திட்டத்தை அமுல்படுத்துங்கள்! மாற்றுத் திறனாளிகள் போராட்டம்


சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 2014 ஆம் ஆண்டு  அரசாங்கம், தயாரித்த தேசிய செயல் திட்டத்தை அமுல்படுத்துமாறு வழியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  இன்று (03) ம்  இடம் பெற்றது.

வெக்கோ மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை 3 ஆம் கட்டை சந்தியில் இடம் பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப் பிரிவுகளான பட்டணமும் சூழலும் திருகோணமலை , குச்சவெளி, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய இடங்களில்  ஒரே நேரத்தில் காலை 9.30 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பித்து நடைபெற்றது.


 “மாற்றுத் திறனாளிகளின் தொழில் உரிமையை பாதுகாப்போம்”, “மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவோம்” 3 சதவீத அரச தொழில் வாய்ப்பை உறுதிசெய்வோம்”, “அரசே! மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டையை வழங்கு”, “பொது கட்டிடங்களுக்கான அனுகும் வசதிகளை ஏற்படுத்துங்கள்”, “சைகை மொழி தெரிந்த அலுவலர்களை சேவைக்கு அமர்த்துங்கள்”, “மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்துங்கள்”, “மாற்றுத் திறனுடைய மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

No comments