மின்துண்டிப்பை எதிர்கொள்ள திணறும் இலங்கை!
பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் கையிருப்புக்கேற்ப டீசல் மற்றும் உலை எண்ணெய் மின்சார சபைக்கு விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் தொகை, மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து பெறவுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதாக அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார்.எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு 93 பில்லியன்(9300 கோடி) ரூபாயை இலங்கை மின்சார சபைக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திறைசேரிக்கு உத்தரவிட்டுள்ளார்.


மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என மின்சக்தி அமைச்சுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததுடன், பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நிதியை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு பணிப்புரை விடுத்ததாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று (24) இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார்.

No comments