் அளித்துள்ள சுசில், தாம் ஜனாதிபதி பதவியை விமரச்சிக்கவில்லை என்றும் ஜனாதிபதியையே விமர்சித்ததாகவும் கூறி - அவர்தான் பிரச்சனைக்குரியவர் என்று விளக்கமாக விபரித்துள்ளார். தமது பதவி நீக்கம் எதிர்கால அரசியலுக்கான ஆசீர்வாதம் என்று அவர் கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. 

இதன் எதிரொலியாக, இவரை சில எதிரணிகள் தங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்க ஆரம்பித்துள்ளன. இவர் இன்னொரு மகிந்தாவாக மாறுவாரா அல்லது மைத்திரியாகிப் போவாரா என்பதை அறிய அடு;த்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டும். 

அமைச்சர்களாக இருந்து கொண்டு அரசாங்கத்தைத் தினந்தினம் விமர்சித்து வரும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் மீது கை வைக்க ஏதோ காரணத்தால் பின்னடிக்கும் கோதபாய, இவர்களுக்கான எச்சரிக்கைக் குறியீடாகவே சுசில் மீது கை வைத்ததாக சொல்லப்படுகிறது. 

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறுபவர்களை வெளியேற்றுவேன் என்று அடிக்கடி கூறி வரும் கோதபாய, இந்த மூன்று அமைச்சர்கள் மீதும் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை வெளியேற்றுங்கள் என்று மூன்று அமைச்சர்களும் கோரஸ் போடுகின்றனர். நீங்கள் வெளியேறிப் போகலாமென்று கோதபாய அணியினர் நாளொரு வண்ணம் கூக்குரல் இடுகின்றனர். இவர்களை வெளியேற்றினால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாகிவிடுமென்ற அச்சமே கோதபாய நடவடிக்கைக்கு தாமதம். தாமாக வெளியேறினால் தங்களின் வருங்கால அரசியல் பாழாகிவிடுமென்று மூன்று அமைச்சர்களும் அஞ்சுகின்றனர். 

இதற்கிடையில், மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை கௌரவமாக அரசிலிருந்து வெளியேறுங்கள் என்று தொடர்ச்சியாக வந்த குரல்களில் இறுதியாக நாமல் ராஜபக்சவும் இணைந்துள்ளார். நிலைமை இவ்வாறு தொடருமானால் பல அரசியல் சடுகுடு விளையாட்டுகளை தெற்கில் விரைவில் பார்க்க முடியும். தமது இருப்பையே நிரந்தரமாக்க முடியாது தத்தளிக்கும் மகிந்தவினால் இவ்விடத்தில் எவரையும் சமாளித்து காலத்தை இழுக்க முடியாது. 

கடனில் மூழ்கித் தத்தளிக்கும் இலங்கையின் மீட்பராக சீனா தொடர்ந்து தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாமியார் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் மருமகன்போல சீன அமைச்சர்கள் கொழும்புக்குச் செல்கிறார்கள். இவர்களுக்கு சீனாவில் வேறு வேலை இல்லையா என்றும் ஓர் அரசியல்வாதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது போதாதென்று, கொழும்பிலிருக்கும் சீனத் தூதுவர் தமது செயற்பாடுகளிலும் கருத்துத் தெரிவிப்புகளிலும் இநதியாவுக்குக் கடுப்பேற்றி வருகிறார். யாழ்ப்பாணத்தில் நின்றபோது இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரமென்று வினவியதும், மன்னாருக்குச் சென்று ராமர் பாலத்தின் நிலத்தூண்களை எண்ணிப் பார்த்ததும் வேடிக்கையான அல்லது தற்செயலான விடயங்கள் அல்ல. 

யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கேயுள்ள நகரமேயன்றி, எந்த நாட்டினதும் தெற்கேயுள்ள நகரமல்ல என்று சீனத் தூதுவர் கொழும்பில் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்துள்ள கருத்து இந்தியாவுடன் நேரடியாகச் சீண்டுவது. யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல - தங்களுக்கும்தான் சொந்தமானது என்று கூறாமல் கூறுவதாக அமைந்துள்ளது சீனத்தூதுவரின் கருத்து. 

இவ்வாறான அரசியல் பின்னல்கள் வலை விரித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஏழு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கையொப்பமிட்ட கடித விவகாரமே கடந்த சில வாரங்களாக முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஊடகங்களுக்கும் இப்போதைக்கு நல்ல தீனியாக இது அமைந்துள்ளது. 

கடந்த பல வாரங்களாக நீண்டு இழுபட்டு, பல கூட்டங்கள் நடத்தி, இரகசிய சந்திப்புகளை ஏற்படுத்தி இழுபறிப்பட்ட இந்தியாவுக்கான கடித விபரம் ஓரளவுக்கு நன்கறியப்பட்டதாகி விட்டது. இதன் பின்னாலான சில நிகழ்வுகளை மட்டும் இங்கு பார்க்கலாம். 

இந்தியாவில் விருப்பத்தின் பேரில் தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கு அத்திவாரக்கல் போட்டவர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. ஒருவாறு ஒரு கூட்டத்தை நடத்தினார். ஆனால், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் எதிர்ப்பினால் அது இடைநடுவில் கைவிடப்பட்டது. 

பின்னர் ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கைகளுக்கு இது ஒப்படைக்கப்பட்டது. யாரால் ஒப்படைக்கப்பட்டது என்பது பரம ரகசியமல்ல. ரெலோ பேச்சாளர் குருசாமி சுரேந்திரனே இக்கடித வரைபாளராக அடைக்கலநாதனால் நியமிக்கப்பட்டார். (கூட்டமைப்புக்கு ஒரு சுமந்திரன் போன்று ரெலோவுக்கு சுரேந்திரன் ஆளுமை மிக்கவராக இப்பொழுது வளர்க்கப்பட்டுள்ளார்). 

இதன் பின்னரே அடுத்த நகர்வு ஆரம்பமானது. தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனையும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் தமிழ்க் கட்சிகளின் கூட்டுக்குள் தந்திரோபாயமாக உட்புகுத்தியதும் அதே அயல் தரப்புத்தான். தமிழ்க் கட்சிகளின் கூட்டை ஆதரிக்காது, அதனைப் புறந்தள்ளிச் செல்லும் சம்பந்தனை இதற்குள் இழுத்து வர வைக்கப்பட்ட பொறியாக இது மேற்கொள்ளப்பட்டது. 

இவர்களின் அழைப்பை ஏற்று சம்பந்தன் உள்ளே வர, அவரின் பின்னால் சுமந்திரனும் சென்றார். கடித வரைபுகள் பல மாறி மாறி உருமாறின. எதிர்பார்க்கப்பட்டவாறு மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் கடிதத்தில் ஒப்பமிட முடியாத நிலை வந்தது. அவர்கள் நிலைப்பாட்டில் முடிவு சரியானது. 

சுமந்திரன் வீட்டில் செப்பனிடப்பட்ட இறுதி வரைபை தமிழரசின் மத்திய குழு நிராகரித்துவிட்டது. இதற்கு முன்னைய வரைபையே இந்திப் பிரதமர் மோடிக்கு அனுப்ப முடிவானது. இதில் உடனடியாக ஒப்பமிட மாவை சேனாதிராஜா தயாராக இருக்கவில்லை. 

எதிர்காலத்தில் எப்போதாவது மாவை சேனாதிராஜா எடுத்த நடவடிக்கையால்தான் இப்படி நடந்தது என்று தம்மீது எவரும் குற்றம் சாட்டாது தப்பவே சம்பந்தன் ஒப்பமிட்ட பின்னர் ஒப்பமிடுவதென மாவையர் தீர்மானித்தார். அப்படியே ஒப்பமும் இட்டார். ஆக, கடிதத்தில் ஒப்பமிட்ட ஏழு தலைவர்களில் மாவையரே கடைசி. ஆனால், இவ்வாறான ஒரு செயற்பாட்டை ஆரம்பித்த முதலாமவர் மாவையரே என்பதை தமிழ்த் தேசிய வரலாறு பதிவிலிடும். 

பதின்மூன்றாம் திருத்தம் என்றும், பதின்மூன்றுக்கு அப்பால் என்றும், அதற்கும் அப்பால் என்றும், புதிய அரசியல் அமைப்பில் நிரந்தரத் தீர்வென்றும் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போன சொல்லாடல்கள் எழுத்து வடிவில் ஒப்பத்தோடு கடிதமாகியுள்ளது. தமிழ்த் தலைமைகள் (கஜேந்திரகுமார் அணி தவிர) நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒன்றுபட்ட ஒரு நிகழ்வு என்ற வகையில் இது வரவேற்கப்படலாம். தமிழர் தரப்பு ஒற்றுமையாக வந்தால் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாமென கடந்த வருட பிற்பகுதியில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிங் கூட்டமைப்பிடம் சொன்னதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி பலராலும் வரவேற்கப்படுகிறது. 

கடந்த காலத்தில், தமிழர் தரப்புகள் சில எடுத்த இவ்வாறான முயற்சியை ஏதோ காரணத்தால் இழுத்தடித்து வந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் ஏற்க முடியாத காரணங்கள் கூறி பின்தள்ளினார். தமது கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டதென்றும், மாவையின் குடும்பத் திருமணம் என்றும் குறிப்பிட்ட திகதியை மாற்றித் தருமாறு விடுத்த அவரது வேண்டுகோளுக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. 

இப்போது ஏழு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒப்பமிட்ட கடிதமும் அவ்வாறே இழுபடுகிறது. இந்த மாதம் பதினோராம் திகதி செவ்வாய்க்கிழமை இக்கடிதம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இது நடைபெறவில்லை. 

அன்றைய தினம் அட்டமி நாளென்றும், சகுனம் சரியில்லை என்றும் சம்பந்தன் கூறியதால் கையளிப்பு தாமதமானதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை அதன் பன்னிரண்டாம் திகதிய முதற் பக்கத் தலைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது. மறுநாள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அவசர அழைப்பின் பேரில் புதுடில்லி சென்றுவிட்டார். ஏழு கட்சிகள் ஒப்பமிட்ட கடிதம் இன்னும் கையளிக்கப்படவில்லை. பதினெட்டாம் திகதி இந்தியத் தூதுவர் கொழும்பு திரும்பிய பின்னர் கையளிக்கப்படலாமெனச் சொல்லப்படுகிறது. 

தூதுவர் கோபால் பாக்லேயும் கடிதத்தைப் பெறுவதற்கு சம்பந்தன்போல நாளும் கோளும் பார்ப்பாரானால், கடிதக் கையளிப்பு கூட்டமைப்பினர் மோடியைச் சந்திப்பது போன்று இழுபறியாகினாலும் ஆச்சரியப்பட முடியாது. இதற்கிடையில் பதின்மூன்றாம் திருத்தத்தின் பாதக நிலைமையை விளக்கி தமிழர் தாயகம் முழுவதும் தொடர் பரப்புரைகளை மேற்கொள்ள கஜேந்திரகுமார் அணி அறிவிப்புக் கொடுத்துள்ளது. 

உண்மையைச் சொல்வதானால் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபை அமைப்பு கழுதை தேய்ந்த கதையாகி விட்டது. கடந்த 34 ஆண்டுகளில் இதனைத் திரும்பியே பார்க்காத இந்தியா, இதுவரை கையளிக்கப்படாத கடிதத்துக்காக ஏதாவது செய்யுமா?

வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கைச் சட்டத்தின் துணை கொண்டு பிரிக்கப்பட்டு விட்டது. முதலில் கிழக்கு மாகாணத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. அது கடந்து பல ஆண்டுகளின் பின்னர் வடமாகாண தேர்தல் நடத்தப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறப்பட்ட காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லையென்றாகி விட்டது. இவைகளெல்லாம் இடம்பெற்றபோது வாய் மூடி மௌனித்து நின்ற இலங்கை இந்திய ஒப்பந்தப் பங்காளரான இந்தியா இனி ஏதாவது செய்யுமென நம்ப இடமுண்டா?  

No comments