அடுத்த ஆண்டில் நாடாளுமன்றை கலைக்கிறார் கோத்தா!

இலங்கை 20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஓராண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 மார்ச் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் பொதுஜன முன்னணியிடம் இருக்கும் போதே தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடாத்தப்படாது எனவும் 2024ம் ஆண்டில் நடாத்தப்படும் எனவும் அரசாங்கத் தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments