உடலம் ஒதுங்கியது:டக்ளஸிற்கு எதிராகவும் போராட்டம்!இந்திய இழுவைப்படகுகளால் உள்ளுர் மீனவர்களது வலைகள் மீண்டும் இன்று அறுத்தெறியப்பட்டதையடுத்து வீதி மறித்து போராட்டத்தில் பருத்தித்துறை மீனவர்கள் குதித்துள்ளனர். 

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பருத்தித்துறை –தொண்டமனாறு பிரதான வீதி வழிமறித்து இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமும் கடற்தொழில் அமைச்சருக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறித்த வீதி ஊடான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதை ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கடுமையான கோசங்கள் போராட்டகாரர்களால் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த இரவும் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளால் அறுத்து நாசமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை சுப்பமர்மடம் மீனவர்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் ஊடாக இந்திய மீனவர்கள் 55 பேரும் விடுதலையான பின்னர் வடக்கு கடலில் அத்துமீறும் இந்திய மீனவர்களின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அதேவேளை, கடற்கரைக்கு மிக நெருக்கமாக வரும் இந்திய இழுவைப்படகுகள் யாழ்ப்பாண மீனவர்களால் கடலில் விரிக்கப்பட்டிருக்கும் வலைகளை இலக்கு வைத்து அறுப்பதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்ல தெரிவிக்கின்றனர்.

போருக்குள் அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பப்பாடுபடும் யாழ்ப்பாண மீனவர்களின் பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது பருத்தித்துறை - சுப்பர்மடம் பிரதான வீதியில் இந்தியப் படகுகளால் அறுக்கப்பட்ட மீன்பிடி வலைகளை வீதியில் போட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே வத்திராயனில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை சென்றிருந்தார்.குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  இந்தியத் தரப்பினருடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளாhர.

இந்நிலையில் மதிய வேளை காணாமல்  போன மீனவர் ஒருவரது உடலம் கரை ஒதுங்கியுள்ளது. 


No comments