முன்னணி பிரச்சாரம் உச்சத்தில்!13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த முற்பட்டுள்ள அரசியல் தரப்புக்களிற்கு எதிராக முன்னணி தனது பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை அழைப்புவிடுக்கப்பட்டுள்ள பேரணிக்கு ஆட்திரட்டலை முன்னணி முடுக்கிவிட்டுள்ளது.

இதனிடையே திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ் மக்களையும் தமிழ் கட்சிகளையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாங்கள் சர்வதேச ரீதியான ஆதரவை பெற்றால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான நியாயமான, நீடித்து நிற்க கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் பிளவு பட்டிருந்தால் எமக்கான தீர்வு எட்டாக்கனியாகவே அமைவதுடன் வாழ்நாள் முழுவதும் போராடும் நிலையே ஏற்படும்.

நாங்கள் பிளவுபட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே இருக்கிறது.

தற்போதைய சூழலில் சாத்தியமான யதார்த்தபூர்வமான தமிழ் மக்களின் தற்போதைய தேவையை நிலை நிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனைத்துக்கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு விடயத்தை அனுப்புயிருக்கின்றோம்.

அதனை குழப்புவதற்காக ஏதோ ஒரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதை நாம் பார்க்கின்றோம். அதற்கு கூட்டமைப்பில் இருக்கின்ற, ஒற்றுமைப்பட்ட இந்தகட்சிகளில் இருக்கின்ற ஒரு பிரிவினரும் மறைமுகமாக ஆதரவு வழங்கும் நிலை இருக்கிறது.

குறிப்பாக தமிழரசுக்கட்சியில் இருக்கின்ற ஒருபகுதியினர் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றனர். எதற்காக, அங்கே ஒருமுகம்! இங்கே ஒருமுகம்! சம்பந்தன் ஐயா மாவைசேனாதிராஜா ஆகியோர் குறித்த வரைபில் கையொப்பம் இட்டே உள்ளனர். அதற்கு எதிராக அதேகட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் முண்னணியின் நிலைப்பாட்டினை ஒத்து இப்படியான விந்தையான நடவடிக்கையில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடியும். இது தான் தமிழ்மக்களின் சாபக்கேடு.

நாம் எப்போதுதான் ஒன்றுபடப்போகின்றோம். ஆயினும் மிகப்பெரிய பலமான ஒரு கூட்டை உருவாக்குவதற்கான முயற்சியினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அந்த ஒற்றுமை முயற்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் தடைகள் வருகின்றன. அவற்றை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஒற்றுமையை குழப்பி இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற முயற்சிகளை ஆரம்பத்திலேயே எடுத்தார்கள். ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து முதலாவது முயற்சியில் நாங்கள் வெற்றிகண்டிருக்கின்றோம். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து எமது மக்களின் உண்மையான விடுதலைக்காக உழைப்போம் எனவும் தெரித்துள்ளார்.
No comments