தமிழ் மீனவர்களை காணோம்:இந்திய மீனவர்கள் மீது குற்றச்சாட்டு!

 




யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். இந்திய இழுவைப் படகினால் மோதி கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் வியாழன் (27) வழக்கம் போன்று மீன்பிடித் தொழில் நிமித்த சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே-429 பிரிவுக்குட்பட்ட வத்திராயன் கிராமத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிறேம்குமார் என்பவரும் அவருடைய சகோதரியின் மகனான தணிகைமாறனுடன் (வயது-21) கடலுக்குச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை.

இதையடுத்து குறித்த பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்று தேடிய போது அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய மீன்பிடி வலைகள் துண்டு துண்டாக அறுந்த நிலையில் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கிராம மீனவர்கள், உதயசூரியன் விளையாட்டுக் கழக நண்பர்கள் இரவு - பகல் பாராது தொடர்ச்சியாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் குறித்த இரு மீனவர்களையும், அவர்கள் சென்ற மீன்பிடிப் படகு குறித்தும் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

குறித்த தினத்தில் இந்திய இழுவைப் படகுகள் பெரும் எண்ணிக்கையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை தாம் அவதானித்திருந்ததாகவும், அவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய இழுவைப்படகு மோதியே குறித்த படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் காணாமல் போயிருக்கலாம் எனவும் அபிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்திய இழுவைப் படகுகளினால் துண்டாடப்பட்ட நிலையில் வலைகள் மீட்கப்பட்ட நிலையில் மேற்குறித்த குற்றச்சாட்டை பிரதேச மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

No comments