முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை  முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை  12 வருடங்களாக தமது உறவுகளை தேடி போராடிவருகின்ற நிலையில் கடந்த 2017  ஆம் ஆண்டு மார்ச் மாதம்  எட்டாம் திகதி முதல் வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இன்று 1737 ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளையும்  யுத்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு   காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் என  பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை கோரியே இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


பல ஆண்டுகளாக போராடிவரும் மக்கள் உள்நாட்டில் தமக்கு எந்த தீர்வையும் தராது எனவும் சர்வதேசமே தமக்கான தீர்வை தர வேண்டும் எனவும் தமது உறவுகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட் உறவினர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் அலுவலகத்தில்  ஆரம்பித்த குறித்த போராட்டம் முல்லைத்தீவு நகர் சுற்றுவட்ட பகுதிவரை சென்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  எங்கே எங்கே உறவுகள் எங்கே ,வேண்டும் வேண்டும் நீதிவேண்டும்  சர்வதேசமே பதில் சொல் ,மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாம் . உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்படட பதாதைகளை தங்கியவாறும் சர்வதேசத்தின் தீர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் ,இராணுவத்தினர் போராட்டம் மேற்கொண்டவர்களை கண்காணிக்கும் புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

No comments