புலிகள் இருந்தால் கிட்ட வரமுடியாது!



முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட புலிகளது ஆட்சிக்காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார். 

இறுதி யுத்தத்திற்கு முன்னைய காலகட்டங்களில் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் என்றுமே நிகழ்ந்ததில்லை.

அத்துடன் முல்லை மாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளை கண்ணுற்றதுமில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக முல்லைத்தீவு மீனவர்கள் அவர்களின் கடற்பரப்பில் தமது மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இவ்வகையில் கடற்றொழிலில் ஏனைய தரப்பினரின் குறுக்கீடு இல்லாததினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தமது மீன்பிடி மூலமாக பொருளாதார ரீதியில் மிகவும் உயர்வான நிலையில் இருந்தனர்.

எனினும் இறுதி யுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் திங்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலேயே இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்டது.

எனினும் அண்மைக்காலங்களில் கால நேரம்; எதுவுமின்றி முல்லைத்தீவு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் நுழைந்து அதனை முற்றாக துவம்சம் செய்கின்றது. இந்த நிலையில் இந்திய மீனவர்கள் வருகை தராத நாட்களிலேயே முல்லைத்தீவு மீனவர்கள் கடற்றொழில் ஈடுபட முடிகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்தூமீறலை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சரோ, அல்லது தமிழ் அரசியல்வாதிகளோ இதுவரை காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை; என தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரகாஸ் மேலும் தெரிவித்தார்.


No comments